Published:Updated:

பாகிஸ்தான் - 7, இலங்கை - 0 ; முதல் வெற்றிக்குப் போராடும் அடிபட்ட சிங்கம்! #PAKvSL

மு.பிரதீப் கிருஷ்ணா

உலகக் கோப்பையில், பாகிஸ்தானுக்கு இந்தியா எப்படியோ, அப்படி இலங்கைக்கு பாகிஸ்தான்!

பாகிஸ்தான் - 7, இலங்கை - 0 ; முதல் வெற்றிக்குப் போராடும் அடிபட்ட சிங்கம்! #PAKvSL
பாகிஸ்தான் - 7, இலங்கை - 0 ; முதல் வெற்றிக்குப் போராடும் அடிபட்ட சிங்கம்! #PAKvSL
போட்டி எண் : 11
தொடங்கும் நேரம் : மாலை 3 மணி
மைதானம் : கவுன்டி மைதானம், பிரிஸ்டோல்
#PAKvSL
#PAKvSL

இதுவரை...

பாகிஸ்தான்

முதல் போட்டி : vs வெஸ்ட் இண்டீஸ் - 7 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

இரண்டாவது போட்டி : vs இங்கிலாந்து - 14 ரன் வித்யாசத்தில் வெற்றி

இலங்கை

முதல் போட்டி : vs நியூசிலாந்து - 10 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

இரண்டாவது போட்டி : vs ஆப்கானிஸ்தான் - 34 ரன் வித்யாசத்தில் வெற்றி

நேருக்கு நேர்

இதுவரை இந்த இரு அணிகளும் 153 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 90 போட்டிகளில் பாகிஸ்தானும், 58 போட்டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டை ஆனது. 4 போட்டிகளில் முடிவு இல்லை. கடைசியாக மோதிய 10 போட்டிகளில் இரண்டில் மட்டுமே இலங்கை வென்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான உலகக் கோப்பை ரெக்கார்டு இன்னும் சுவாரஸ்யமானது. இதுவரை மோதிய 7 உலகக் கோப்பை போட்டிகளிலும் பாகிஸ்தானே வென்றுள்ளது. ஒரு போட்டியில்கூட இலங்கையால் வெல்ல முடியவில்லை. பாகிஸ்தானுக்கு இந்தியா எப்படியோ, அப்படி இலங்கைக்கு பாகிஸ்தான்!

#PAKvSL
#PAKvSL

போட்டி எப்படி இருக்கும்?

முதல் போட்டியில் படுதோல்வி, அடுத்த போட்டியில் வெற்றி என ஒரே மாதிரியான முடிவுகள் பெற்றிருக்கும் இந்த இரு அணிகளும் பிரிஸ்டோலில் இன்று மல்லுக்கட்டவுள்ளன. இந்தத் தொடரின் ஃபேவரிட்ஸான இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளதால் அதீத நம்பிக்கையோடு பாகிஸ்தான் அணி களமிறங்கும். அதுமட்டுமல்லாமல், இலங்கை அணியுடனான உலகக் கோப்பை வரலாறு, அந்த அணியின் சமீபத்திய ஃபார்ம் என அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாகவே அமையும்.

போட்டி நடக்கும் பிரிஸ்டோல் மைதானம், பேட்ஸ்மேன்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்கும். கடந்த மாதம் 359 ரன்களை மிக எளிதாக சேஸ் செய்து வென்றிருந்தது இங்கிலாந்து. எனவே பௌலர்களுக்குக் கடினமான போட்டியாக இருக்கக்கூடும். ஃபகார் ஜமான், பாபர் ஆசம், இமாம் உல் ஹக் மூவரில் யாரேனும் ஒருவரோ, இருவரோ சதமடிக்க வாய்ப்பிருக்கிறது.

#PAKvSL
#PAKvSL

இலங்கை என்ன செய்யவேண்டும்?

பாகிஸ்தானுக்கு எதிராக முதல் உலகக் கோப்பைப் போட்டியில் வெல்லவேண்டும் என்றால் இலங்கை அணி பல மாற்றங்களைச் செய்தாகவேண்டியிருக்கிறது. கருணரத்னே, திரிமன்னே, குசல் பெரேரா, திசாரா பெரேரா என எக்கச்சக்க இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதுவே அவர்களுக்குப் பின்னடைவாக அமையலாம். அதுவும் டாப் 3 முழுவதும் இடது கை பேட்ஸ்மேன்கள். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஹஃபீஸ், மாலிக் ஸ்பெல்லை வைத்து இடது கை பேட்ஸ்மேன்களுக்கு முட்டுக்கட்டை போட்டது பாகிஸ்தான். அவர்களுக்கு இலங்கையை எதிர்கொள்வது பெரும் பொருட்டாக இருக்காது. அதனால், டாப் ஆர்டரில் ஒரு வலது கை பேட்ஸ்மேனைக் களமிறக்குவது அவசியம். திரிமன்னேவுக்குப் பதில் அவிஷ்கா ஃபெர்னாண்டோவைக் களமிறக்கலாம்.

அதேபோல், அணியில் தனஞ்செயா டி சில்வா என்றொரு ஆல்ரவுண்டர் இருக்கிறார். இதுவரை அவருக்கு 1 ஓவர் மட்டுமே கொடுத்திருக்கிறார் கேப்டன் கருணாரத்னே. ஒன்று பந்துவீச்சில் அவரைப் பயன்படுத்தவேண்டும். இல்லையேல், அவரது பேட்டிங் சுமாராக இருந்ததால், அவருக்குப் பதிலாக ஒரு பேட்ஸ்மேனையே களமிறக்கலாம். சுழற்பந்துவீச்சாளர் ஜெஃப்ரி வாண்டெர்சேவைக் களமிறக்கினால், ஸ்பின் ஆப்ஷன்கள் அதிகமாகும். எப்படிப் பார்த்தாலும், பிளேயிங் லெவனில் ஓரிரு மாற்றங்கள் செய்வதே நல்லது.

Malinga
Malinga

யாரை மாற்றுகிறார்கள் என்பதையெல்லாம்தாண்டி, விளையாடும் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடவேண்டும். அதிரடியான தொடக்கம் கொடுக்கும் குசல் பெரேரா நிலைத்து நின்று ஆடுவது அவசியம். இரண்டு போட்டிகளிலும் சொதப்பிய குசல் மெண்டிஸ், மாத்யூஸ் இருவரும் இந்தப் போட்டியிலாவது நல்ல இன்னிங்ஸ் ஆடவேண்டும். இவர்களின் பேட்டிங் எப்படியிருக்கிறதோ, அதைப் பொறுத்துத்தான் வெற்றி வாய்ப்பு அமையும்.

பிளேயிங் லெவன்

பாகிஸ்தான் அணியில் பெரிதாக மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. மிஞ்சிப்போனால், விக்கெட்டுகள் வீழ்த்தத் தடுமாறும் ஹசன் அலிக்குப் பதிலாக இளம் வீரர் முகமது ஹஸ்னைன் களமிறக்கப்படலாம். இலங்கை அணியில் மேற்சொன்ன மாற்றங்கள் இருந்தால் நல்லது. அப்போதுதான் பாகிஸ்தானுக்கு ஓரளவாவது சவால் கொடுக்க முடியும்.

#PAKvSL
#PAKvSL

பாகிஸ்தான் (உத்தேச அணி) : இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் ஆசம், முகமது ஹஃபீஸ், சர்ஃபராஸ் அஹமது, ஷோயப் மாலிக், ஆசிஃப் அலி, சதாப் கான், முகமது ஆமிர், ஹசன் அலி / முகமது ஹஸ்னைன், வஹாப் ரியாஸ்

இலங்கை (உத்தேச அணி) : டிமுத் கருணரத்னே, லஹிரு திரிமன்னே / அவிஷ்கா ஃபெர்னாண்டோ, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், ஆஞ்சலோ மாத்யூஸ், திசாரா பெரேரா, தனஞ்செயா டி சில்வா / ஜீவன் மெண்டிஸ், இசுரு உடானா / ஜெஃப்ரீ வாண்டர்சே, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், லசித் மலிங்கா.