Published:Updated:

‘உங்க இஷ்டத்துக்கு விளையாட முடியாது!’ - டிவில்லியர்ஸை நிராகரித்த தென்னாப்பிரிக்கா

ராம் பிரசாத்

ஒரு தலைப்பட்சமாக செயல்பட விரும்பாத கிரிக்கெட் வாரியம் டிவில்லியர்ஸின் கோரிக்கையை நிராகரித்ததாக தெரிகிறது

AB de Villiers
AB de Villiers

உலகக்கோப்பை தொடருக்கும் தென்னாபிரிக்காவும் அப்படி ஒரு பொருத்தம். உலகக்கோப்பை வரலாற்றில் தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்பட்ட நிலை வேறு எந்த அணிக்கும் ஏற்பட்டிருக்காது. வெற்றியை நோக்கி வீறுநடைப்போட்டு பயணித்துக்கொண்டிருப்பார்கள் திடீரென ஏதாவது நடைபெறும் எல்லாம் கையை விட்டுப்போய் விடும். இந்தமுறையும் தோல்வி முகத்துடன் தொடங்கிய தென்னாப்பிரிக்கா வரிசையாக கிடைத்த மூன்று தோல்விகளால் நிலைக்குலைந்து போயுள்ளது.

South Africa
South Africa

ஸ்டெயின் விலகல், லுங்கி ங்கிடி, ஹாசிம் ஆம்லா காயம் போன்றவை தென்னாப்பிரிக்கா அணிக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் கடந்த சில நாள்களாகவே தென்னாப்பிரிக்கா ரசிகர்கள் டிவில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று விட்டு தேசிய அணிக்காக விளையாட வேண்டும். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் அவரை அணுகவேண்டும் என சமூகவலைத்தளத்தில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடங்குவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு அணி நிர்வாகத்தை அவர் தொடர்புக்கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணிகளை தென்னாப்பிரிக்கா வெளியிடுவதற்கு முன்பாக அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ் உலகக்கோப்பை தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்து கேப்டன் டுப்ளிஸிஸ் மற்றும் அணி நிர்வாகத்தினரை தொடர்புகொண்டுள்ளார். ஆனால் அணி நிர்வாகம் அவரது கோரிக்கையை ஏற்கவில்லை .

தென்னாப்பிரிக்கா வீரர்
தென்னாப்பிரிக்கா வீரர்

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் விதிகளின் படி உள்ளூர் தொடர்களிலோ அல்லது தேசிய அணிக்காகவோ சில மாதங்களாவது விளையாடி இருக்க வேண்டும் . ஆனால் டிவில்லியர்ஸ் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார். இதனைக்காரணம் காட்டி அவரது விருப்பத்திற்கு கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் உலகக்கோப்பை தொடருக்காக தென்னாப்பிரிக்கா அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள வான் டர் குசைன் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். 4 ஒருநாள் போட்டிகளில் 3 அரைசதங்களை விளாசியுள்ளார். டிவில்லியர்ஸை மீண்டும் அணிக்கு அழைத்தால் வான் டெர் டஸனை வெளியேற்ற வேண்டும். ஒரு தலைப்பட்சமாக செயல்பட விரும்பாத கிரிக்கெட் வாரியம் டிவில்லியர்ஸின் கோரிக்கையை நிராகரித்ததாகத் தெரிகிறது.