Election bannerElection banner
Published:Updated:

தாஹிரின் 2 கூக்ளி, பெலுக்வாயோவின் 34 டாட் பால்… மிடில் ஓவரில் 8 / 5… தென்னாப்பிரிக்கா வென்ற கதை!

Imran Tahir celebrates taking the wicket of of Afghanistan's Asghar Afghan.
Imran Tahir celebrates taking the wicket of of Afghanistan's Asghar Afghan. ( AP )

தாஹிர் 4 விக்கெட்டுகள் எடுத்தாலும், கிறிஸ் மோரிஸ் கட்டுக்கோப்புடன் வீசியதும், பெலுக்வாயோ 34 டாட் பால்கள் வீசியதும் பாராட்டப்பட வேண்டியது.

முதல்முறையாக இங்கிலாந்தில் தென்னாப்பிரிக்கா மீது தென்றல் வீசியிருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வெற்றி என்றாலும், `ஆம், இப்போது கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது’ என பெருமூச்சுவிட்டார் தென்னாப்பிரிக்க கேப்டன் டு ப்ளெஸ்ஸி.

Noor Ali Zadran is bowled by South Africa's Imran Tahir.
Noor Ali Zadran is bowled by South Africa's Imran Tahir.
Ap

இங்கிலாந்து, வங்தேசம், இந்தியாவிடம் தோல்வியடைந்து, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால், அரையிறுதி வாய்ப்பைத் தக்க வைக்க இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில், கார்டிஃப் சோஃபியா கார்டன் மைதானத்தில் ஆப்கனை சந்தித்தது தென்னாப்பிரிக்கா.

ரஷித் கான், முகமது நபி சுழலை எப்படி தென்னாப்பிரிக்கா சமாளிக்கப் போகிறது என்ற கேள்வியெல்லாம் எழவில்லை. ஏனெனில் டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வுசெய்தார் டு ப்ளெஸ்ஸி. கடந்த வாரம் இதே மைதானத்தில் நடந்த இங்கிலாந்து – வங்தேசம் மோதிய போட்டியில் 666 ரன்கள் அடிக்கப்பட்டது.

 Imran Tahir celebrates taking the wicket of of Afghanistan's Noor Ali Zadran.
Imran Tahir celebrates taking the wicket of of Afghanistan's Noor Ali Zadran.

பிட்ச்சில் கொஞ்சம் புல் இருந்ததால், வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். பெளண்டரி லைனும் சிறியது என்பதால், ஸ்பின்னர்களுக்குப் பதிலாக கூடுதல் வேகப்பந்துவீச்சாளருடன் களமிறங்குவது நல்லது என்றே தெரிவிக்கப்பட்டது. ஆனால், முந்தைய நாளே இம்ரான் தாஹிர் விளையாடுவதை டு ப்ளெஸ்ஸி உறுதிசெய்துவிட்டார்.

ஆப்கன் ஓப்பனர் ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரபாடாவின் ஷார்ட் பாலில் டசனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்த சிறிது நேரத்தில் மழை பெய்தது. அது தென்னாப்பிரிக்காவுக்குச் சாகதமாக அமைந்தது. டு ப்ளெஸ்ஸி தன் டிரம்ப்கார்டு இம்ரான் தாஹிர் கையில் பந்தைக் கொடுத்ததற்கு கைமேல் பலன் கிடைத்தது.

முந்தைய மூன்று போட்டிகளிலும் தாஹிர் ஏகப்பட்ட வேரியஷன்களைப் பயன்படுத்தினார். ஆனால், எதுவும் ஒத்துழைக்கவில்லை. 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தார். ஆப்கனுக்கு எதிராக எல்லாமே அவருக்கு சாதகமாக அமைந்தது. தன் முதல் பந்திலேயே நூர் அலி ஜத்ரன் விக்கெட்டை எடுத்தார். ஆப்கன் பேட்ஸ்மேன்களில் அவர் மட்டுமே கொஞ்சம் தாக்குப்பிடிப்பது போல இருந்தது. அவரையும் கூக்ளியில் காலி செய்தார் தாஹிர். சரியான லென்த்தில் பிட்சான பந்து பேட்டுக்கும், பேடுக்கும் இடையே புகுந்து ஸ்டம்பை தகர்த்ததை, பார்க்கவே அழகாக இருந்தது.

Chris Morris celebrates taking the wicket of Afghanistan's Rahmat Shah with Faf du Plessis.
Chris Morris celebrates taking the wicket of Afghanistan's Rahmat Shah with Faf du Plessis.
AP

சீனியர் பேட்ஸ்மேன் ஆஷ்கர் ஆஃப்கன் இந்தப் போட்டியில்தான் களமிறங்கினார். மூன்றாவது பந்திலேயே அவரது ஆட்டத்தை முடித்தார் தாஹிர். அதுவும் கூக்ளி. பந்து டர்ன் ஆவதை கவனிக்கத் தவறிய ஆஷ்கர், தாஹிரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். 70/5 என நிலைகுலைந்தது ஆப்கன். அடுத்த ஓவரிலேயே பெலுக்வாயோ தன் பங்குக்கு முகமது நபியை பெவிலியன் அனுப்பி வைத்தார்.

தன் மூன்றாவது ஓவரில் ஆப்கன் கேப்டன் குல்பதினுக்கு செக் வைத்தார் தாஹிர். ஷார்ட் பாலை புல் ஷாட் அடிக்க முயன்றபோது, மிட் விக்கெட்டில் இருந்த மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்தார் குல்பதின். வழக்கமாக விக்கெட் எடுத்தவுடன் ஓட்டமாக ஓடும் தாஹிர், இந்தமுறை மார்க்ரமை கட்டியணைத்து பாராட்டினார். கேட்ச் அப்படி! 35 ரன்கள் எடுத்திருந்த ரஷித் கான், விக்கெட்டை எடுத்ததும் தாஹிரே!

7 ஓவர்களில் 29 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் எடுத்து, `பிட்ச் ஈரமாக இருந்தாலும் சரி, பெளண்டரி எல்லை சிறியதாக இருந்தாலும் சரி, தாஹிர் உலகத்தரம் வாய்ந்த பெளலர்’ என டு ப்ளெஸ்ஸி சொன்ன வார்த்தையை நிரூபித்தது, அந்த பாராசக்தி எக்ஸ்பிரஸ்.

தாஹிர் 4 விக்கெட்டுகள் எடுத்தாலும், கிறிஸ் மோரிஸ் கட்டுக்கோப்புடன் வீசியதும், பெலுக்வாயோ 34 டாட் பால்கள் வீசியதும் பாராட்டப்பட வேண்டியது. அதனால்தான் மிடில் ஓவர்களில் தட்டுத்தடுமாறியது ஆப்கன். 8 ரன்கள் இடைவெளியில் 5 விக்கெட்டுகளை இழந்தது. தேங்க்ஸ் டு தாஹிர். பெலுக்வாயோ.

காயத்தில் இருந்து மீண்ட லுங்கி எங்கிடி, வார்ம் அப் செய்தபோது பந்துவீசியிருக்கிறார். ஆனால், அடுத்த நான்கு போட்டிகளும் பெரிய அணிகளுக்கு எதிரான முக்கியமான போட்டிகள் என்பதால், ஆப்கனுக்கு எதிராக அவர் களமறிங்கவில்லை. அடுத்த போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் பட்சத்தில் தென்னாப்பிரிக்காவின் பெளலிங் அட்டாக் இன்னும் மிரட்டலாக இருக்கும்.

இலக்கு 131 ரன்கள் எனும்போது எப்பேற்பட்ட பெளலர்கள் இருந்தாலும், அதை டிஃபண்ட் செய்வது கடினம். இந்த இலக்கை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து தென்னாப்பிரிக்கா எளிதில் சேஸ் செய்தது. முடிந்தவரை நெட் ரன்ரேட்டை அதிகரிக்க வேண்டும் என்பதால், விரைவில் போட்டியை முடிக்க வேண்டும் என்பதில் தென்னாப்பிரிக்க ஓப்பனர்கள் டி காக், ஆம்லா இருவரும் தீர்க்கமாக இருந்தனர். ஆம்லா ஒருபுறம் நிதானமாக இருந்தாலும், டி காக் தனக்கே உரிய பாணியில் அரைசதம் கடந்தார்.

Amla Plays a reverse sweep.
Amla Plays a reverse sweep.
AP

ரஷித் கான் சுழலில் ஏமாறுவார் என எதிர்பார்த்தபோது, முதல் பந்தையே ஸ்வீப் செய்து பவுண்டரிக்கு விரட்டினார். 68 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானதும், விரைவில் போட்டியை முடிக்க வேண்டும் என இறக்கிவிடப்பட்டார் பெலுக்வாயோ. ஆம்லாவுடன் சேர்ந்து அவரும் ஆட்டத்தை முடித்துவைத்தார்.

தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது, ஆம்லா ஃபார்முக்குத் திரும்பிவிட்டார் என்றாலும், தனிப்பட்ட முறையில் அவர் ஒரு சாதனையை மிஸ் செய்துவிட்டார். அதிவேகமாக 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 7,000 ரன்களை அடித்த ஆம்லா, அதிவேகமாக 8,000 ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையைப் படைக்கத் தவறிவிட்டார். 175 இன்னிங்ஸில் 7,976 ரன்கள் எடுத்திருக்கும் அவர், ஆப்கனுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் அதிரடியாக ஆடியிருந்தால், விராட் கோலி சாதனையை சமன்செய்திருப்பார்.

Quinton de Kock in action against Afghanistan.
Quinton de Kock in action against Afghanistan.
Ap

இந்த உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பதிவுசெய்ததே பெரும் சாதனைதான் என்று நினைக்குமளவு மாறிவிட்டது தென்னாப்பிரிக்காவின் நிலைமை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு