Published:Updated:

மைக்கேல் கேட்டிங்கின் அந்த ஷாட்... இன்னும் காத்திருக்கிறது இங்கிலாந்து! #WorldCupMemories

மைக்கேல் கேட்டிங்கின் அந்த ஷாட்... இன்னும் காத்திருக்கிறது இங்கிலாந்து! #WorldCupMemories
மைக்கேல் கேட்டிங்கின் அந்த ஷாட்... இன்னும் காத்திருக்கிறது இங்கிலாந்து! #WorldCupMemories

கேட்டிங் மட்டும் அன்று அந்த ஷாட் ஆடாமல் இருந்திருந்தால், இங்கிலாந்து அணியின் 40 ஆண்டுக்கால கனவு, 1987 நவம்பர் 8-ம் தேதியே நிறைவேறியிருக்கும். #WorldCupMemories

கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தானுக்குப் பிறகு ஆகச்சிறந்த ரைவல்ரி என்றால், அது ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதல்தான். 1987 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. ஐந்து முறை உலகச் சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு அதுதான் முதல் கோப்பை.

இன்று அந்த இரு அணிகள் லார்ட்ஸில் சந்திக்கின்றன. 1987 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் சந்தித்தபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் ஒரு ரீவைண்ட்.

கவனிக்கப்படாத வின்னிங் இன்னிங்ஸ்…

1987 ஃபைனலை நினைத்தாலே டேவிட் பூனின் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ், மைக் கேட்டிங்கின் ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்டீவ் வாஹின் கடைசிக்கு முந்தைய ஓவர் எனப் பல நினைவுகள் தோன்றும். ஆனால், அதே ஃபைனலில் மைக் வெலட்டாவின் `கேமியோ’ இன்னிங்ஸ் பற்றி யாரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. அது கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்ட ஒரு பொக்கிஷமாக அமைந்துவிட்டது.

டேவின் பூன் 75 ரன்கள் அடித்து முக்கியமான இன்னிங்ஸ் ஆடினார். ஆனால், கடைசி நேரத்தில் அணி தடுமாறியபோது அதிரடியாக ரன்கள் சேர்த்து, ஆஸ்திரேலியா இறுதியில் 252 ரன்கள் எடுக்க உதவினார் மைக் லெட்டா. இங்கிலாந்தின் ‘மைக்’ அடித்த ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டால், உலகக் கோப்பை கைநழுவிப்போனது என அப்போது எழுதிய பேனாக்கள், ஆஸ்திரேலியாவின் ‘மைக்’ அடித்த ரன்களைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை.

#WorldCupMemories
#WorldCupMemories

151-1 என மிக வலுவான நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா. ஆனால், அடுத்த 17 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து 168-4 எனத் தடுமாறியது. 39-வது ஓவரில் களமிறங்கினார் மைக் வெலட்டா. அவர், விவியன் ரிச்சர்ட்ஸ் போல ‘ஹார்ட் ஹிட்டர்’ கிடையாது. தன்னுடைய பலவீனத்தை உணர்ந்து ஃபூட் வொர்க்கைப் பயன்படுத்தி பவுண்டரிகளில் டீல் செய்வார். கடைசி 10 ஓவர்களில் 94 ரன்கள் அடித்தது ஆஸ்திரேலியா அணி. வெலட்டோ 31 பந்துகளில் 45 ரன்கள் (6 பவுண்டரிகள்) அடித்து இங்கிலாந்து 253 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவினார்.

ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் முக்கியமான நேரத்தில் கைகொடுத்த அவரது ஆட்டத்தைப் பற்றி, யாரும் பெரிதாகப் பேசவில்லை. ஆலன் பார்டர் தன் சுயசரிதையில் கூட, வெலாட்டின் ஆட்டத்தைப் பற்றி ஒரு வரிகூட குறிப்பிடவில்லை. 49-வது ஓவரில் இரண்டாவது ரன்னுக்கு பார்டர் ஓடி வந்த போது வெலட்டா அவரைத் திருப்பி அனுப்ப, அப்போது பார்டர் ரன் அவுட் ஆனார். அந்தக் கோபமாகக் கூட இருக்கலாம். பார்டர் சுயசரிதையில் தவிர்த்திருக்கலாம். ஆனால், 1987 ஃபைனல் ஸ்கோர்போர்டில், மைக் வெலாட்டா 31 பந்துகளில் 45* ரன்கள் எனப் பொறிக்கப்பட்டிருப்பதை யாராலும் மாற்ற முடியாது.

ரிவர்ஸ் ஸ்வீப்பால் ஆட்டம் ரிவர்ஸ் ஆன கதை…

கிரிக்கெட்டில் ஒரு பந்து, ஒரு ஷாட், ஒரு கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும். 1987 நவம்பர் 8, இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடந்த ஃபைனலிலும் அப்படி ஒரு நிகழ்வு நிகழ்ந்தது. அரையிறுதியில் இங்கிலாந்து, இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தன் சொந்த மண்ணில் மீண்டும் கபில் தேவ் உலகக் கோப்பையைத் தூக்கும் காட்சியை, கனவாகக் கொண்டிருந்த, இந்திய ரசிகர்களின் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தது இங்கிலாந்து.

அதுமட்டுமல்லாமல், ஆஸ்திரேலியா அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது. ஃபைனலில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதல். போட்டி நடப்பது ஈடன் கார்டன் மைதானத்தில். இந்திய ரசிகர்கள் யாருக்கு என்ற கேள்வியெல்லாம் எழவில்லை. ஏகமனதாக ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவெடுத்தனர். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அரையிறுதியில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியது. இரண்டு, ஆஸ்திரேலியா, பாகிஸ்தானை வீழ்த்தியது.

இங்கிலாந்து அணி 135-2 என வலுவான நிலையில் இருந்தது. இங்கிலாந்து கேப்டன் மைக் கேட்டிங் 41 ரன்களுடனும், ஓப்பனர் கிரஹம் கூச் 58 ரன்களுடனும் நன்றாக செட்டாகியிருந்தனர். ஆஸ்திரேலியா ஆஃப் ஸ்பின்னர் டிம் மே அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததால், வேறு வழியில்லாமல் களத்தில் பந்துவீச இறங்கினார், அப்போதைய ஆஸ்திரேலியா கேப்டன் ஆலன் பார்டர். பார்டர் ரெகுலர் பெளலர் இல்லை; பார்ட் டைம் பெளலர். ஆனால், அவரால்தான் அன்று ஆஸ்திரேலியாவுக்கு ஒரு ப்ரேக்த்ரோ கொடுக்க முடிந்தது.

தன் முதல் ஓவரை வீச வந்தார் பார்டர். முதல் பந்தையே ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார் மைக் கேட்டிங். பந்து அவரது தோள்பட்டையில் பட்டு கீப்பருக்குப் பின்னால் எகிறியது. அதை ஆஸ்திரேலியா கீப்பர் க்ரெக் டயர் அழகாக கேட்ச் பிடிக்க, கொல்கத்தா ஈடன் கார்டனில் கூடியிருந்த லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள், துள்ளிக்குதித்துக் கொண்டாடினர். மைக் கேட்டிங் செய்த அந்த தவறில் தொடங்கியது இங்கிலாந்தின் சறுக்கல். இறுதியில் 246 ரன்கள் மட்டுமே எடுத்து கோப்பையை இழந்தது இங்கிலாந்து.

#WorldCupMemories
#WorldCupMemories

அப்போது ரிவர்ஸ் ஸ்வீப் பிரபலமாகவில்லை. “இந்த ஷாட்டை ஏன் ஆட வேண்டும்?” என கேட்டிங் மீது சரமாரியாகக் குற்றச்சாட்டு எழுந்தது. கிழித்துத் தொங்கவிட்டன இங்கிலாந்து பத்திரிகைகள். அன்று கேட்டிங் ஆடிய அந்த ஷாட்டை இன்று நினைத்தாலும் இங்கிலாந்து ரசிகர்களுக்குக் கோபம் வரும்.

கிரிக்கெட்டில் இன்று ஆஸ்திரேலியா அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக உருவெடுப்பதற்கான விதை, அன்றுதான் விதைக்கப்பட்டது. கேட்டிங் மட்டும் அன்று அந்த ஷாட் ஆடாமல் இருந்திருந்தால், இங்கிலாந்து அணியின் 40 ஆண்டுக்கால கனவு 1987 நவம்பர் 8-ம் தேதியே நிறைவேறியிருக்கும்.

முன்பே சொன்னதுபோல, கிரிக்கெட்டில் ஒரு ஷாட்டால் ஆட்டமே கைவிட்டுப்போகும்... சில சமயம் உலகக் கோப்பையும் கூட!

அடுத்த கட்டுரைக்கு