Published:Updated:

`கடைசில மேன் ஆஃப் தி சீரிஸ் மழைக்குதானா?' - 2019 உலகக்கோப்பையை சோதிக்கும் இயற்கை!

ராம் பிரசாத்

இந்த மழையால் பலன் பெற்ற அணி என்றால் அது இலங்கைதான். படு சுமாரான லைன் அப் கொண்ட இலங்கை அணி தற்போது 5-ம் இடத்தில் இருக்க மழைதான் காரணம்.

கிரிக்கெட் மைதானம்
கிரிக்கெட் மைதானம்

நடப்பு உலகக்கோப்பை தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்புகளையும் கருத்துகளையும் அள்ளித்தெளித்தனர். இங்கிலாந்து கண்டிஷன் பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக இருக்கும். இந்த உலகக்கோப்பை தொடர் ஹை ஸ்கோரிங் கேமாக இருக்கும் என்றெல்லாம் பேசினர். ஆனால், இந்தத் தொடரில் அணிகள் விளையாடியதாக தெரியவில்லை. 'தம்பி எங்க வந்து என்ன பேசுறீங்க?' என்ற டோனில் இயற்கைதான் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது.

2019 உலகக்கோப்பை
2019 உலகக்கோப்பை

'நான் ஆடுறத நிறுத்துனாதானா நீங்க ஆடிவீங்க' என மழை தொடர்ந்து பல போட்டிகளில் தன் ஆட்டத்தைக் காட்டி வருகிறது. இதுவரை 3 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆட்டத்தின் நடுவே மழை வந்து ஓவர் குறைக்கப்பட்ட போட்டியும் உண்டு. இது சில அணிகளுக்கு சாதமாகவும் சில அணிகளுக்கு பாதகமாகவும் முடிந்துள்ளது.

பாதி ஆட்டம் ஆடிய பின்னர் ஏதேனும் காரணங்களால் போட்டி கைவிடப்பட்டால் அது நோ - ரிசல்ட் கேம் என அழைக்கப்படும். டாஸ்கூட போடாமல் வீரர்கள் மைதானம் பக்கமே காலை வைக்கவில்லை என்றால் அது கைவிடப்பட்ட போட்டியாக (ABANDONED) அறிவிக்கப்படும்.

உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல்
உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல்

அந்த வகையில் உலகக்கோப்பை வரலாற்றில் 2019-தொடரில்தான் நோ - ரிசல்ட் மற்றும் கைவிடப்பட்ட போட்டிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதுவரை 16 போட்டிகள்தான் நடந்துள்ளன. தற்போது அதிலேயே 3 போட்டிகள் காலி. இனி வரப்போகும் சில போட்டிகளுக்கும் இதே நிலை ஏற்படலாம் என்று வேறு தெரிகிறது.

ஆனால், இந்த மழையால் பலன் பெற்ற அணி என்றால் அது இலங்கைதான். படு சுமாரான லைன் அப் கொண்ட இலங்கை அணி முதல் போட்டியில் நியூசிலாந்துடன் மண்ணை கவ்வியது. இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை காலி செய்தது. இதன்மூலம் 2 புள்ளிகள் கிடைத்தன. பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் தற்போது சத்தமே இல்லாமல் 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5-ம் இடத்தில் இப்போது உட்கார்ந்திருக்கிறது இலங்கை.

இந்த மழையால் பலன் பெற்ற அணி என்றால் அது இலங்கைதான். படு சுமாரான லைன் அப் கொண்ட இலங்கை அணி தற்போது 5-ம் இடத்தில் இருக்க மழைதான் காரணம்.
2019 உலகக்கோப்பை நிலவரம்

தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்காவுக்கு வருண பகவான் புண்ணியத்தில் ஒரு புள்ளி கிடைத்தது. குட்டி புலியான வங்கதேசம் நிலைமைதான் பாவம். 4 போட்டிகளில் 1 வெற்றி, 2 தோல்வி, 1 டை என 3 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. இனி வரும் முக்கியப் போட்டிகளிலாவது மழை குறிக்கிடாமல் இருந்தால் மட்டுமே இந்தக் கிரிக்கெட் திருவிழா களைகட்டும்.

ராம் பிரசாத்