Published:Updated:

400 ரன் அடிச்சாலும், 40–ல சுருண்டாலும் ஆச்சர்யமில்லை... ஏன்னா இது வெஸ்ட் இண்டீஸ்! #WorldCup

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல், இந்தத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். தன் கிரிக்கெட் பயணத்தைச் சிறப்பாக முடிக்க எப்படியும் வெறிகொண்டு ஆடுவார்.

கேப்டன் : ஜேசன் ஹோல்டர்
பயிற்சியாளர் : ஃப்ளாய்டு ரெய்ஃபர்
ஐ.சி.சி ஒருநாள் ரேங்கிங் : 8

உலகக் கோப்பை எனும் சகாப்தத்தை அசத்தலாகத் தொடங்கி வைத்தவர்கள், தகுதிச் சுற்றில் போராடி உள்ளே நுழையும் நிலையை அடைந்திருக்கிறார்கள். அரையிறுதிக்குள் நுழைந்தே 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த முறையும், அவர்களின் உலகக் கோப்பைக் கனவு கரீபியக் கடலில் கலந்துவிடலாம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால், இவர்கள் வெஸ்ட் இண்டீஸ் ஆயிற்றே, அவ்வளவு எளிதாக அந்த அணியைக் கழித்துக்கட்டிவிட முடியாது. சொல்லப்போனால், அதிர்ச்சி, ஆச்சர்யம் அனைத்தையும் கலந்து கொடுக்கும் பேக்கேஜ் அவர்கள். ஃபைனல் வரை சென்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை, 9 லீக் போட்டிகளில் தோற்றாலும் அதிர்ச்சியடையத் தேவையில்லை.

இந்த அணியின் பலம் அவர்களின் பேட்டிங்தான். கிறிஸ் கெய்ல், ஈவின் லூயிஸ், ஷாய் ஹோப், ஹிம்ரான் ஹிட்மேயர், ஆண்ட்ரே ரஸல் என அசத்தல் பேட்ஸ்மேன்கள் நிறைந்திருக்கின்றனர். ஏதேனும் சுமாரான பௌலிங் யூனிட் சிக்கினால், சில டஜன் பந்துகள் காணாமல் போகலாம். கெய்ல், ரஸல் ஆகியோரின் ஐ.பி.எல் ஃபார்ம் தொடர்ந்தால், அது கட்டாயம் நடக்கும்.

கிறிஸ் கெய்ல்
கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல், இந்தத் தொடரோடு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவதாகச் சொல்லியிருக்கிறார். தன் கிரிக்கெட் பயணத்தைச் சிறப்பாக முடிக்க எப்படியும் வெறிகொண்டு ஆடுவார். கடந்த முறை, உலகக் கோப்பையின் முதல் இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தவர், இம்முறை மேலும் சில சாதனைகள் படைக்க முயற்சி செய்யலாம். அதனால், கட்டாயம் கெய்ல் புயல் இங்கிலாந்தைச் சூறையாடும் என்று எதிர்பார்க்கலாம். இவர்களின் பேட்டிங் ஆர்டரில் இருக்கும் மிகப்பெரிய பிரச்னை, கெய்லுக்கும் ரஸலுக்கும் இடையில் இவர்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதுதான். அந்த அணியின் மிடில் ஆர்டர் நிலையற்ற ஆட்டம் ஆடுவது அடிக்கடி சிக்கல்கள் ஏற்படுத்துகிறது. இதையெல்லாம் சரி செய்யக்கூடிய ஒரே ஆள் ஷாய் ஹோப். அவரது ஆட்டம், வெஸ்ட் இண்டீஸின் அரையிறுதி வாய்ப்புக்கு மிகமுக்கியம்!

பேட்டிங் ஓரளவு பலமாக இருந்தாலும், பந்துவீச்சு கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது. ஒஷேன் தாமஸ், கீமர் ரோச் என எல்லோரிடமும் வேகம் இருக்கிறது. ஆனால், ரன் கொடுப்பதில் அவர்கள் வள்ளல்களாக இருப்பதுதான் பிரச்னை. அணியின் ஸ்பின்னர்கள் ஆஷ்லி நர்ஸ், ஃபேபியன் ஆலனும் அப்படித்தான். அணியின் அதிரடி மன்னர்கள் 400 ரன்கள் அடித்தாலும், எதிரணிக்கு அவ்வளவு ரன்கள் விட்டுக்கொடுக்க இவர்களால் முடியும். ஒருவேளை, சிறிய ஸ்கோர்கள் அடித்துவிட்டால், அவ்வளவுதான். மொத்தமாக காலி!

வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணியை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் இறுதிப் போட்டிக்கே முன்னேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை
சௌரவ் கங்குலி

கங்குலி சொன்னதுபோல், அந்த அணியைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. எந்த ஆச்சர்யத்தையும் அவர்கள் நிகழ்த்தலாம்!

கவனிக்கவேண்டிய வீரர்கள்

ஷாய் ஹோப்

ஹிட்டர்களாக நிறைந்திருக்கும் இந்த அணியின் உயிர்நாடி ஷாய் ஹோப்தான்! இந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, வீரர்களின் அதிரடி அணுகுமுறையால், ஒன்று 400 அடிக்கலாம், இல்லையேல் 40 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகலாம். கடந்த சில மாதங்களாக, அதை மிக அற்புதமாக பேலன்ஸ் செய்து, அணிக்கு மிகப்பெரிய 'ஹோப்' கொடுத்துக்கொண்டிருக்கிறார் இந்த ஷாய் ஹோப்.

ஷாய் ஹோப்
ஷாய் ஹோப்

விக்கெட்டுகளை ஒரு புறம் இழுத்துப் பிடிப்பதாகட்டும், ரன் சேஸ்களை துல்லியமாகக் கணக்கிட்டு கடைசிவரை போராடுவதாகட்டும், கடந்த சில ஆண்டுகளில் எந்த கரீபிய பேட்ஸ்மேனிடமும் பார்க்காத சில குணங்களைக் கொண்டிருக்கிறார். அதனாலேயே, அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அவரைச் சுற்றியே அமையும்.

ஷெல்டன் காட்ரல்

விக்கெட் வேட்டை நடத்துவாரா தெரியாது. மேட்ச் வின்னராக இருப்பாரா தெரியாது. எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவாரா தெரியாது. பின்னர், உலகக் கோப்பையில் இவரிடம் என்ன எதிர்பார்ப்பது? போட்டிக்கு ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினாலும் பரவாயில்லை. அதன்பிறகு அவர் செய்யும் அந்த செலிபிரேஷனைப் பார்க்கவேண்டியாவது அவரைக் கவனிக்கவேண்டும். மார்ச் பாஸ்ட் செய்து, சல்யூட் அடித்து, இன்னொரு டிரேட் மார்க் கரீபிய கொண்டாட்டத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் காட்ரல். பராசக்தி எக்ஸ்பிரஸ் தாஹிருக்குச் சவால் விடும் அந்த செலிபிரேஷனை அடிக்கடி பார்க்க யாருக்குத்தான் ஆசை இருக்காது?!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அட்டவணை

அடுத்த கட்டுரைக்கு