Published:Updated:

உண்மையில் விஜய் சங்கருக்குக் காயம்தானா?

விஜய் சங்கர்
விஜய் சங்கர்

ஷிகர் தவானுக்குக் காயம் ஏற்பட்டபோது, ஸ்கேன் ரிப்போர்ட் முடிவுகள் வர மூன்று நாள்கள் ஆகும் எனத் தெரிவித்திருந்த பி.சி.சி.ஐ, விஜய் சங்கர் விஷயத்தில் அவசரம் காட்டுவது கிரிக்கெட் ரசிகர்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளது

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்த இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது. கால்விரலில் ஏற்பட்ட காயமாக ஆல்-ரவுண்டர் விஜய் சங்கருக்கு இந்தப் போட்டியில் ஓய்வளித்திருப்பதாக டாஸின்போது கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார். இது குறித்து இன்று பி.சி.சி.ஐ அளித்த விளக்கத்தில், காயம் குணமடையாததால் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து விஜய் சங்கர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் இணைய இருப்பதாகவும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

11 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணிக்கு அரை இறுதி செல்வதில் பெரிய சிக்கலில்லை. ஜூலை 2,6 தேதிகளில் வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இரண்டு லீக் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றாலே இந்திய அணி அரை இறுதி செல்வது உறுதியாகும்.

இந்திய அணி
இந்திய அணி

முக்கியமான கட்டத்தில், ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் வெளியேறியுள்ளது அணியின் பேட்டிங் ஆர்டரை பாதிக்கும். ஏற்கெனவே, கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓப்பனர் ஷிகர் தவான் உலகக் கோப்பையிலிருந்து வெளியேறினார். ஷிகர் தவானுக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் இடம் பெற்றார். இதனால் ஓப்பனிங், மிடில் ஆர்டர் என இந்திய அணியின் பேட்டிங்கில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் களமிறங்கிய ராகுல் டக்-அவுட்டாக, நான்காவது இடத்தில் ரிஷப் பன்ட் களமிறங்கினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில்தான் இந்திய அணி சேஸ் செய்தது. 337 ரன்களை சேஸ் செய்த இந்திய அணி, 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட விஜய் சங்கர், இடைவெளியின் போது ஓடி வந்து `ட்ரிங்ஸ்' கொடுத்தது சமூக வலைதளத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. 'உண்மையாகவே விஜய் சங்கருக்கு காயம் தானா?', 'காயம்பட்ட விஜய் சங்கர் ஓடி வருவது எவ்வாறு சாத்தியம்? விஜய் சங்கருக்கு ஓய்வளித்ததில் சந்தேகம் இருக்கிறது' என நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர்

கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். `காயம் காரணமாக ஓய்வளிக்கப்பட்ட விஜய் சங்கர் ஏன் ஓடி வந்து ட்ரிங்ஸ் அளிக்க வேண்டும். இந்த வேலையைச் செய்ய வேறு யாரும் இல்லையா?" என ட்வீட் செய்துள்ளார்.

ஷிகர் தவானுக்கு காயம் ஏற்பட்டபோது, ஸ்கேன் ரிப்போர்ட் முடிவுகள் வர மூன்று நாள்கள் ஆகும். அதைப் பொறுத்தே உலகக் கோப்பையில் தவான் தொடர முடியுமா இல்லையா என்பது பற்றிச் சொல்ல முடியும் எனத் தெரிவித்திருந்த பி.சி.சி.ஐ, விஜய் சங்கர் விஷயத்தில் அவசரம் காட்டுவது கிரிக்கெட் ரசிகர்களிடையே சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு