கட்டுரைகள்
Published:Updated:

விளையாட்டைச் சிதைக்கும் வக்கிர வில்லன்கள்... வீதிக்கு வந்த தங்கல் வீராங்கனைகள்!

தங்கல் வீராங்கனைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கல் வீராங்கனைகள்

நெஞ்சம் மறப்பதில்லை-13

`காவல்துறையினர் மது அருந்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபடும் பெண்களிடம் அத்துமீறுகின்றனர். எங்களைக் கொன்றுவிட வேண்டும் என்றால் கொன்றுவிடுங்கள். நாங்கள் குற்றவாளிகள் அல்லர். இந்த நாட்டுக்காக நாங்கள் பதக்கங்களை வென்றது இதற்குத்தானா?' டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான வினேஷ் போகத்தின் வேதனை வார்த்தைகள் இவை.

மூன்று மாதத்திற்கு முன்பாக இந்தியாவின் பிரபலமான மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் இணைந்து டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இறங்கினர். இந்திய மல்யுத்த சம்மேளத்தின் தலைவர் மற்றும் பா.ஜ.க எம்.பி-யான பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் மீது பல வீராங்கனைகளும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நியாயம் கேட்டுதான் வீதியில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து பிரிஜ் பூஷண் சரண் சிங்கை தற்காலிகமாக தலைவர் பதவியிலிருந்து விலக வைத்தனர். புகார்களை விசாரிக்க தனியாக ஒரு கமிட்டியையும் அமைத்தனர். அடுத்தடுத்த விரைவான நடவடிக்கைகளால் அந்தப் போராட்டமும் முடிவுக்கு வந்தது.

மூன்று மாதங்களைக் கடந்து இப்போது வரை நீதி கிடைக்காத சூழலில் மீண்டும் ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர் வீராங்கனைகள். கடந்த முறையைவிட இந்தமுறை போராட்டத்திற்கு தேசிய கவனமும் அதிகமாகக் கிடைத்திருக்கிறது. இந்தியா முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பத் தொடங்கியிருக்கின்றன. போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்னும் உறுதியாக நிற்கத் தொடங்கவே, தன்பாணியில் இந்தப் போராட்டத்தைக் கலைக்கும் வேலையில் ஈடுபட்டுவருகிறது, காவல்துறை. தாங்கள் பெற்ற பதக்கங்களைத் திருப்பித் தரப்போவதாக அறிவித்துள்ளனர், போராட்டக்களத்திலிருக்கும் வீரர்கள் சிலர்.

தங்கல் வீராங்கனைகள்
தங்கல் வீராங்கனைகள்

போராட்டத்தின் வீரியத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், போராட்டக்களத்தில் முன் வரிசையில் நிற்கும் வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோரின் கதைகளை அறிந்தே ஆகவேண்டும்.

இந்தியாவில் பிரபலமான மல்யுத்த குடும்பம் மகாவீர் போகத் குடும்பம். மகாவீர் போகத்தின் மகள்களான கீதா போகத் மற்றும் பபிதா போகத் இருவரும் தங்களின் வறுமையிலும் வாய்ப்புகளற்ற சூழலிலும் போராடி, மல்யுத்தத்தில் தந்தையின் லட்சியத்தை நிறைவேற்றியவர்கள். ஆமிர்கான் நடிப்பில் உருவான `தங்கல்' திரைப்படம், மல்யுத்தம் தொடர்பான படமே! அதில் இந்த மகாவீர் போகத் குடும்பத்தைத்தான் மையப்படுத்தியிருப்பார்கள்.

மகாவீர் போகத் தம்பியான ராஜ்பால் போகத்தின் மகள்தான், தற்போது டெல்லி போராட்டக்களத்தில் முன்வரிசையில் நிற்கும் வினேஷ் போகத். வினேஷுக்கும் மகாவீர் போகத்தான் மல்யுத்தப் பயிற்சிகளை வழங்கினார். ஒலிம்பிக்ஸ் வரை முன்னேறி ஆடியிருக்கும் வினேஷ் போகத், ஒலிம்பிக்ஸ் பதக்கத்தைத் தவிர மற்ற எல்லாத் தொடரிலும் பதக்கத்தை வென்றிருக்கிறார். 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம், ஆசியப்போட்டியில் தங்கம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம் என செல்லும் இடமெல்லாம் பதக்க வேட்டையை நடத்தினர்.

