2002-ம் ஆண்டு, இந்திய நாளிதழ்களின் விளையாட்டுப் பிரிவின் தலைப்புச் செய்தியாகி இருந்தார். இந்தியாவின் அடுத்த பேட்டிங் சென்சேஷன் என ஏகபோகமாக அனைவரும் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். இதெல்லாம், கண் சிமிட்டுவது போல் ஓரிரவில் நடந்தது. இங்கிலாந்துக்கு எதிரான அண்டர் 19 போட்டியில் அவர் அடித்த 177 ரன்கள் செய்த மாயாஜாலம்தான் அத்தனையும்.
இங்கிலாந்து மண்ணில் அவர் நிகழ்த்திய அதிரடிதான் அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்சென்றது. அதைத் தொடர்ந்து நடந்த ரஞ்சிக் கோப்பையில், ஆந்திராவுக்கு எதிரான போட்டியின் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமும் அடித்திருப்பார். பின், 2004 U–19 உலகக் கோப்பையில் கேப்டனாகப் பதவியேற்று, இந்தியாவை அரையிறுதி வரை அழைத்துச்சென்றார். தன் பதின்ம வயதுகளிலேயே இத்தனை பிரமிப்புகளை அளித்த அம்பதி ராயுடு, இரண்டு, நாள்களுக்கு முன் தான் மிகவும் நேசித்த கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
தற்போது, எப்படி ப்ரித்வி ஷா ஒன்றிரண்டு போட்டிகளில் அடித்தவுடனேயே அவரை சச்சினுடன் ஒப்பிட்டார்களோ, ராயுடுவையும் அவரது இளமையில் அப்படித்தான் புகழ்ந்தனர்.
அவரை ஜிம்கானாவில்தான் பார்த்தேன். 14 வயதிலேயே ட்ரைவ் ஷாட்டுகளை முழுநேர கிரிக்கெட் வீரர் போல் அத்தனை துல்லியமாக அடித்தார். ஆந்திராவுக்கு எதிராக அவர் அடித்த 200 ரன்களும் இங்கிலாந்து மண்ணில் அவர் அடித்த 177 ரன்களும் எளிதில் கடந்துவிடக்கூடியது அல்ல. சர்வதேச கிரிக்கெட்டை நோக்கி பயணிக்கும் வீரன் ஒருவன் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள், அந்த இன்னிங்ஸ்களில் ஏராளம் உள்ளன.முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடபதி ராஜு
U 19 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 137-6 என தள்ளாடிக் கொண்டிருக்கும் அணியை 306 ரன்களை சேஸ் செய்ய ஒற்றை ஆளாக உதவியதாக இருக்கட்டும், மிகக் குறைந்த வயதில் ரஞ்சிக் கோப்பையில் இரட்டை சதம் அடித்ததாக இருக்கட்டும், ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ரன்களைக் குவித்ததாக இருக்கட்டும், இப்படி எண்ணற்ற தருணங்கள் இருக்கின்றன ராயுடுவைப் பற்றி பேச...
தன் 21–வது வயதில், `இந்தியன் கிரிக்கெட் லீக்’ தொடரில் சிறப்பாக ஆடியபோது, அவர் சர்வதேச அணியில் இடம்பெறுவதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளது என்பதை உணர்த்தினார். ஆனால், அங்கிருந்தே ராயுடுவுக்கு கொஞ்சம் துரதிர்ஷ்டமும் சேர்ந்துகொண்டது. 2004 U 19 உலகக் கோப்பையில், ராயுடு தலைமையில் ஆடிய தவான், ரெய்னா, தினேஷ் கார்த்திக், ஆர்.பி.சிங் உள்ளிட்டோர் அணியில் வரிசையாக இடம்பெற ஆரம்பித்தனர். ஆனால், ராயுடுவுக்கு மட்டும் இடம் மறுக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. அவர், ஐசிஎல் தொடரில் ஆடியதுதான் காரணம். அப்போதிருந்தே ராயுடுவுக்கும் பிசிசிஐ–க்கும் உரசல் இருந்துகொண்டேதான் இருந்தது.

ஆனாலும், அசரவில்லை அம்பதி. ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுவந்தார். கிரிக்கெட் பற்றிய அணுகுமுறையை எப்போதுமே மாற்றவில்லை. இதற்கிடையே, ஐபிஎல் மூலம் தன் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2010–ம் ஆண்டில், மும்பை அணிக்காக தேர்வுசெய்யப்பட்ட ராயுடு, 2017 சீசன் வரை அந்த அணியில் இருந்தார். இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காகவே தனது பேட்டிங் ஸ்டைலை மாற்றினார். ஐசிஎல் தொடரில் டிஃபென்ஸிவ் ப்ளேயராக இருந்தவர், ஐபிஎல் தொடரில் அதிரடிக்கு மாறினார். முதல் போட்டியிலேயே ராஜஸ்தானுக்கு எதிராக 55 ரன்கள் எடுத்து அசத்த, அன்றிலிருந்து மும்பை அணியின் ஆபத்பாந்தவனாக மாறினார். டாப் ஆர்டர் சொதப்பும் போதெல்லாம் அணியைத் தூக்கி நிறுத்தினார்.
கடைசியாக, அவரின் அதிரடிக்கு ஒரு பலன் கிடைத்து. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ஜிம்பாவே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் தொடரில் ராயுடு 63 ரன்கள் எடுத்தார். 2014- 2015 சீசனில் (2015 உலகக் கோப்பை முன்பு வரை) 27 போட்டிகளில் ஆடிய ராயுடு, 4 அரை சதங்கள், ஒரு சதத்தோடு 743 ரன்கள் குவித்திருந்தார். 2015 உலகக் கோப்பை அணியில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒரு போட்டியில் கூட ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பின் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரில் ஒரு சதம், இரண்டு அரை சதங்களோடு தொடர் நாயகன் விருதும் பெற்றார்.

