Published:Updated:

ஆப்கானின் 35 எக்ஸ்ட்ராஸ்.. இலங்கை வென்றது இப்படித்தான் #WorldCup2019

கார்த்திகா ராஜேந்திரன்

37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ஆப்கானிஸ்தான், முதல் இன்னிங்ஸில் மட்டும் வீசிய எக்ஸ்ட்ரா ரன்கள் 35! #WorldCup2019

இலங்கை அணி
இலங்கை அணி

2019 உலகக்கோப்பையின் ஏழாவது போட்டி. முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய இரு அணிகளும் வெற்றிக்கணக்கை தொடங்க கார்டிஃப் மைதானத்தில் மோதின. 1996 சாம்பியன்ஸ், உலகக் கோப்பை அனுபவம் வாய்ந்த இலங்கை அணி இந்த போட்டியில் தோற்றிருந்தால் ‘கத்துக்குட்டி’ என்ற பெயரெடுத்திருக்கும். சுமாரான பேட்டிங் கைகொடுக்காதபோதும் அசத்தலான பெளலிங்கால் முதல் வெற்றியை ஈட்டியது இலங்கை அணி.

குசல் பெரேரா (78)
குசல் பெரேரா (78)

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும், கிவிக்கு எதிரான லீக் போட்டியிலும் முழுமையாக 50 ஓவர்களை எதிர்கொள்ளாத இலங்கை அணியின் பேட்டிங் பரிதாபங்கள் நேற்றும் தொடர்ந்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் குசல் பெரேரா, திமுத் கருணரத்னேவைத் தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 201 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த திமுத், குசல் பெரேரா இணையின் பொறுப்பான ஆட்டத்தால் 92 ரன்கள் சேர்ந்தது. அடுத்த 100 ரன்கள் எடுப்பதற்குள் 10 விக்கெட்டுகளும் மடமடவென சரிந்தன

ஒரே ஓவர்...மூன்று விக்கெட்டுகள்

ஆப்கானின் ஹமித் ஹாசன், குலாப்தின் ஆகியோர் ரன்களை வாரி வழங்கி கொண்டிருந்தனர். ரன் வேட்டையை கட்டுப்படுத்த நபியின் சுழல் உதவியது. நபியின் பந்தை பிட்சில் இறங்கி அடித்த கேப்டன் திமுத் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இலங்கையின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்ட நபி மீண்டும் 22-வது ஓவர் வீச வந்தபோது இலங்கை பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். 21-வது ஓவரின் முடிவில் 144/1 என்றிருந்த இலங்கை, ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை பறிக்கொடுத்தது. குசல் மெண்டிஸ், மேத்யூஸ், தனஞ்சய என இலங்கையின் மிடில் ஆர்டர் மொத்தமும் நபியின் சுழலில் சிக்கியது.

4 விக்கெட்டுகள் வீழ்த்திய உற்சாகத்தில் முகமது நபி
4 விக்கெட்டுகள் வீழ்த்திய உற்சாகத்தில் முகமது நபி

8 பவுண்டரிகள் விளாசி 78 ரன்கள் எடுத்து இலங்கை பேட்டிங்கை சமாளித்து வந்த குசல் பெரேரா செஞ்சுரி அடிப்பார் என எதிர்பார்த்தபோது ரஷித் கானின் கூக்ளியில் சிக்கி பெவிலியன் திரும்பினார். இலங்கை அணி 180/8 என்றிருந்தபோது மழை குறிக்கிட்டதால் இரண்டு மணி நேரங்களுக்கு போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. மழை இடைவெளிக்குப் பின் மீண்டும் நடந்த முதல் இன்னிங்ஸில் இலங்கையின் மீதமிருந்த 2 விக்கெட்டுகளும் பறிபோக 36.5 ஓவர் முடிவில் 201 ரன்கள் எடுத்தது.

ரன் வேட்டையில் இருந்த இலங்கையை 201 ரன்களுக்கு ஆப்கான் பந்துவீச்சு கட்டுப்படுத்தியது என சொல்லிவிட முடியாது. முதல் இன்னிங்ஸில் மட்டும் ஆப்கான் பெளலர்கள் எக்கச்சக்க எக்ஸ்ட்ராஸ் வீசினர்! ஒவ்வொரு ஓவரிலும் எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்துக் கொண்டிருந்ததன் விளைவு சேஸிங்கின் போது பிரதிபலித்தது. 37 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற ஆப்கானிஸ்தான், முதல் இன்னிங்ஸில் மட்டும் வீச்ய எக்ஸ்ட்ரா ரன்கள் 35! (இதில் 22w, 3 nb, 10lb)

"2015 உலகக்கோப்பையில் கலக்கிய சங்ககராவைச் சந்தித்து ஆலோசனைப் பெற்றோம். முதல் வெற்றி உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பையில் இன்னும் சிறப்பாக விளையாடுவோம்"
இலங்கை அணி கேப்டன் திமுத் கருணரத்னே

ஆட்ட நாயகன் பிரதீப் (9-31-4)

D/L முறைப்படி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டு, ஆப்கானிஸ்தான் அணிக்கு 187 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எளிதான இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், தேவையற்ற ஷாட்களால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் அடுத்தடுத்து கேட்ச் கொடுத்து வெளியேறினர். முகமது சேஸாத், ரஹமத் ஷா, ஹஷ்மத்துல்லா ஒற்றைக் இலக்க ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஹஸ்ரத்துல்லா மட்டும் 30 ரன்களை எட்டினார். ஆப்கானின் நம்பிக்கை பேட்ஸ்மேனை வெளியேற்றும் பொறுப்பு நுவான் பிரதீப்புக்கு கொடுக்கப்பட்டது. அதைச் சரியாக செய்து முடித்தார் பிரதீப். 4-வது ஓவர் முடிவில் 29/1 என்றிருந்த ஆப்கானிஸ்தான் 14-வது ஓவரின் முடிவில் 57/5 தடுமாறியது.

ஆட்ட நாயகன் நுவான் பிரதீப்
ஆட்ட நாயகன் நுவான் பிரதீப்

முதல் இன்னிங்ஸில் இருந்த சுழற்பந்துவீச்சின் ஆதிக்கத்துக்கு நேரெதிராக இரண்டாவது இன்னிங்ஸின் வேகப்பந்துவீச்ச்சாளர்கள் ஆதிக்கம்தான் அதிகமிருந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 9 ஓவர்கள் வீசி, வெறும் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நுவான் பிரதீப் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருக்கும் ஆப்கானிஸ்தான் அடுத்த போட்டியில் நியூசிலாந்த்தைச் சந்திக்கிறது. சிறந்த பெளலிங் ஃபர்பாமென்ஸை கொடுத்தாலும், விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ஃபீல்டிங்கில் இன்னும் வலுபெற வேண்டியது கட்டாயம். இதுதான் ஆப்கானிஸ்தானுக்கு இரண்டாவது உலகக்கோப்பை என்றாலும், இந்த சீசனில் சில முக்கிய போட்டிகளில் வெற்றிகளை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் நிறைய தோல்வியைச் சந்தித்து நேற்றைய போட்டியில் மீண்டிருக்கும் இலங்கை அணி இன்னும் சிறப்பான கிரிக்கெட்டை ஆடத்தொடங்கவில்லை. பாகிஸ்தான், ஆஸ்திரேலியா என அடுத்தடுத்து முக்கிய போட்டிகள் வரிசையாக உள்ள நிலையில், இந்த வெற்றி இலங்கை அணிக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கும். இனி ஃபீல்டிங், பேட்டிங் என அணியில் சரி செய்ய நிறையவே இருக்கிறது. காத்திருப்போம்.!

கார்த்திகா ராஜேந்திரன்