Published:Updated:

`அடங்காத காளை’ பாண்டியா செய்ய வேண்டிய சின்ன அட்ஜஸ்ட்மென்ட்!

Hardik Pandya
Hardik Pandya ( AP )

பாண்டியாவின் ஆட்டத்திலும், நோக்கத்திலும் குறை சொல்ல முடியாது. அவர் ஒரு பின்ச் ஹிட்டர். அப்படித்தான் நின்றிருப்பார். அப்படித்தான் ஆடுவார். ஆனால், ஒரு தேர்ந்த பேட்ஸ்மேனாக தன்னை மெருகேற்றிக்கொள்ள வேண்டும் எனில், சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய உலகக் கோப்பை போட்டியின்போது, ஒரு கட்டத்தில் பெரிய ஷாட் ஆட முடியாமல் திணறிக்கொண்டிருந்தார் ஹர்திக் பாண்டியா. அப்போது வர்ணனையில் இருந்த செளரவ் கங்குலி, `பாண்டியா ஏன் திணறுகிறார்’ என்பதை நுணுக்கமாக எடுத்துச் சொன்னார்.

``பாண்டியா கிட்டத்தட்ட ஸ்டம்ப்பை ஒட்டி டீப்பில் நிற்கிறார். அதனால், ஆஃப் சைடில் ஃப்ரன்ட் ஃபூட் எடுத்து வைத்து ஒரு ஷாட் ஆடும்போது போதுமான பவர் கிடைக்காது. காட்ரெல் இதைச் சரியாகப் பயன்படுத்தி சரியான லைனில் பந்துவீசுகிறார். பாண்டியா திணறுகிறார்’’
செளரவ் கங்குலி

ஏப்ரல் 28, 2019... இடம்: கொல்கத்தா ஈடன் கார்டன்!

Hardik pandya
Hardik pandya

ஆண்ட்ரே ரஸல், 40 பந்துகளில் 8 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் எடுக்க, முதலில் பேட் செய்த கொல்கத்தா 232 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. மும்பை 198 ரன்கள் எடுத்து தோற்றது. மும்பை தோல்வியடைந்தாலும், ஹர்திக் பாண்டியா அன்று அடித்த அடி சாதாரண அடி அல்ல. 34 பந்துகளில் 91 ரன்கள். 9 சிக்ஸர்கள். மசில் பவர் ரஸலை விட ஒரு சிக்ஸர் அதிகம். ஸ்ட்ரைக் ரேட் 267.

ஜூன்30, 2019... இடம்: எட்ஜ்பேஸ்டன், பர்மிங்ஹாம்!

இந்தியா – இங்கிலாந்து மோதல். முதலில் பேட் செய்த இங்கிலாந்து 338 ரன்கள் எடுத்தது. ரோஹித் ஷர்மா அவுட்டானதும் களமிறங்கினார் ஹர்திக் பாண்டியா. அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 84 பந்துகளில் 140 ரன்கள் தேவை. கிட்டத்தட்ட ஐ.பி.எல் தொடரில் வெளுத்துக்கட்டியதைப் போல ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டும். பாண்டியாவும் தயாராக இருந்தார். கிறிஸ் வோக்ஸ் வீசிய 39–வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்தார். மூன்று பந்துகளுமே பேக் ஆஃப் லென்த்தில் பிட்ச்சாகி நான்கு அல்லது ஐந்தாவது ஸ்டம்பை நோக்கி வந்த பந்துகள். அதை வழக்கம் போல ஸ்டம்பை ஒட்டி நின்று முழு பலத்துடன் அடித்தார். அது லாங் ஆன், எக்ஸ்ட்ரா கவர், டீப் மிட் விக்கெட் திசைகளில் பவுண்டரிக்குச் சென்றது. அதுவரை பிரச்னையில்லை.

இதற்கிடையே ரிஷப் பன்ட் அவுட்டாகிவிட்டார். எதிர்முனையில் இருக்கும் தோனி அப்போதுதான் களமிறங்கியிருக்கிறார். ரன்னுக்கும் பந்துக்குமான இடைவெளி முன்பை விட அதிகம். அதனால் பாண்டியா அடித்தே ஆக வேண்டிய கட்டாயம். மீண்டும் கிறிஸ் வோக்ஸ் வருகிறார். பாண்டியா அதேபோல, ஆஃப் ