Published:Updated:

கேப்டன் கோலி ஓகே. ஆனால், பேட்ஸ்மேன் கோலி..? #SAvIND

Virat Kohli
Virat Kohli ( AP )

அவர் கொடுக்கும் அந்தக் கசப்பான மருந்தை அவருக்கே ஊட்டினார்கள் தென்னாப்பிரிக்க பௌலர்கள். வழக்கமான கோலியைக் காணவில்லை. 34 பந்துகளில் 18 ரன்கள். அந்த நம்பர்களில் பிரச்னை இல்லை. அந்த 34 பந்துகளையும் அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதுதான்!

இந்த எதிர்பார்ப்புகள் ஆண்டு முழுவதுமே இருப்பதுதான். எங்களுக்கு இது புதிதில்லை. பழகிவிட்டது. எங்கள் ரசிகர்கள், ஒவ்வொரு போட்டியிலும் நாங்கள் வெல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஒவ்வொரு போட்டியிலும் அதை நாங்கள் உணர்ந்துகொண்டுதான் இருக்கிறோம். எவ்வளவு நிதானமாக போட்டியை எதிர்கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்
விராட் கோலி

இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்புகளைப் பற்றிக் கேட்டபோது, இந்திய கேப்டன் கூறியவை. ஆனால், அதில் அவர் கூறிய அந்த நிதானத்தை, அவரே இழந்துவிட்டார் என்பதுதான் சோகம். முதல் போட்டியில் வெற்றி பெற்று, பாசிட்டிவாக உலகக் கோப்பையைத் தொடங்கியிருந்தாலும், இந்திய கேப்டனின் எதிர்பாராத ஒரு ஆட்டத்தைப் பற்றி கவலைப்பட்டாக வேண்டியிருக்கிறது.

2011 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம், 2015 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சதம் என எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். எதிர்த்து விளையாடும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சராசரி 109.87 (கடைசி 5 வருடங்களில்) என வியக்கவைக்கிறது. கேப்டனாக முதல் உலகக் கோப்பை போட்டி வேறு. விராட் கோலியின் மீதான எதிர்பார்ப்பு வழக்கம்போல் அதிகமாகவே இருந்தது. சொல்லப்போனால் வழக்கத்தை விடவும் அதிகமாகவே இருந்தது. கேப்டன் கோலி முதல் இன்னிங்ஸில் மிகச் சிறப்பாகச் செயல்பட, இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன் கோலி அந்த எதிர்பார்ப்புகளை பொய்யாக்கியிருக்கிறார்.

விராட் கோலி
விராட் கோலி
AP

முதலில் கேப்டன் கோலியைப் பற்றிப் பார்ப்போம்...

ஷார்ட் பால்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும் இந்த உலகக் கோப்பையில் சஹால் - குல்தீப் என இரு ஸ்பின்னர்களோடு களமிறங்க கொஞ்சமும் யோசிக்கவில்லை விராட். "தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின்போது, மிடில் ஓவர்களில் இவர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். எனவே இப்போதும் இவர்களின் தாக்கம் நிச்சயம் இருக்கும்" என்று டாஸின்போது கூறியிருந்தார். அவர் எதிர்பார்த்ததைப் போலவே மிடில் ஓவர்களில், தென்னாப்பிரிக்காவின் மிடில் ஆர்டரைப் பதம் பார்த்தது அந்த மாயக் கூட்டணி. அவர்களுக்கு சரியான ஸ்பெல்களைக் கொடுத்து சரியாகக் கையாண்டார் கோலி.

எதிரணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் நிறைந்திருந்தனர். பொதுவாக, அவர்களுக்கு எதிராக ஆஃப் ஸ்பின்னர்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஆனால், ஜாதவை விட சஹாலையே அதிகம் பயன்படுத்தினார். மில்லர், டுமினி போன்றவர்கள் சஹாலுக்கும் குல்தீப்புக்கும் எதிராக மிகமோசமான ரெக்கார்டு வைத்திருக்கின்றனர். அதனால், நம்பிக்கையோடு சஹாலுக்கு ஓவர் கொடுத்தார். விக்கெட்டுகள் எளிதாகக் கிடைத்தன. 3 வேகப்பந்துவீச்சாளர்களோடு களமிறங்குவது, ஆஃப் ஸ்பின்னர்களைப் பயன்படுத்துவது என்று டெம்ப்ளேட் விஷயங்களை கோலி செய்யவே இல்லை. தன்னுடைய அணி மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை அப்படியே அவர்கள் போட்டியில் பிரதிபலித்தனர்.

ஆறாவது ஓவரின் முதல் பந்து
ஆறாவது ஓவரின் முதல் பந்து

கோலியின் கேப்டன்ஷிப்பைப் போட்டியின் நடுவே, முன்னாள் கேப்டன் கங்குலி கூடப் பாராட்டிக்கொண்டிருந்தார். காரணம், டி காக் விக்கெட்டை எடுப்பதற்கு கோலி செய்த மாற்றம். ஆறாவது ஓவரை பும்ரா பந்துவீச வந்தபோது இரண்டு ஸ்லிப் ஃபீல்டர்கள் நின்றிருந்தனர். அந்த ஓவரில் தேர்ட் மேன் திசையில் சிங்கிள் எடுத்தார் டி காக்.

ஆறாவது ஓவரின் மூன்றாவது பந்து
ஆறாவது ஓவரின் மூன்றாவது பந்து

உடனடியாக, மூன்றாவது பந்தில், பேக்வேர்ட் பாயின்ட் பொசிஷனில் நின்றுகொண்டிருந்த கோலி, மூன்றாவது ஸ்லிப்பில் போய் நின்றார். இரண்டே பந்துகள் கழித்து, அவரது கையில், அந்த மூன்றாவது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டி காக். பும்ரா ரொம்பவும் ஷார்ட்டாகவெல்லாம் வீசவில்லை. குட் லென்த்தில்தான் பந்துவீசினார். அதற்கு ஏற்ப, சரியாக அந்த மாற்றம் செய்தார். உடனடியாக அதற்கான பலன் கிடைத்தது.

தென்னாப்பிரிக்கா போன்ற அணிக்கெதிராக 3 ஸ்லிப் ஃபீல்டர்களுடன் கிட்டத்தட்ட டெஸ்ட் மேட்ச் ஃபீல்டிங் செட் அப்போடு ஆடுவது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஒரு வகையில் அது ரிஸ்க்தான். ஒன்று, விக்கெட் விழும். இல்லை, பேட்ஸ்மேன்கள் சுதாரித்து விளையாடினால் எளிதாக அவர்களுக்கு ரன் கிடைக்கும். கோலி, அந்த ரிஸ்க் எடுக்கத் தயங்கவில்லை. அவர் எப்போதும் சொல்வதுபோல் '10 விக்கெட் எடுக்கவேண்டும்' என்பதில் குறியாக இருந்தார். அதற்கான அனைத்து ரிஸ்கையும் யோசிக்காமல் எடுத்தார். இந்தியா தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தியது.

விராட் கோலி
விராட் கோலி

ஒரு போட்டியில் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்துவது என்பது மிகவும் முக்கியம். உளவியல் ரீதியாக அது எதிரணியை, எதிரணி வீரர்களை பாதிக்கும். நமக்கு அது கூடுதல் சாதகமாக அமையும். கடந்த ஆறேழு ஆண்டுகளாக பேட்ஸ்மேன் கோலியின் அசாத்திய வளர்ச்சிக்குக் காரணம் தொடக்கத்திலிருந்து பௌலர்கள்மேல் அவர் செலுத்தும் ஆதிக்கம். அதிரடியாக ஆடாவிட்டாலும், தன் நேர்த்தியான நிதானமான ஆட்டத்தால் பௌலர்களின் உளவியலில் தாக்கம் ஏற்படுத்தத் தொடங்கிவிடுவார். பந்துவீசுபவர்களின் திட்டங்களையெல்லாம் உடைத்து, சிறிது நேரத்திலேயே அவர்களை நிராயுதபாணியாக்கிவிடுவார். ஆனால், நேற்று..!

அவர் கொடுக்கும் அந்தக் கசப்பான மருந்தை அவருக்கே ஊட்டினார்கள் தென்னாப்பிரிக்க பௌலர்கள். வழக்கமான கோலியைக் காணவில்லை. 34 பந்துகளில் 18 ரன்கள் அடித்த அந்த நம்பர்களில் பிரச்னை இல்லை. அந்த 34 பந்துகளையும் அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதுதான்! அவர் சந்தித்த முதல் பந்திலேயே முரட்டு பௌன்சர் ஒன்றை வீசி, "வாங்க பேசுவோம்" என்று கோதாவுக்கு அழைத்தார் ரபாடா.

ஹிட்மேன், சஹால் அசத்தல்.. வெற்றியோடு தொடங்கியது இந்தியா #INDvSA #LiveUpdates

உண்மையில், மிகவும் மிரட்டலான பந்து அது. எதிர்பாராத வேகத்தில் தலையைக் குறிவைத்து பாய்ந்தது. முதல் பந்திலேயே அப்படியொரு பௌன்சரை கோலி எதிர்பார்த்திருக்கமாட்டார். கோலியின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது தென்னாப்பிரிக்கா. விராட் பின்தங்கத் தொடங்கினார்.

South Africa pacers vs Kohli
South Africa pacers vs Kohli

கோலிக்கு, குறைந்தபட்சம் இரண்டு ஸ்லிப் ஃபீல்டர்களை நிற்க வைத்திருக்கிறார் டுப்ளெஸ்ஸி. ஜேம்ஸ் ஆண்டர்சன் உலகுக்கு அறிமுகம் செய்துவைத்து கோலியின் பலவீனத்தை, ஆண்டர்சனின் நாட்டில் தெளிவாகப் பயன்படுத்தினார்கள் தென்னாப்பிரிக்க பௌலர்கள்.

சரியாக நான்காவது ஸ்டம்ப் லைனில் ஒவ்வொருவரும் பந்துவீசினர். தொடர்ச்சியாக அங்கு வீசாமல், ஒரு பந்தை மிடில் ஸ்டம்ப் லைனிலும், அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேவும் வீசினர். அந்த வேரியேஷன் கோலிக்கு இன்னும் சிரமத்தைக் கொடுத்தது. சரி, தேர்டு மேன் ஏரியாவில் சிங்கிள் அடிக்கலாம் என்று பார்த்தால், கல்லி ஃபீல்டர் இருக்கிறார். அடிக்கும் பாதி பந்துகள் அங்குதான் செல்கிறது. கவர் திசையில் அடித்துவிட்டும் ஓட முடியவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே, மணிக்கு 146, 148 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளை ஃப்ளிக் செய்யவும் முடியவில்லை. டைமிங் தவறினால் எளிதாகக் காவு வாங்கிவிடும். இப்போது, கோலி நிராயுதபாணியாய் நிற்கிறார்!

11-வது ஓவரை வீச வருகிறார் தாஹிர். சரி, இவரையாவது அட்டாக் செய்யலாம் என்று அவர் சந்தித்த முதல் பந்தையே, பலம் கொண்டு நேராக அடிக்கிறார். ஆனால், அதுவும் தாஹிரைத் தாண்டவில்லை. கோலியால் ஆட்டத்துக்குள் நுழையவே முடியவில்லை. அடுத்த ஓவரில்தான் கோலியின் மிகப்பெரிய பிரச்னையே தொடங்கியது. சொல்லப்போனால், நேற்று அவரை ரபாடாவைவிட மிகவும் அதிகமாக சோதித்தது ஃபெலுக்வாயோதான். அவரது 'pace' வேரியேஷன் கோலியை வாட்டியது.

South Africa pacers vs Kohli
South Africa pacers vs Kohli

12-வது ஓவரில் ஸ்டம்புகளுக்கு வெகு தொலைவில் ஒரு பௌன்சர். அதை ஆடவேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அடிக்கிறார் விராட். பந்தின் வேகமோ 126 km/hr. அந்த வேகத்தைச் சரியாகக் கணிக்காமல், ஒரு மிகவும் சுமாரான ஷாட். 14-வது ஓவரின் முதல் பந்து... இதுவும் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வருகிறது. கவர் திசையில் ஆட முற்படுகிறார் கோலி. மீண்டும் வேகம் (128 km/hr) ஏமாற்றுகிறது. வேகத்தைக் கணிக்காமல் முன்பே ஆட, எட்ஜாகி கல்லி ஏரியாவை நோக்கிப் பறக்கிறது பந்து.

தென்னாப்பிரிக்கர்களுக்கு உண்டான ராசி, எப்போதும் வேலை செய்யுமல்லவா. அப்போதுதான் கல்லி ஃபீல்டரை வெளியே எடுத்திருந்தார் டுப்ளெஸ்ஸி! இல்லையெனில் அப்போது கோலி அவுட்! வேகத்தைக் கணிப்பதில் முற்றிலும் சொதப்பினார் விராட்.

இன்னொரு பக்கம், தாஹிர் கொஞ்சம் கூட வளைந்துகொடுக்கவில்லை. ஷ்ரேயாஸ் கோபால் போல் ஃபுல் லென்த்திலேயே அவர் பிட்ச் செய்ததால், எந்த ரிஸ்கும் எடுக்கவில்லை கோலி. அவர்மீதான நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருந்தது. 16-வது ஓவர்வீச வருகிறார் ஃபெலுக்வாயோ. முதல் பந்து ஃபுல் லென்த், ஸ்டம்புகளை நோக்கி வர தடுத்தாடினார் விராட். அடுத்த பந்து ஷார்ட் லென்த், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே... தன் முதல் பௌண்டரியை மிட் விக்கெட் திசையில் அடித்தார். அந்த பௌண்டரி அவருக்கு அதீத நம்பிக்கை அளித்திருக்கவேண்டும். தன் வழக்கமான ஆட்டத்தை ஆட நினைத்திருக்கவேண்டும். ரன் எடுப்பதில் ஆர்வம் காட்டினார் கோலி.

ஓவரின் மூன்றாவது பந்து... ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே... தேர்ட் மேன் ஏரியாவில் அடிக்க நினைக்கிறார். அடித்தார். ஆனால், எட்ஜாகி கீப்பரிடம் செல்கிறது. பாய்ந்து அற்புதமான கேட்சைப் பிடித்தார் டி காக். கோலி அவுட்!

விராட் கோலி - ஃபெலுக்வாயோ
விராட் கோலி - ஃபெலுக்வாயோ

இந்த ஓவரிலும் அவரை ஏமாற்றியது ஃபெலுக்வாயோவின் வேகம்தான். அதுவரை கோலிக்கு, மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்துக்கும் குறைவாகவே வீசிக்கொண்டிருந்தவர், அந்த ஓவரில் தன் வேகத்தைக் கூட்டினார். முதல் பந்து 129 km/hr. இரண்டாவது பந்து 130 km/hr. விக்கெட்டை வீழ்த்திய மூன்றாவது பந்து 131 km/hr! வேகத்தை இப்போதும் சரியாகக் கணிக்கவில்லை. தாமதமாக ஆடினார், எட்ஜாகி வெளியேறினார்.

கோலிக்கு எதிராக ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசும் யுக்தியைச் செயல்படுத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது தென்னாப்பிரிக்கா. அதைப் பார்க்கும்போது பழைய இங்கிலாந்து தொடரின் நினைவுகள் வந்துபோகத்தான் செய்கின்றன. மற்ற அணிகளும் இதை செயல்படுத்தினால் என்ன ஆகும் என்று நினைக்கையில் பதற்றமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைவிட பெரிய சோகம், தான் மிகவும் துல்லியமாக இருக்கும் ஒரு விஷயத்திலும் நேற்று கோலி கோட்டைவிட்டார் என்பதுதான்.

விராட் கோலி
விராட் கோலி

பந்தின் வேகத்தைக் கணிப்பதில் கோலி தவறு செய்திருப்பது மேலும் கவலையை அதிகரிக்கிறது. உலகக் கோப்பை போட்டிகளில் அவரது பங்களிப்பு முக்கியம் எனும்போது, அவர் புதிதான தவறுகள் செய்வது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு.

எப்போதும் கோலியின் பேட்டிங் பாராட்டுகளையும், கேப்டன்ஷிப் விமர்சனங்களையுமே எதிர்கொள்ளும். நேற்றைய போட்டி அதிலும் ஒரு விதிவிலக்கு. கேப்டன் கோலியை விட, இந்த அணிக்கு பேட்ஸ்மேன் கோலியின் பங்களிப்பு அதிகம் தேவை. கோலி மீண்டு வரவேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு