Published:Updated:

மலிங்கா vs ரபாடா... வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் வேகம் யார்? #SLvSA

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மலிங்கா vs ரபாடா... வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் வேகம் யார்? #SLvSA
மலிங்கா vs ரபாடா... வெற்றியைத் தீர்மானிக்கப்போகும் வேகம் யார்? #SLvSA

ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். இதுவும் ஒரு 250 ஸ்கோர் ஆட்டமாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

யாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தப் போட்டியில் காலடி எடுத்துவைக்கிறது இலங்கை. அதேபோல், யாருமே எதிர்பாராத வகையில் இந்தத் தொடரில் சொதப்பி, அரையிறுதியை மறந்து கௌரவத்தைக் காப்பாற்றக் களமிறங்குகிறது தென்னாப்பிரிக்கா. ஒரு மாதத்துக்கு முன்பு கேட்டிருந்தால், கிட்டத்தட்ட `டேவிட் - கோலியாத்’ மோதலாகத்தான் இந்தப் போட்டி சொல்லப்பட்டிருக்கும். ஆனால், இப்போதோ சமபலம் கொண்ட அணிகளின் போட்டியாகக் கருதப்படுகிறது. ஆம், இரண்டு அணிகளும் இரு வேறு திசையில் பயணித்து இப்போது ஒரே இடத்தில் சந்திக்கின்றன.

இலங்கையின் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் திரிமண்ணேவுக்குப் பதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆடவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தோம். இலங்கை நிர்வாகம் அதைக் கடந்த போட்டியில்தான் செய்தது. உடனடியாக பலன் கிடைத்தது. தன் முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே 49 ரன்கள் (அதுவும் 39 பந்துகளில்!) அடித்து அணியை மீட்டார் அவிஷ்கா. திசாரா பெரேரா ஏற்கெனவே ஒவ்வொரு போட்டியிலும் அதிரடி காட்டிக்கொண்டிருக்க, இப்போது இவரது அதிரடியும் சேர்ந்திருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். கருணாரத்னே தன் வழக்கமான 'ஆங்கர்' இன்னிங்ஸ் ஆடி, இவர்கள் தங்கள் பாணியில் ஒரு பெரிய இன்னிங்ஸ் ஆடினால், இலங்கை மிரட்டும்.

Avishka Fernando
Avishka Fernando

6 போட்டிகளில் 6 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணிக்கு, இது மிகவும் முக்கியமான போட்டி. அடுத்த 3 ஆட்டங்களில் குறைந்தபட்சம் 2 வெற்றிகளாவது பெற்றால்தான் அரையிறுதியைப் பற்றி நினைக்க முடியும். அதிலும் இந்தியாவுடன் ஒரு போட்டி இருப்பதால், மற்ற இரண்டு போட்டிகளிலும் எப்படியாவது வெற்றி பெற முயற்சி செய்யவேண்டும். அதனால், இந்தப் போட்டியுமே அவர்களுக்கு ஒருவகையில் நாக் அவுட் போட்டிதான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செஸ்டர் லீ ஸ்டிரீட் மைதானத்தில் இப்போதுதான் இந்த உலக்க கோப்பையின் முதல் போட்டி நடக்கிறது. ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்கிறார்கள். இதுவும் ஒரு 250 ஸ்கோர் ஆட்டமாக இருக்கவே வாய்ப்பு அதிகம். மலிங்கா, ரபாடா இருவரில் யார் எதிரணியின் டாப் ஆர்டரைப் பதம் பார்க்கின்றரோ அவரின் அணி வெற்றி பெறவே வாய்ப்பு அதிகம்.

SL v SA
SL v SA

1992 தொடருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவை இலங்கை அணி உலகக் கோப்பைகளில் வீழ்த்தியது இல்லை. இதுபோன்ற ரெக்கார்டுகளை எந்த அணியும் பெரிதாக மாற்றவில்லை. பாகிஸ்தான், இந்தியாவிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறது, இங்கிலாந்து, இலங்கையிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறது. ஆனால், வரலாற்றை மாற்றி எழுதாவிடில் இலங்கை அணியின் உலகக் கோப்பை அந்த இடத்திலேயே முடிவுக்கு வந்துவிடும். ஒட்டுமொத்த உலகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, இங்கிலாந்தை வீழ்த்திய அந்த அணி, அதேபோன்ற ஒரு ஆட்டத்தை இன்று ஆடவேண்டும். மீண்டும் ஒரு எதிர்பாராத முடிவைக் கொடுக்கவேண்டும்.