ராயுடுவின் கிரிக்கெட் டைம்லைன் ஏற்ற இறக்கங்களால் அமைந்தது. 2018 ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக 603 ரன்கள் குவித்து ஆச்சர்யப்படுத்தினார். இதனால், அந்த சீசனில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவர் இடம்பெறுவதாக இருந்தது. ஆனால், யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததால், இங்கிலாந்து தொடருக்கான வாய்ப்பு பறிபோனது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அடுத்த நாளே இந்தியா ஏ அணிக்காக ஆடத் தொடங்கினார்.
ஒரு கிரிக்கெட் வீரர், குறிப்பாக பேட்ஸ்மேனின் உச்சம் என்பது 28 வயதிலிருந்து 35 வயது வரைதான். ஆகவே, என் தலைசிறந்த இன்னிங்ஸ்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். என் உடல் தகுதிமீது எந்தக் குறைபாடோ சந்தேகமோ எனக்கு இல்லை.அம்பதி ராயுடு (யோ யோ டெஸ்ட் குறித்து...)
அதை நிரூபிக்கும் விதமாக, 2018 அக்டோபரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் 215 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அதிகபட்ச ரன்கள் எடுத்திருந்தார்.
ராயுடுவின் பலம் என்பது ஷார்ட் பால்களும் குட் லென்த்தில் பிட்ச் ஆகும் பந்துகளும்தான். பெரும்பாலும் அவரின் ஷாட்டுகள் 'ஹார்ட் ஹிட்டிங்' வகையைச் சார்ந்தது. உயரம் குறைவாக இருந்தாலும் இடுப்புக்கு மேல் எழும் பந்துகளை எளிதாகக் கையாளுவார். பெரிதாக டாட் பால்கள் வைக்க மாட்டார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஹென்றி வீசிய பந்து அவுட் ஸ்விங்காகி வந்தது. இந்தப் பந்தை கவர் ட்ரைவ் திசையில் திருப்பினால், எட்ஜ்ஜாகும் வாய்ப்பு அதிகம். ஆனால், அந்தப் பந்தில் ஒரு ஃபுல் ஷாட் சிக்சர் அடித்தார். மில்லி செகண்டு அளவில் தனது ஷாட்டை தீர்மானித்து, அதை செயல்படுத்தி அசத்தினார்.

இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவோம் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். அதற்காகவே, நான்கு நாள்கள் நடக்கும் ரஞ்சியில் விளையாடுவதைத் தவிர்த்து, முழுக்க முழுக்க லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தினார். இந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிகளில், அவரின் பேட்டிங் சராசரி 52.03. இந்தியக் கேப்டன் விராட் கோலி கூட ஒருமுறை, அம்பதி ராயுடு நம்பர் 4–ல் இறங்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லியிருந்தார். ஆனால், உலகக் கோப்பைக்கான அணியில், ராயுடுவுக்குப் பதிலாக விஜய் சங்கர் இடம்பெற்றார்.
`இந்த உலகக் கோப்பையைப் பார்ப்பதற்கு புதிதாக ஒரு 3D கண்ணாடியை வாங்கியுள்ளேன்’
2018 செப்டம்பரிலிருந்து 20 போட்டிகளில் ஆடிய ராயுடு, 9 போட்டிகளில் 25 ரன்களுக்குக் கீழ் அவுட்டாகியுள்ளார். 2019 ஐபிஎல் தொடரில் சொல்லிக்கொள்ளும்படி பெரிய இன்னிங்ஸ் ஏதும் இல்லை. அவரின் பெளலிங் ஆக்ஷ்ன் மீது சந்தேகம் எழுந்ததால், 10 மாதங்களுக்கு மேல் பந்து வீசவில்லை. பிரமாதமான ஃபீல்டரும் இல்லை. இதை ஒப்பிடும்போது, விஜய் சங்கர் சிறப்பாகத் தெரிந்ததால் அவரை தேர்வுசெய்தோம் என இந்திய அணி அறிவிக்கப்பட்ட மறுநாள் விளக்கம் அளிக்கப்பட்டது.
உலகக் கோப்பையின்போது காயமடைந்த ஷிகர் தவானுக்குப் பதிலாக ரிஷப் பன்ட்டையும், விஜய் சங்கருக்குப் பதிலாக மயங்க் அகர்வாலையும் தேர்வுசெய்தது பிசிசிஐ. கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு, ராயுடுவை கிரிக்கெட்டின் முடிவை நோக்கி நகர்த்திவிட்டது.