Published:Updated:

44 ஆண்டுகளுக்கு முன் நடந்த வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் கிளாசிக்! #WorldCupMemories

44 ஆண்டுகளுக்கு முன் நடந்த வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் கிளாசிக்! #WorldCupMemories
44 ஆண்டுகளுக்கு முன் நடந்த வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் கிளாசிக்! #WorldCupMemories

பாகிஸ்தான் அந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் 3 அணிகளும் 8 புள்ளிகள் பெற்றிருக்கும். ரன்ரேட்டில் அந்த 3 அணிகளிலும் குறைவான ரன்ரேட் கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் வெளியேற நேர்ந்திருக்கும். உலகக்கோப்பையின் வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும்!

வெஸ்ட் இண்டீஸ், ஒரு காலத்தில் உலகக்கோப்பை என்றாலே அவர்கள்தான் என்றிருந்தது. முதல் இரண்டு உலகக்கோப்பைகளையும் தங்கு தடையின்றி வென்றவர்கள், அடுத்த முறை லேசாகச் சறுக்கினார்கள். இருந்தாலும், அவர்களின் அந்தப் பெயர் கொஞ்சம்கூட சரிவைச் சந்திக்கவில்லை. காரணம், அந்தத் தொடரில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் அப்படிப்பட்டது.

1975, 1979 தொடர்களை, ஒரு தோல்வியைக்கூடச் சந்திக்காமல் வென்றது அந்த அணி. இரண்டாவது உலகக்கோப்பையில், இலங்கைக்கு எதிரான ஆட்டம் மட்டும் மழையால் கைவிடப்பட்டது. மற்ற 11 போட்டிகளிலுமே வென்றிருந்தது அந்த அணி. அதில் பல போட்டிகள் எதிர்ப்பே இல்லாமல் வென்றவை. பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே தீயாய் இருந்தனர் அந்தக் கரீபிய வீரர்கள்.

முதல் உலகக்கோப்பையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வெஸ்ட் இண்டீஸ் கோப்பை வென்றிருந்தது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவை அசால்டாக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியவர்கள், ஃபைனலில் கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள். அவ்வளவுதான். அரையிறுதியில் நியூசிலாந்தையெல்லாம் எளிதாக வீழ்த்தினார்கள். ஆனால், கிளைவ் லாய்ட், சர் விவியன் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ் போன்ற பேட்ஸ்மேன்கள் இருந்த அணியின் அந்த உலகக்கோப்பை, கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பால் காப்பாற்றப்பட்டது தெரியுமா?!

வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் ஆட வேண்டிய போட்டி. கரீபிய அணி, முதல் போட்டியில் இலங்கையை எளிதாக வீழ்த்தியது. பாகிஸ்தானோ ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றிருந்தது. இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டியது இரண்டு அணிகளுக்குமே முக்கியம். ஏனெனில், இந்தப் போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் வெளியேற வேண்டியிருக்கும். வெஸ்ட் இண்டீஸுக்குமே தோல்வி சிக்கல்தான். காரணம், பாகிஸ்தான் அணிக்கு மீதமிருந்த போட்டி இலங்கையுடன். அந்த 4 புள்ளிகள் நிச்சயம் கிடைத்துவிடும். அவர்களுக்கோ, ஆஸ்திரேலியாவுடன். அதனால் நெருக்கடி அதிகரித்துவிடும். அது எந்த மாதிரியான முடிவுக்கும் வழிவகுக்கும். எனவே, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் அந்தப் போட்டி முக்கியமானதாகவே இருந்தது.

முதலில் பேட்டிங் செய்து, 60 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். அந்த வெஸ்ட் இண்டீஸ் அட்டாக்குக்கு எதிராக அதுவே பெரிய ஸ்கோர்தான். ஓப்பனர் மஜீத் கான் அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முஸ்தாக் முகமது, வசீப் ராஜா ஆகியோரும் அரைசதம் கடந்தனர். அதிரடியாக ஆடிய வசீம் ராஜா 57 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். அவரது அதிரடிதான் பாகிஸ்தானின் ரன் ரேட்டைக் கூட்டியது.

அடுத்து 267 என்ற இலக்கோடு களமிறங்கியது கிளைவ் லாய்ட் அண்டு கோ. சர்ஃபராஸ் நவாஸ் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாத பேட்ஸ்மேன்கள், பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் அவுட்டாகிக்கொண்டிருந்தனர். அன்றைய காலகட்டத்தில், ஒருநாள் போட்டிகளின் தலைசிறந்த ஓப்பனர்களுள் ஒருவராக இருந்த கார்டன் கிரீனிட்ஜை, நான்கே ரன்களில் வெளியேற்றினார் நவாஸ். ஃப்ரெடெரிக்ஸ், கல்லிசரன் என அவரது பந்துவீச்சில் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தன.

ஓரளவு தாக்குப்பிடித்த ரோஹன் கன்ஹாய், நசீர் மாலிக் பந்துவீச்சில் போல்டானார். ஐந்தாவது விக்கெட்டாக விவியன் ரிச்சர்ட்ஸ் வெளியேறும்போது அணியின் ஸ்கோர் 99! கேப்டன் கிளைவ் லாய்ட் கொஞ்சம் போராட, ஜூலியன் ஒருபுறம் நிலைத்து நின்றார். ஆனால் அவர்களும் அடுத்தடுத்து வெளியேற, பதற்றம் நிலவியது. இருப்பினும், எதைப் பற்றியும் கவலைகொள்ளாமல் போராடிக்கொண்டிருந்தார் விக்கெட் கீப்பர் டெரிக் முர்ரே. மறுபடியும் விக்கெட்டுகள் வீழ, 9 விக்கெட்டுக்கு 203 ரன்கள் என தோல்வியின் விளிம்பில் இருந்தது லாய்ட் அண்டு கோ.

அப்போது முர்ரேவுடன் கைகோத்தார் மிரட்டல் பௌலர் ஆண்டி ராபர்ட்ஸ். இருவரும் கடைசி விக்கெட்டுக்கு 64 ரன்கள் சேர்க்க, 2 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது அந்த அணி. அந்தப் போட்டியில் தோற்றிருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதிக்குத் தகுதிபெறுவதே சந்தேகமாயிருக்கும். ஏனெனில், 3 லீக் போட்டிகள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 12, ஆஸ்திரேலியா 8, பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் முதல் 3 இடத்தில் இருந்தன. பாகிஸ்தான் அந்த ஆட்டத்தில் வென்றிருந்தால் 3 அணிகளும் 8 புள்ளிகள் பெற்றிருக்கும். ரன்ரேட்டில் அந்த 3 அணிகளிலும் குறைவான ரன்ரேட் கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் வெளியேற நேர்ந்திருக்கும். உலகக்கோப்பையின் வரலாறு மாற்றி எழுதப்பட்டிருக்கும்!

அடுத்த கட்டுரைக்கு