பிளேயிங் லெவன்

இலங்கை வேகப்பந்துவீச்சாளர் நுவான் பிரதீப் காய்ச்சலால் அவதிப்படுவதால் இன்றைய போட்டியில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. அவருக்குப் பதிலாக சுரங்கா லக்மல் இன்று விளையாடலாம். அவர்கள் செய்யவேண்டிய ஒரு முக்கியமான மாற்றம் - ஜீவன் மெண்டிஸ். ஆடிய இரண்டு போட்டிகளில் அணிக்கு கொஞ்சம்கூடப் பங்களிக்கவில்லை. ஒரு டக், மற்றொரு போட்டியில் 1 ரன். பந்துவீசியதும் 4.1 ஓவர்கள்தான். அதிலும் எகானமி 8.16.

Lasith Malinga
Lasith Malinga

ஆல்ரவுண்டர் என்ற பெயரில் எதற்கு இவரை அணியில் எடுக்கிறார்கள் எனத் தெரியவில்லை. அதற்கு ஒரு பேட்ஸ்மேனையோ அல்லது பௌலரையோ எடுத்து, அந்த ஏரியாவைப் பலப்படுத்தலாம். தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சுழலுக்குக் கொஞ்சம் தடுமாறுவார்கள் என்பதால் முழுநேர ஸ்பின்னரான ஜெஃப்ரி வாண்டர்சேவை இறக்குவது அவர்களுக்குச் சாதகமாக அமையும். இலங்கையின் ஸ்குவாடில் இருக்கும் வீரர்களில் இன்னும் அவர் மட்டும்தான் விளையாடவில்லை. அவரையும் முயற்சி செய்து பார்ப்பதில் தவறேதும் இல்லையே!

தென்னாப்பிரிக்காவைப் பொறுத்தவரை, தான் எப்படிப்பட்ட பேட்ஸ்மேன் என்பதை மறந்திருக்கும் அம்லாவை ஓரங்கட்டிவிட்டு, மார்க்ரம் அந்த இடத்தில் களமிறக்கப்படலாம். இந்த உலகக் கோப்பையோடு ஓய்வுபெறும் டுமினிக்கு சில போட்டிகள் கொடுக்கப்படலாம். மற்றபடி, அணியை தூக்கி நிறுத்தும் வீரர்கள் யாரும் மீதமில்லை என்பதால், அந்த பேட்டிங் ஆர்டரை ஏதும் செய்ய முடியாது.

SL v SA
SL v SA

இலங்கை (உத்தேச அணி) : டிமுத் கருணரத்னே, குசல் பெரேரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஆஞ்சலோ மாத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, திசாரா பெரேரா, ஜீவன் மெண்டிஸ் / ஜெஃப்ரி வாண்டர்சே, இசுரு உடானா, சுரங்கா லக்மல், லசித் மலிங்கா.

தென்னாப்பிரிக்கா (உத்தேச அணி) : குவின்டன் டி காக், எய்டன் மார்க்ரம், ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, ராஸி வேன் டெர் டூசன், டேவிட் மில்லர், ஜே.பி.டுமினி / ஹஷிம் அம்லா, ஆண்டைல் ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ககிசோ ரபாடா, லுங்கி எங்கிடி, இம்ரான் தாஹிர்.

SL v SA
SL v SA

நேருக்கு நேர்

இந்த இரண்டு அணிகளும் இதுவரை மோதியுள்ள 76 போட்டிகளில், தென்னாப்பிரிக்கா 43 போட்டிகளிலும் இலங்கை 31 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டை (2003 உலகக் கோப்பை லீக் போட்டி) ஆனது. ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதின. 5 போட்டிகளிலும் தோற்று வைட்வாஷ் ஆனது இலங்கை! உலகக் கோப்பையில் ஆடிய 5 போட்டிகளில் மூன்றில் தென்னாப்பிரிக்கா வென்று முன்னணியில் இருக்கிறது. 2015 உலகக் கோப்பையின் காலிறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று இலங்கையை வெளியேற்றியது அந்த அணி.

இதற்கு முன்

இலங்கை

vs நியூசிலாந்து - 10 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

vs ஆப்கானிஸ்தான் - 34 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி (DLS)

vs பாகிஸ்தான் - மழையால் போட்டி ரத்து

vs வங்கதேசம் - மழையால் போட்டி ரத்து

vs ஆஸ்திரேலியா - 87 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs இங்கிலாந்து - 20 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி

தென்னாப்பிரிக்கா

vs இங்கிலாந்து - 104 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 21 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

vs இந்தியா - 6 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

vs வெஸ்ட் இண்டீஸ் - மழையால் போட்டி ரத்து

vs ஆப்கானிஸ்தான் - 9 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி (DLS)

vs நியூசிலாந்து - 4 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

vs பாகிஸ்தான் - 49 ரன்கள் வித்யாசத்தில் தோல்வி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு