Published:Updated:

‘அந்த 2 இன்ச் இடைவெளி.. தினமும் எனக்குள் எழும் கேள்வி!’- ரன் அவுட் குறித்து மனம் திறந்த தோனி

தோனி
தோனி

உலகக்கோப்பை தொடரில் ரன் அவுட்டானது தொடர்பாக தோனி தற்போது மனம் திறந்துள்ளார்.

உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் தோனி ரன் அவுட்டானது இந்திய ரசிகர்களுக்கு ஹார்ட் பிரேக்கிங் மொமண்ட். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்த போது ஏறக்குறைய இந்திய ரசிகர்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். இந்திய அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்தது தோனி என்ற பெயர் தான். ஜடேஜாவுடன் கைகோத்த தோனி நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பயத்தை காட்டிக்கொண்டிருந்தார். கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 31 ரன்கள் தேவை பெர்குசன் வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி தனது அதிரடியை காட்டத் தயாரானார். தோனியின் சிக்ஸரால் அரங்கமே அதிர்ந்தது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்டநேரம் நீடிக்கவில்லை.

தோனி
தோனி

பெர்குசன் வீசிய மூன்றாவது பந்தில் தோனி இரண்டு ரன்கள் எடுக்க முற்பட்டார். பந்தை எடுத்த கப்தில் ஸ்டெம்பை நோக்கி த்ரோ செய்தார். பைல்ஸ் பறந்தது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பு ஒரு நொடி நின்றது. டிவி ரீப்ளேவுக்காக அம்பயர்கள் காத்திருந்தனர். தோனியின் பேட் க்ரீஸ்-க்கு இரண்டு இன்ச் வெளியில் இருந்தது. மூன்றாவது நடுவர்கள் அவுட் வழங்க தோனி ஏமாற்றத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார். தோனியின் முகத்தில் அந்த விரக்தி தெரிந்தது.

உலகக்கோப்பை தொடருக்கு பின்பு தோனி இரண்டு மாத ஓய்வில் சென்றார். உலகக்கோப்பை தொடருக்கு பின்னால் தோனி இந்திய அணியில் விளையாடவில்லை. தோனியின் ஓய்வு குறித்து சில சர்ச்சைகள் எழுந்தாலும் அவரின் வருகைக்காக காத்திருக்கின்றனர் இந்திய ரசிகர்கள். அந்த ரன் அவுட் குறித்து தோனி இப்போது மனம் திறந்துள்ளார்.

தோனி ரன் அவுட்
தோனி ரன் அவுட்

இந்தியா டூடேவுக்கு அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய முதல் போட்டியில் ரன் அவுட் ஆனேன். அதேபோல் இந்தப்போட்டியிலும் ரன் அவுட்டானேன். நான் ஏன் டைவ் அடித்து ரீச் செய்திருக்கக் கூடாது என்ற கேள்வி நான் எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அந்த இரண்டு இன்ச் இடைவெளியை நான் டைவ் அடித்து ரீச் செய்திருக்க வேண்டும்” என தோனி கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு