Published:Updated:

`குட்டிப் புலி’களைச் சமாளிக்குமா தென்னாப்பிரிக்கா?! #WorldCup2019

கார்த்திகா ராஜேந்திரன்

எதிர்பார்த்தது போல, சுமாரான பேட்டிங்கால் தென்னாப்ரிக்காவின் வெற்றி பறிபோனது. ஸ்டெயின் இல்லாதபோதும் சரியாகச் சமாளித்து வரும் பெளலிங் யூனிட்தான் தென்னாப்பிரிக்காவின் ஒரே ஆறுதல்.

#WorldCup2019
#WorldCup2019

போட்டி எண் : 5

தென்னாப்பிரிக்கா - வங்கதேசம்

நேரம்: மாலை 3 மணி

இடம்: ஓவல், லண்டன்

#WorldCup2019
#WorldCup2019

2019 கிரிக்கெட் உலகக்கோப்பையின் தொடக்கப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவிய தென்னாப்பிரிக்கா அணி, முதல் வெற்றியை நோக்கிக் களமிறங்குகிறது. 2007-ம் ஆண்டு இந்தியாவையும், 2015-ம் ஆண்டு இங்கிலாந்தையும் உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றிய `குட்டிப்புலி' வங்கதேசம் இந்த முறையும் தரமான சம்பவங்களைச் செய்ய காத்திருக்கிறது. போட்டியை வென்றால் இரண்டு அணிகளுக்குமே இது முதல் வெற்றி என்பதால் வரலாற்றுச் சிறப்புமிக்க கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் வெற்றித் தடம் பதிக்க இரு அணிகளும் பலமாக தயாராகி வருகின்றன. #WorldCup2019

முதல் போட்டியில் டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா அணி, சேஸிங்கில் சொதப்பியது. எதிர்பார்த்தது போல, சுமாரான பேட்டிங்கால் தென்னாப்பிரிக்காவின் வெற்றி பறிபோனது. ஸ்டெயின் இல்லாதபோதும் சரியாகச் சமாளித்து வரும் பெளலிங் யூனிட்தான் தென்னாப்பிரிக்காவின் ஒரே ஆறுதல். தாஹிர், ரபாடாவின் மிரட்டல் பெளலிங் தென்னாப்பிரிக்காவுக்குக் கைகொடுக்கும். போட்டி நடைபெறும் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி 7 ஒரு நாள் போட்டிகளின் முதல் இன்னிங்ஸ் சராசரி 234. பேட்டிங்கிற்குச் சாதகமான இந்த பிட்சில் எளிதாக 300+ ரன்கள் எடுக்கலாம் என்பதால், தென்னாப்பிரிக்காவின் சீனியர் பேட்ஸ்மேன்கள் ஃபார்முக்கு வந்தால்தான் நல்லது.

#WorldCup2019
#WorldCup2019

வங்கதேசத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்ஃபிகுர் ரஹீமை தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லை. ருபெல் ஹொஸைன், ஷாகிக் அல் ஹசன்ம, சைஃபுதின் ஆகியோரின் பெளலிங் இந்திய அணியின் டாப் ஆர்டரை சொற்ப ரன்களுக்கு வெளியேற்றியது. பெளலிங்கை பற்றிப் பெரிதாக கவலை இல்லை. இந்த உலகக்கோப்பையில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இரு அணிகளுக்கும் தலா இரண்டு போட்டிகள் உள்ளன. தோல்வி அனுபவத்துடன் அதே மைதானத்தில் களமிறங்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு, ஓவலில் இது கடைசிப் போட்டி.

நேருக்கு நேர்:

இதுவரை இரு அணிகளும் மூன்று முறை உலகக் கோப்பை போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா இரண்டு முறையும், வங்கதேசம் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் மோதிய சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், தென்னாப்பிரிக்கா 17 போட்டிகளிலும், வங்கதேசம் மூன்று போட்டிகளும் வெற்றிபெற்றுள்ளன.

#WorldCup2019
#WorldCup2019

ப்ளேயிங் லெவன்:

வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெய்ன் காயத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை எனத் தெரிகிறது. முதல் போட்டியிலேயே டு ப்ளெஸ்ஸி இதைக் குறிப்பிட்டிருந்தார். மிடில் ஆர்டரை பலப்படுத்த மார்க்ரமுக்குப் பதிலாக டேவிட் மில்லர் களமிறங்கலாம். முழு உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் பிரிட்டோரியஸுக்குப் பதிலாக மோரிஸ் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கலாம்.

தென்னாப்பிரிக்கா (உத்தேசம்): டு ப்ளெஸ்ஸி (கேப்டன்), மார்க்ரம், ஹஷிம் ஆம்லா, டி காக், வான் டெர் டூசன், டுமினி, இம்ரான் தாஹிர், ப்ரிடோரியஸ், ரபாடா, பெலுக்வாயோ, லுங்கி நிகிடி.

வங்கதேசம் அணியில் தமீம் இக்பால் காயத்தில் இருப்பதால், அவர் இடம்பிடிப்பது சந்தேகமே.

வங்கதேசம் (உத்தேசம்): மொர்டசா (கேப்டன்), லிட்டன் தாஸ், செளமியா சர்கார், ஷகிப் அல் ஹசன், முகமது மிதுன், முஷ்ஃபிகுர் ரஹீம், மஹமதுல்லா, மொசடெக் ஹொசைன், சைஃபுதின், ருபெல் ஹொசென், முஸ்தஃபிசுர் ரகுமான்.

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

முக்கிய வீரர்கள்:

தென்னாப்பிரிக்கா: டி காக், டு ப்ளெஸ்ஸி, ரபாடா

வங்கதேசம்: முஸ்தஃபிசுர் ரகுமான், ஷகிப் அல் ஹசன்

கார்த்திகா ராஜேந்திரன்