Published:Updated:

23 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவை வெல்லுமா ஹோல்டர் அண்ட் கோ? #AUSvWI

David warner, Steve Smith
David warner, Steve Smith

வலுவான தொழில்நுட்பக் குழுவைப் பின்னணியில் வைத்திருக்கும் ஆஸ்திரேலியா, ஷார்ட் பால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என இந்நேரம் ஹோம்வொர்க் செய்திருக்கும்.

போட்டி: 10
ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ்
இடம்: டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்
நேரம்: மாலை 3 மணி

`ஷார்ட் பால்களை எதிர்கொள்வதில் இவர்கள் பலவீனமானவர்கள்’ என்பதை ரஸல் கண்டுபிடித்துக் கொடுக்க, அந்த டெக்னிக்கை பயன்படுத்தி பாகிஸ்தானை 105 ரன்களில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ். ஆனால், அதே தைரியத்துடன் அவர்கள் ஆஸ்திரேலியா இருக்கும் தெரு பக்கம் போய்விட முடியாது. ஏனெனில், அது ஆஸ்திரேலியா. ஷார்ட் பால்களை எதிர்கொள்வது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் இல்லை என தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலேயே லீடு கொடுத்துவிட்டார் வங்தேச பேட்ஸ்மேன் செளமியா சர்க்கார்.

World Cup 2019
World Cup 2019

எனவே, வலுவான தொழில்நுட்பக் குழுவைப் பின்னணியில் வைத்திருக்கும் ஆஸ்திரேலியா, ஷார்ட் பால்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என இந்நேரம் ஹோம்வொர்க் செய்திருக்கும். இருந்தும், ஆண்ட்ரே ரஸல், நேதன் கூல்டர் நைல் இருவரும் ஷார்ட் பால்களில் மிரட்டுவோம் என சபதம் ஏற்றிருக்கிறார்கள். பார்க்கலாம்.

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட் கம்மின்ஸ் பெளலிங்கில் மிரட்ட, டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் பேட்டிங்கில் கைகொடுக்க, வெற்றியுடன் உலகக் கோப்பையைத் தொடங்கியது ஆஸ்திரேலியா. அதிலும், டேவிட் வார்னர் தன் இயல்பிலிருந்து மாறுபட்டு, நிதானமாக ஆடி அணியை வெற்றிபெறச் செய்தது, அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கும் பாஸிட்டிவ் எனர்ஜியைக் கொடுத்திருக்கும். முதல் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய தெம்புடன் இருக்கும் வெஸ்ட் இண்டீஸும் அதே பாசிட்டிவ் வைப்ரேஷனில் இருக்கிறது. போதாக்குறைக்கு வெஸ்ட் இண்டீஸின் பெளலிங் அட்டாக் அப்படியே 1970–களில் இருந்ததைப் போல வலுவாக இருக்கிறது என்றும் புகழ்பாட ஆரம்பித்திருக்கிறார்கள்.

Match Preview
Match Preview

வெஸ்ட் இண்டீஸ் ஓபனர்கள் கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப் இருவரும் முதல் ஸ்பெல்லை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது ரொம்பவே முக்கியம். கெய்ல் பிரச்னையில்லை. டி–20 போட்டிகளிலேயே முதல் ஸ்பெல்லை அடக்கி வாசித்து, அதன்பின்னரே அடித்துஆடுவார். ஆனால், ஹோப் ஆரம்பத்தில் இருந்தே அட்டாக்கிங் மோடில் இருந்தால், பாகிஸ்தான் பெளலிங் கோச் சொன்னதைப் போல, அவரை வீழ்த்த ஒரு நல்ல பால் போதும். லீவிஸ் உடற்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் டேரன் பிராவோவுக்குப் பதிலாக, லீவிஸை களமிறக்கலாம். பிராத்வெய்ட்டுக்குப் பதிலாக சுழற்பந்து வீச்சாளர் ஃபேபியன் ஆலெனை சேர்க்கலாம். ஆஸ்திரேலிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுக்கு கொஞ்சம் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது.

இரு அணிகளும் இதுவரை!

West Indies team
West Indies team
இரு அணிகளும் இதுவரை!
இரு அணிகளும் இதுவரை!

இரு அணிகளும் இதுவரை மோதிய 139–ல் ஆஸ்திரேலியா 73, வெஸ்ட் இண்டீஸ் 60 போட்டிகளில் வென்றுள்ளன. உலகக் கோப்பையில் மோதிய ஒன்பது போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் 5 முறை வெற்றிபெற்றுள்ளது. ஆனால், 1996–க்குப் பின் உலகக் கோப்பை போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியாவை வென்றதில்லை. 23 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலியாவை வெல்லுமா ஹோல்டர் அண்ட் கோ?

பிளேயிங் லெவன்!

முதல் போட்டியில் மூன்று ஓவர்கள் வீசியபின் ஓய்வுக்குச் சென்றர் ரஸல். கிறிஸ் கெய்லும் முதுகு வலியால் அவதிப்படார். இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்குவார்களா என்ற கேள்வி இருந்தது. வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், நேற்று இருவரும் பிளேயிங் லெவனில் இருப்பார்கள் என தெளிவுபடுத்திவிட்டார். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, இரண்டாவது ஸ்பின்னராக நேதன் லயன் இறங்க வாய்ப்பு இல்லை. பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்காது.

Australia vs West Indies in World cup
Australia vs West Indies in World cup

போட்டி நடக்கும் டிரென்ட் பிரிட்ஜ் மைதானம் அளவில் சிறியது. 481 ரன்கள் அடிக்கப்பட்ட கிரவுண்ட். இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் மோதிய போட்டியில் இரு அணிகளும் 330+ ரன்கள் குவித்தது. இன்றைய போட்டியும் அப்படியொரு இன்னிங்ஸ் இருக்கவே வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியா: ஆரோன் ஃபின்ச் (கேப்டன் ), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், நேதன் கூல்டர் நைல், மிச்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), டேரன் பிராவோ, நிகோலஸ் பூரன், ஷிம்ரன் ஹெட்மயர், ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஒசேன் தாமஸ்.

அடுத்த கட்டுரைக்கு