தங்கல் வீராங்கனைகள்
தங்கல் வீராங்கனைகள்

2016 ரியோ ஒலிம்பிக்ஸில் காலிறுதி வரை சிறப்பாக ஆடித் தகுதிபெற்ற வினேஷ் போகத், காலிறுதியில் சீன வீராங்கனை சூன் யானுக்கு எதிராக ஆடிக்கொண்டிருந்தபோது, முட்டி மடங்கி துடிதுடிக்கக் களத்திலேயே சரிந்தார். பெரும் கனவோடு ரியோவிற்குச் சென்றவர், வீல் சேரில் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். காயத்திலிருந்து மீண்டு வருவாரா என சந்தேகக் கேள்விகள் எழுந்த சமயத்தில், மீண்டு வந்து மீண்டும் பழையபடி போட்டிகளிலும் பங்கேற்று, பதக்கங்களையும் குவித்து டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் காலடி எடுத்து வைத்தார்.

அந்த ரியோ ஒலிம்பிக்ஸில் வினேஷ் போகத்தின் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அவர்தான் இந்தியாவிற்காக மல்யுத்தத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்து பதக்கம் வெல்லப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இல்லாத சாக்ஷி மாலிக்கிடமிருந்துதான் அந்த ஒலிம்பிக்ஸில் பதக்கம் வந்தது. ஆசிய சாம்பியனான கிர்கிஸ்தான் வீராங்கனை ஒருவரை வீழ்த்தி, வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இந்தியா சார்பில் மல்யுத்தத்தில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை அவர்தான். அதை வென்றபோது மழலைபோல சாக்ஷி மாலிக் துள்ளிக்குதித்துச் சுற்றிச்சுற்றி நடனமாடிய வீடியோ, இப்போதுமே பல சமயங்களில் இணையத்தில் கலக்குகிறது.

விளையாட்டைச் சிதைக்கும் வக்கிர வில்லன்கள்... வீதிக்கு வந்த தங்கல் வீராங்கனைகள்!

பஜ்ரங் புனியா... 2014ஆம் ஆண்டில் அவர் ஆடிய ஆசிய சாம்பியன்ஷிப், ஆசியப் போட்டிகள், காமென்வெல்த் தொடர் என அத்தனை பெரிய தொடர்களிலும் வெளிப்பதக்கத்தை வென்றவர். பஜ்ரங் புனியாவின் பயிற்சியாளர், 2012 ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற யோகேஷ்வர் தத். 2016 ஒலிம்பிக்ஸோடு யோகேஷ்வர் தத் ஓய்வுபெறும் எண்ணத்தில் இருந்தார். அதே ஒலிம்பிக்ஸில் அதே எடைப் பிரிவில் போட்டியிடும் வாய்ப்பு பஜ்ரங் புனியாவுக்கும் இருந்தது. குருவின் கடைசிப் போட்டியில் தன்னால் எதுவும் அசௌகரியம் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக, 2016 ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்காமல் ஒதுங்கிக் கொண்டார் பஜ்ரங். ஒலிம்பிக்ஸ் என்பதுதான் ஒரு வீரனின் உச்சபட்ச கனவாக இருக்க முடியும். அதையே தன் குருவுக்காக விட்டுக்கொடுக்கும் தியாக உள்ளத்தைக் கொண்டவராகத்தான் பஜ்ரங் இருந்தார்.

அடுத்து, 2020-ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பஜ்ரங் களமிறங்கி, கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தையும் இந்தியாவிற்காக வென்று கொடுத்தார். இந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியா 7 பதக்கத்தை வென்றது. அதுவரை ஒரு ஒலிம்பிக்ஸ் போட்டியில் அதிகட்சமாக 6 பதக்கங்களைப் பெற்றிருந்த இந்தியா, பஜ்ரங்கின் பதக்கத்தையும் சேர்த்துப் புதிய உயரத்தைத் தொட்டது.

உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை உயர்த்திப் பிடித்த வினேஷ் போகத், சாக்சி மாலிக், பஜ்ரங் புனியா இந்தப் பொக்கிஷங்கள்தான், பாலியல் கொடுமைகளுக்கு எதிராக இப்போது தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான நியாயம் கிடைக்கவில்லையெனில் அது ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான தலைக்குனிவாகவே பார்க்கப்படும்.