Published:Updated:

5 அரைசதங்கள்... 599 ரன்கள்... அட்டகாசமாக முடிவுக்கு வந்த ஆப்கன், விண்டீஸ் அணிகளின் உலகக் கோப்பை!

West Indies vs Afghanistan
West Indies vs Afghanistan

போர்டு ரூமிலும், டிரஸ்ஸிங் ரூமிலும் சரியான முடிவுகளை எடுத்தால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மிகப்பெரிய மாற்றம் காணும்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலகக் கோப்பை செயல்பாடு, கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் கிரிக்கெட் ஆடும் அணுகுமுறையை அப்படியே பிரதிபலித்துள்ளது. பவர்பிளேவிலும் டெத் ஓவர்களிலும் அதிரடி காட்டுவதுபோல் முதல் போட்டியில் வெற்றி, கடைசிப் போட்டியில் வெற்றி. மிடில் ஓவர்களில் டாட் பால்களே கதியென்று ஆடுவதுபோல், இடையில் விளையாடிய 6 போட்டிகளிலும் தோல்வி! பாகிஸ்தானைப் பந்தாடி, கிரிக்கெட் உலகின் நம்பிக்கையைப் பெற்ற அந்த அணி, தொடர் சொதப்பல்களால் வெறும் 5 புள்ளிகளுடன் உலகக் கோப்பையை முடித்துக்கொண்டுவிட்டது.

அதேசமயம், சில அதிர்ச்சித் தோல்விகளைப் பரிசளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான் புள்ளிக கணக்கைத் தொடங்காமலேயே ஊர் திரும்பப் போகிறது. இரு அணிகளுக்குமே பாசிடிவ் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. பூரண், காட்ரல் போன்ற அடுத்த தலைமுறை வீரர்களின் சீரான செயல்பாடு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை. கேப்டன் மாற்றம், கீப்பர் விலகல், பேட்டிங் ஆர்டர் சொதப்பல், பௌலர்கள் மாற்றம் என பாசிடிவ் விஷயங்களைத் தேடிக்கொண்டிருந்த ஆப்கானிஸ்தானுக்கு, கடைசி போட்டியில் பல விஷயங்கள் பாடமெடுத்துள்ளன.

Chris Gayle
Chris Gayle

கிறிஸ் கெய்ல் ஆடப்போகும் கடைசி உலகக் கோப்பைப் போட்டி... எப்படியும் யுனிவெர்சல் பாஸின் சூறாவளி ஆட்டம் இன்றாவது அரங்கேறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 7 ரன்களுக்கு வெளியேறினார் கெய்ல். கடைசி உலகக் கோப்பை இன்னிங்ஸ் இப்படி முடிந்தாலும், பெவிலியன் திரும்பும்போது பேட்டை உயர்த்தி ரசிகர்களின் கரகோஷங்களை ஏற்று வெளியேறினார். ரசிகர்களைக் கொண்டாடவைப்பதே முக்கியம் என்று கருதிய வீரன் அப்படிச் செய்ததில் என்ன ஆச்சர்யம்!

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியைத் தவிர்த்து மற்ற போட்டிகளில் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாது ஈவின் லூயிஸ், நேற்று நிலைத்து நின்று ஆடினார். ஷாய் ஹோப் ஒருபுறம் நங்கூரம் பாய்ச்சி நிற்க, 78 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேறினார் லூயிஸ். விக்கெட்டுகள் வீழவில்லை என்றாலும் ரன்ரேட் குறைவாகவே இருந்தது. அதைத் தன் அதிரடியால் வெகுவாக உயர்த்தினார் ஹிட்மேயர். ஆனால், நன்றாக செட்டில் ஆகியிருந்த நேரத்தில் அவரும் வெளியேறினார்.

Shai Hope
Shai Hope

அடுத்து களமிறங்கியது, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துவரும் நிகோலஸ் பூரண். வந்த வேகத்தில் அவரும் வேகம் காட்ட, அதுவரை உருட்டிக்கொண்டிருந்த ஹோப்பும் அடிக்கத் தொடங்கினார். நபி ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி அடித்து மிரட்டினார் ஹோப். இரண்டு பந்துகள் பவுண்டரியாகவும், அதுவரை ஓவர் தி ஸ்டம்ப் லைனில் வீசிக்கொண்டிருந்த நபி, அரௌண்ட் ஸ்டம்ப் லைனில் வீசினார். ஹோப்பை ஆஃப் சைட் அடிக்கவிடாமல், லெக் சைட் அடிக்கும்படியாக ஸ்டம்ப் லைனிலும் வீசினார். அவர் திட்டம் அந்தப் பந்திலேயே நிறைவேறியது. மிட் விக்கெட் திசையில் நின்றிருந்த ரஷீத் கானிடம் கேட்சாகி 77 ரன்களில் வெளியேறினார் ஹோப்.

37.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள். கட்டுக்கோப்பாகப் பந்துவீசி, விரைவில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திவிட்டால் எப்படியும் குறைந்த ஸ்கோரில் வெஸ்ட் இண்டீஸை கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், ஆப்கானிஸ்தானின் சிக்கல்கல் அப்போதுதான் தொடங்கியது. 40-வது ஓவர் முடிந்தபோதே நபியின் ஸ்பெல் முடிந்துவிட்டது. முஜீப், ரஷீத் இருவரும் சேர்ந்து 5 ஓவர்கள்தான் பந்துவீச முடியும். அப்படிப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள், தங்களின் உண்மை முகத்தைக் காட்டத் தொடங்கினார்கள்.

Holder and Pooran
Holder and Pooran

முஜீப் ஓவரையும் விட்டுவைக்காமல் வெளுத்தனர். இவர்களே அடிவாங்கிக்கொண்டிருக்க, வேகம், ஸ்விங், வேரியேஷன் எதுவுமே இல்லாத ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் என்ன பாடு படுவார்கள்? தவ்லாத் சத்ரானின் ஓவர்களில் சிக்ஸரும் பவுண்டரியும் பறந்துகொண்டிருந்தன. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் வந்த சையது சிர்சாத்தின் பந்துகளை, முழு பலமும் கொண்டு பறக்கவிட்டார்கள். கடைசி 3 பந்துகளில் பிராத்வெயிட் 14 ரன்கள் எடுக்க, 311 ரன்கள் எடுத்தது வெஸ்ட் இண்டீஸ். உலகக் கோப்பை வரலாற்றில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நம்பர் 2, 3, 4, 5, 6 பேட்ஸ்மேன்கள் ஐவரும் 20+ ஸ்கோர் அடித்திருப்பது இதுதான் முதல் முறையாம்!

மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்த ஆப்கானிஸ்தான், மிகவும் நிதானமாக விளையாடியது. கேப்டன் குல்பதின் நைப் விரைவில் வெளியேறியிருந்தாலும், இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா, இக்ரம் அலி கில் கூட்டணி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சில போட்டிகளுக்கு முன்பு 9-வது வீரராகவெல்லாம் களமிறங்கிக்கொண்டிருந்த கில், தன்னால் பேட்டிங்கில் என்ன செய்ய முடியும் என்பதை நேற்று நிரூபித்தார்.

Rahmant Shah & Khil
Rahmant Shah & Khil

ரஹ்மத் ஷா ஒருபுறம் கிளாசிக் டிரைவ்கள் ஆட, புல் ஷாட், ஸ்லாக் ஹிட் என மிரட்டினார் கில். ரன்ரேட்டும் குறையாமல், விக்கெட்டும் விழாமல் அற்புதமாக ஆடியது அந்தக் கூட்டணி. ஃபேபியன் ஆலன் ஓவரில் மிட்விக்கெட் திசையில் பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் கில். உலகக் கோப்பை வரலாற்றில் அரைசதம் அடிக்கும் நான்காவது இளம் வீரர் அவர். இந்த பார்ட்னர்ஷிப் அடித்து ஆடத் தொடங்கிய நேரத்தில், உலகக் கோப்பையின் தன் கடைசிப் பங்களிப்பாக அவர்கள் இருவரையும் பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் கெய்ல். பிராத்வெயிட் பந்துவீச்சில், ரஹ்மத் ஷா அடித்த பந்து கவர் திசை நோக்கிப் போக, ஷார்ட் கவரில் நின்றிருந்த கெய்ல், அப்படியே விழுந்து அதை கேட்ச் செய்தார். 133 ரன்களில் முடிவுக்கு வந்தது அந்தக் கூட்டணி.

உலகக் கோப்பையின் இளம் செஞ்சுரியன் என்ற சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 86 ரன்களுக்கு அவுட்டானார் கில். கெய்ல் ஓவரில், தொடர்ந்து ஸ்வீப் ஷாட்கள் ஆட முயற்சி செய்து, சுழலாமல் வந்த ஒரு ஆர்ம் பாலிடம் ஏமாந்தார் அந்த 18 வயது இளம் வீரர். அதுவரை மிகவும் வேகமாக உயர்ந்துகொண்டிருந்த ஆப்கானிஸ்தானின் ரன்ரேட் அப்படியே குறையத் தொடங்கியது. அதற்குப் பதிலாக விக்கெட்டுகள் அதிகரிக்கத் தொடங்கின.

Chris Gayle
Chris Gayle

நஜிபுல்லா சத்ரான் ரன் அவுட் ஆன கனத்தில் ஆப்கானிஸ்தான் இன்னிங்ஸின் முடிவுரை எழுதப்பட்டது. நபி, ஷின்வாரி, ரஷீத், தவ்லத் சத்ரான் என அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள். கடைசி கட்டத்தில் அதிசயமாக அதிரடி காட்டிய அஸ்கர் ஆஃப்கானும் 40 ரன்களில் அவுட்டாகி, தன் உலகக் கோப்பைப் பயணத்தை முடித்துக்கொண்டார். கடைசி கட்டத்தில் சிர்சாத் மட்டும் அதிரடியாக ஆட, 288 ரன்கள் அடித்தது ஆப்கானிஸ்தான். நடுவே ஓரிரு பார்ட்னர்ஷிப்கள் கொஞ்சம் நிலைத்து நின்று ஆடியிருந்தால், அந்த அணி இலக்கை சேஸ் செய்திருக்கலாம்!

9 போட்டிகளில் தோற்றிருந்தாலும், கில் - ஷா கூட்டணியின் அந்த் ஆட்டம் ஆப்கானிஸ்தானுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளித்திருக்கிறது. சுழலை மட்டும் சுற்று கட்டமைக்கப்பட்டிருக்கும் அவர்களது இமேஜ், இனி மாறும். தரமான பேட்ஸ்மேன்கள் உருவாவதற்கு அடித்தளமாக இருக்கும். போர்டு ரூமிலும், டிரஸ்ஸிங் ரூமிலும் சரியான முடிவுகளை எடுத்தால், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் மிகப்பெரிய மாற்றம் காணும்.

இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் விளையாண்ட விதம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? . உங்களது கருத்துக்களை கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்!

அடுத்த கட்டுரைக்கு