Published:Updated:

ஆர்ச்சர் தந்த ஆச்சர்யங்கள்! 2019 உலகக்கோப்பை டிரெண்டிங் பிட்ஸ்!

10 நாடுகள், 48 போட்டிகள், 150 வீரர்கள் இத்தனையும் அந்த ஒற்றைக் கோப்பைக்காகத்தான். 2019 உலகக் கோப்பையில் ஆச்சர்யங்களுக்கும், அதிசயங்களுக்கும் பஞ்சம் இல்லை. அதில் சில மட்டும் இங்கே!

world cup 2019
world cup 2019

முதல் நாக் அவுட் போட்டியே அண்டர்டாக்ஸ் நியூசிலாந்து அணிக்கும், ஆல் டைம் ஃபேவரிட்ஸ் இந்திய அணிக்கும்தான். இப்போட்டியில் இந்தியா எளிதாக வெல்லும் என்று அனைவரும் யூகிக்க, அதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த வருணபகவான் அன்று ஓவர்டைம் பார்க்க ஆரம்பித்தார். 46.1 ஓவர்களில் நியூசிலாந்து 211-5 என்ற ஸ்கோர் கணக்கில் இருந்த போது மழை வெளுத்து வாங்க நீ…..ண்ட நாள்களுக்குப் பிறகு ஐசிசி தொடரின் ஒரு போட்டி ரிசர்வ் நாளுக்குத் தள்ளிப்போனது.

இதற்கு முன்னதாக 1987 உலகக் கோப்பையின் ஒரு லீக் ஆட்டம் ரிசர்வ் நாளில் நடத்தப்பட்டது. 1987 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியின் போது மழை குறுக்கிட்டத்தால் அடுத்த நாளுக்கு போட்டி தள்ளிப்போனது. அடுத்த நாள் நடந்த போட்டியில் பாகிஸ்தான் இங்கிலாந்தை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ரிசர்வ் போட்டியின் சுவராஸ்யமே கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரிசர்வ் நாளில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து இந்தியாவை அதே 18 ரன்களில் வென்றதுதான். அந்த இரு அணிகளின் ஸ்கோரும் கூட 1987 போட்டியைப் போலவே அமைந்திருந்ததும் ஆச்சர்யம். பாகிஸ்தான் 239/7 & இங்கிலாந்து 221- நியூசிலாந்து 239/8 & இந்தியா 221.

India vs New Zealand
India vs New Zealand

ஜோஃப்ரா ஆர்ச்சர்!

ஷார்ட் பால்கள், பவுன்சர்கள், யார்க்கர் என வேரியேஷன்கள் காட்டி பேட்ஸ்மேனை நிலைகுலைய வைக்கும் உள்ளூர் அசுரன். இவரின் பலம் என்பதே அவர் வீசும் பந்துகளின் வேகம். அளந்து பார்த்தாலும் மில்லிமீட்டர் அளவு கூட பிசகாத அந்தத் துல்லியம்தான் அவரின் பிரதானம். லீக் போட்டியில் அவர் போட்ட ஒரு பவுன்சர் ஹாஷிம் ஆம்லாவின் ஹெல்மெட்டை பதம் பார்க்க, ரிட்டையர்ட் ஹர்ட்டில் வெளியேறினார் ஆம்லா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் அவர் வீசியதெல்லாம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களே “யாரு சாமி இவன்” எனக் கேட்கும் ரக பவுன்சர்கள். ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே தன் பவுன்சர் அஸ்திரங்களை அவர் வீசத் தொடங்கினார். ஆனால், அந்த பவுன்சரில் எக்குத்தப்பாக மாட்டியவர் ஆஸ்திரேலிய கீப்பர் அலெக்ஸ் கேரி. 8-வது ஓவரில் அவர் வீசிய அந்த 150கிமீ வேகப்பந்து கேரியின் ஹெல்மெட்டின் அடிப்பகுதியில் பட்டுத் தெறிக்க வலது பக்கத் தாடை பிளந்து ரத்தம் வழிந்தது. எப்படியும் பெவிலியன் திரும்பி விடுவார் என்று நினைத்த போது பேன்டேஜ் மாட்டிக்கொண்டு தன் ஆட்டத்தைத் தொடர்ந்த கேரி 46 ரன்கள் குவித்தார்.

Archer
Archer

2019 உலகக் கோப்பை முழுவதும் நிகழ்ந்த அம்பயர்களின் மெத்தனப்போக்கு இறுதிப்போட்டியிலும் தொடர்ந்தது. முக்கியமாக நியூசிலாந்து வீரர் நிக்கோலஸ்க்கு எல்.பி.டபுள்யு முறையில் அவுட் கொடுத்தார் அம்பயர் தர்மசேனா. ஆனால், ரிவ்யூ செய்த போதுதான் தெரிந்தது விக்கெட்ஸ் மிஸ்ஸிங் என்று. ரிவ்யூ திரும்பப் பெறப்பட்டு, நிக்கோலஸ் மீண்டும் களத்திற்குள் வந்தார். இங்கிலாந்து இன்னிங்ஸில் ஜேசன் ராய்க்கு வீசிய பந்தை எல்.பி.டபுள்யூவிற்கு அப்பீல் செய்தார் போல்ட். நாட் அவுட் என அம்பயர் கூற ரிவ்யூவிற்குச் சென்ற போதுதான் தெரிந்தது, ஸ்டம்ப்பிலிருந்து ஒரு இன்ச் விலகி இருந்ததால் அம்பயர்ஸ் கால் என வந்து நியூசிலாந்தின் ரிவ்யூ வீணானது. அம்பயர் மட்டும் அவுட் கொடுத்திருந்தால் நிச்சயம் ராய் அந்தப் பந்திலேயே பெவிலியன் திரும்பியிருப்பார். இறுதிப்போட்டியின் கடைசி ஓவரில் கப்டில் வீசிய பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரி லைனிற்கு திரும்ப அம்பயரால் ஆறு ரன்கள் வழங்கப்பட்டது‌. ``நான் செய்தது தவறுதான்’’ என இலங்கைக்குப்போனதும் பேட்டி கொடுத்தார் தர்மசேனா.

Jason Roy
Jason Roy

இதுவரை நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டிகள் எல்லாம் சுவாரஸ்யம் ஏதும் இல்லாமலே நடந்து முடிந்த போட்டிகள்தான். 30-வது ஓவருக்குள்ளேயே கப் யாருக்கு என்று நிச்சயம் தெரிந்துவிடும். ஆனால், இம்முறை நடந்த இறுதிப் போட்டி ‘once in a blue moon’ என்பதைப் போல் யுகங்களுக்கு ஒரு முறை நிகழக் கூடியது. எளிதான இலக்கு என்றாலும் அதைத் துரத்த ஒரு அணியும், அதை தடுக்க இன்னோர் அணியும் ஆடியது சர்வதேச ஆடுபுலி ஆட்டம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால், இரண்டாவது இன்னிங்ஸ் கடைசி இரு ஓவர்களும், அந்த சூப்பர் ஓவரும் யாரும் எதிர்ப்பார்க்காத ஓர் ஆகச்சிறந்த இறுதிப்போட்டியை நமக்கு அளித்திருக்கிறது. 49-வது ஓவரில் ஸ்டோக்ஸ் அடித்த பந்தை போல்ட் பிடித்துவிட்டு பவுண்டரி லைனில் கால் வைக்காமல் இருந்திருந்தால் இந்த சுவாரஸ்யம் நமக்கு கிட்டியிருக்காது. கடைசி ஓவரில் கப்தில் வீசிய பந்து ஸ்டோக்சின் பேட்டில் படவில்லை என்றால் மேட்ச் சூப்பர் ஓவர் வரை‌ சென்றிருக்காது. ஆனால், ஞாயிறு இரவன்று நடந்த ஒவ்வொரு விஷயங்களைப் பார்க்கும் போதும் இந்த இறுதிப்போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு எக்கச்சக்க விஷயங்களை அள்ளி அளித்திருக்கிறது.

England team
England team

ஜோப்ரா ஆர்ச்சரின் ஆட்டத்தை விட அதிகம் டிரெண்டானது அவரின் பழைய ட்வீட்கள்தான். சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னதாகவே கிரிக்கெட்டை பற்றிப் பல்வேறு விஷயங்களை ட்விட்டரில் ட்வீட் செய்து வந்துள்ளார். அது அத்தனையும் உலகக் கோப்பையின்போது பொருந்திப்போனது. உதாரணமாக 2013-ம் ஆண்டு ஒரு ட்வீட்டில் “16 from 6” என்றும், 2015-ம் ஆண்டு ஒரு ட்வீட்டில் “சூப்பர் ஓவரைப் பற்றிக் கவலையில்லை“என்றும் பதிவிட்டிருந்தார். இதுமட்டுமன்றி இந்திய வீரர்களான கோலி, ரோகித், ராகுலை விமர்சித்து 2015-ம் ஆண்டு அவர் போட்ட ட்வீட்கள் அரையிறுதி போட்டியில் அப்படியே நடந்ததால், ஆர்ச்சரை இல்லுமினாட்டி வட்டத்திற்குள் அடைத்துள்ளனர்!

ஆர்ச்சர் தந்த ஆச்சர்யங்கள்! 2019 உலகக்கோப்பை டிரெண்டிங் பிட்ஸ்!