Published:Updated:

`த்ரோ’வால் கைமாறிய கோப்பை - வருந்திய வில்லியம்சன்; மன்னிப்பு கேட்ட ஸ்டோக்ஸ்!

அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்குக் கைகொடுத்த த்ரோ (தோனியின் அவுட்), இறுதி ஆட்டத்தில் கைவிட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்!

ஸ்டோக்ஸ்
ஸ்டோக்ஸ்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம். இப்படி ஒரு பரபரப்பான கட்டத்தை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இரு அணிகளும் இறுதி பந்து வரை போராடியது. வெற்றியின் காற்று இருபக்கமும் மாறி மாறி வீசியது. சூப்பர் ஓவரும் `டையில்’ முடிய நொறுங்கிப்போனது நியூசிலாந்து.

நியூசிலாந்து
நியூசிலாந்து
AP

கடைசிக் கட்டத்தில் நியூசிலாந்து அணிதான் வெற்றிபெறும் என்ற நிலையில், இரண்டாவது ரன் எடுக்க ஓடும் பென் ஸ்டோக்ஸ் பேட்டில் தவறுதலாகப் பட்ட த்ரோ பவுண்டரிக்குச் சென்றது. இதனால் இங்கிலாந்து அணிக்குக் கூடுதலாக 4 ரன்கள் கிடைத்தது. இதுவே போட்டி டையில் முடிய முக்கிய காரணமாக அமைந்தது.

போட்டி முடிந்த பின்னர் பேசிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன், அந்த ஓவர் த்ரோ குறித்து பேசினார். அவர், ``எங்கள் த்ரோ ஸ்டோக்ஸ் பேட்டில் பந்து பட்டு பவுண்டரிக்குச் சென்றது அதிர்ச்சியளித்தது. அது வெட்கக்கேடானது. ஆனால், இது போன்ற பெரிய போட்டிகளின்போது இது மீண்டும் நடக்காது என்று எண்ணுகிறேன்.

வில்லியம்சன்
வில்லியம்சன்
AP

போட்டியை இந்த நிலைக்கு எடுத்து வர நியூசிலாந்து வீரர்கள் தங்களது முழு முயற்சியையும் உழைப்பையும் அளித்தனர். ஆனால், அந்தத் தருணத்தில் வீரர்கள் உண்மையில் உடைந்து போயினர். அதை ஏற்றுக்கொள்வது என்பது கடினமான காரியம். எனினும் எங்கள் வீரர்கள் சிறப்பாக விளையாடினர்” என்றார்.

பின்னர் பேசிய இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரினார். அதை அவர் வேண்டும் என்றே செய்யாத போதும் அதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆட்டநாயகன் ஸ்டோக்ஸ் பேசும்போது, ``கடைசி ஓவரில் த்ரோ செய்யப்பட்ட பந்து எனது பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. இதை வேண்டும் என்றே செய்யவில்லை. ஆனாலும், இதற்காக கனே வில்லியம்ஸனிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்றார்.

ஸ்டோக்ஸ்
ஸ்டோக்ஸ்
AP

இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் பேசும்போது, ``வில்லியம்ஸன் மற்றும் அவரின் அணி சிறப்பாக விளையாடியது என்பதை அவர்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன். அந்த அணியை அவர் வழிநடத்தும் விதம் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறது” என்றார். அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்குக் கைகொடுத்த த்ரோ (தோனியின் அவுட்), இறுதி ஆட்டத்தில் கைவிட்டவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்!