கட்டுரைகள்
Published:Updated:

உலகக்கோப்பைக்காக அல்ல...வரலாற்றுக்காக!

ஹாக்கி உலகக்கோப்பை
பிரீமியம் ஸ்டோரி
News
ஹாக்கி உலகக்கோப்பை

கிரிக்கெட்டில் கபில்தேவ் படை சரித்திரம் படைக்கத் தொடங்குவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய ஹாக்கி அணி ஒரு உச்சபட்ச சாதனையைச் செய்திருக்கிறது.

பரபரப்பாக நடந்துமுடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட், உலகக்கோப்பைக் கால்பந்து வரிசையில் இப்போது ஹாக்கி உலகக்கோப்பையும் படுபிரமண்டமாக நடைபெற்றுவருகிறது. ஒரே ஒரு வித்தியாசம், கிரிக்கெட் உலகக்கோப்பையும் கால்பந்து உலகக்கோப்பையும் எங்கோ வெளிநாட்டில் நடந்திருந்தன. ஹாக்கி உலகக்கோப்பை நம்முடைய இந்தியாவில் ஒடிசாவில் பெரும் திட்டமிடலுடன் நடைபெற்றுவருகிறது.

உலகக்கோப்பைக்காக 
அல்ல...வரலாற்றுக்காக!

இந்தியச் சமூகத்தில் ஹாக்கிக்கான இடம் என்னவென்பதை நிறுத்துப்பார்க்கும் காலமாகவும் இந்த ஹாக்கி உலகக்கோப்பை நடைபெறும் நாள்கள் அமையப்போகின்றன. ஏனெனில், இங்கே கிரிக்கெட்டிற்குக் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் முக்கியத்துவமும் மரியாதையும் ரொம்பவே பெரிது. கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகையில் ஹாக்கிக்கு நியாயமாகக் கிடைக்கப்பெற வேண்டிய மரியாதையும் கௌரவமும்கூடக் கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் உலகக்கோப்பையை வென்றதை மையப்படுத்தி சமீபத்தில் ஒரு படம் வெளியாகியிருந்தது. அந்தப் படத்தில் இந்திய அணியின் மேனேஜராக வரும் ஒரு கதாபாத்திரம் ஒரு வசனம் பேசியிருக்கும். ‘சுதந்திரம் அடைஞ்சு 36 வருஷம் ஆச்சு கேப்ஸ். ஆனா, மரியாதை இன்னும் கிடைக்கல’ என இந்திய சுதந்திரத்தையும் கிரிக்கெட்டையும் ஒரு கண்ணியில் இணைத்த வசனமாக அது இருந்திருக்கும். அந்த உலகக்கோப்பையை இந்தியா வென்றதையும் இந்த வசனத்தையும் ஒரே புள்ளியில் இணைத்தோமேயானால், விளையாட்டு சார்ந்து சுதந்திர இந்தியா சூடிக்கொண்ட முதல் மகுடமே 1983 உலகக்கோப்பைதான் என்பதுபோல பொருள் கொடுக்கும்.

திரைப்படச் சித்திரிப்புகளையெல்லாம் ஓரங்கட்டிவிட்டுப் பார்த்தாலும் ஒரு சமூகமாக நம் மனதில் ஆழ உறைந்திருப்பதுமே கூட அதுதான். இந்தியாவில் விளையாட்டு என்றால் கிரிக்கெட்தான். அந்த கிரிக்கெட்தான் இந்தியாவின் முதல் கௌரவம், முதல் மரியாதை எல்லாமே. நம்முடைய இந்த நம்பிக்கையே தடம் மாறிய பிழையான வரலாற்றுக் கற்பித்தலின் வழி வந்ததுதான். 1983-ல் தான் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வெல்கிறது. ஆனால், அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்திய ஹாக்கி அணி உலகக்கோப்பையை வென்றுவிட்டது.

1975-ம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த உலகக்கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி உலகக்கோப்பையை முதல் முறையாக வென்றிருந்தது.

உலகக்கோப்பைக்காக 
அல்ல...வரலாற்றுக்காக!

கிரிக்கெட்டில் கபில்தேவ் படை சரித்திரம் படைக்கத் தொடங்குவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய ஹாக்கி அணி ஒரு உச்சபட்ச சாதனையைச் செய்திருக்கிறது. உலகக்கோப்பையை விடுங்கள். நம்மூரில் ஒலிம்பிக்ஸ் பதக்கத்திற்கு எப்படிப்பட்ட மரியாதை இருக்கிறது! அந்த ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை இந்தியாவிற்கு அதிக முறை வென்று கொடுத்திருப்பது இந்திய ஹாக்கி அணிதான். அதிலும் குறிப்பாக, அந்த 1948 லண்டன் ஒலிம்பிக்ஸ் நிகழ்வுகளைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும். இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் இந்திய ஹாக்கி அணியே துண்டாடப்பட்டிருந்தது. இந்திய அணிக்காக ஆடி வந்த வீரர்கள் பலர் பாகிஸ்தான் அணிக்கு ஆட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருந்தனர். இந்திய அணி திணறிப்போயிருந்தது. அப்படியொரு இக்கட்டான கட்டத்திலும் இந்திய அணி அந்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றிருந்தது. அதுவும் இறுதிப்போட்டியில் சூரிய அஸ்தமனத்தையே சந்தித்திடாத கிரேட் பிரிட்டனை வீழ்த்தி இந்தியா வென்றிருந்தது. டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அந்த உலக மேடையில் இந்திய தேசத்தின் தேசிய கீதம் ஒலித்த போது எப்படி ஒரு மனவெழுச்சியை நாம் எட்டினோம்? அதை நினைவுபடுத்திக் கொண்டே அந்த 1948 லண்டன் ஒலிம்பிக்ஸைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஆதிக்கம் செலுத்தி அடக்கி ஆண்ட கூட்டத்திற்கு எதிராக வெற்றியை ஈட்டி பிரிட்டனின் கொடிக்கு மேல் இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டு தேசிய கீதம் ஒலித்த அந்தத் தருணம் எப்படியிருந்திருக்கும்? விவரிக்க முடியாத வரலாற்றுச் சம்பவம் அது.

இப்போது கிரிக்கெட்டையும் ஹாக்கியையும் அதனதன் வரலாற்று உச்சங்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஹாக்கிக்கான நியாயமான இடத்தைக்கூட நாம் கொடுக்கவில்லை என்பதை அதன் மூலம் விளங்கிக்கொள்ள முடியும். கிரிக்கெட் பல கோடி மக்களால் கொண்டாடப்படுவது பற்றி எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. கொண்டாடப்படுதல் என்பது வேறு, வரலாற்றுத் தடங்களை அப்படியே காணாமல் ஆக்குவது வேறு. ஹாக்கிக்கு நடந்தது அந்த இரண்டாவதுதான். ஹாக்கி பெரிதாகக் கொண்டாடப்படாமல் இருப்பதற்கு அதனுள்ளேயே சில குறைகள் இருப்பதையும் மறுக்க முடியாது. ஆனால், அதற்காக அந்த விளையாட்டு கடந்து வந்த பாதையையும் அது எட்டிய உச்சங்களையும் மறுதலிப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது.

உலகக்கோப்பைக்காக 
அல்ல...வரலாற்றுக்காக!

பாதுகாப்பின்மை, பிராந்தியவயப்பட்ட தன்மை என ஹாக்கி பெருவாரியான வரவேற்பைப் பெறாமல்போனதற்கு எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன. ஆனால், இது எல்லாவற்றையும்விட முக்கியமானது வெற்றிகள். இந்திய ஹாக்கி அணி 1980-க்குப் பிறகு உலகளவில் எந்தப் பெரிய தொடரையும் வெல்லவில்லை. அதுவரை அசத்தி வந்த இந்திய அணி ஆஸ்ட்ரோ டர்ஃபின் அறிமுகத்திற்குப் பிறகு தடுமாறத் தொடங்கியது. இந்தச் சமயத்தில்தான் கிரிக்கெட்டும் அப்படியே மெதுமெதுவாக வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியது. அதன் நாயகர்கள் சூப்பர் ஸ்டார்களாகக் கொண்டாடப்படத் தொடங்கினார்கள்.

பெரும் ஏமாற்றங்கள் மட்டுமே சூழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்திலிருந்து விடுபட்டு கடந்த டோக்கியோ ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி மீண்டெழ ஆரம்பித்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஒலிம்பிக்ஸில் மீண்டும் பதக்கம் வென்றது. அதிலிருந்து இந்திய ஹாக்கி அணியின் மீது புதிய நம்பிக்கை தொற்றிக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ஒடிசாவில் உலகக்கோப்பையை நடத்தும் ரூர்கேலா மற்றும் புவனேஷ்வர் ஆகிய இரு நகரங்களும் இப்போது திருவிழாக்கோலம் பூண்டிருக்கின்றன. போட்டிகள் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணியின் மீதும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. தங்களின் வரலாற்றுத் தடங்களைக் காப்பாற்றிக்கொள்ளவாவது இந்த இந்திய அணி சாதித்தே ஆக வேண்டும்!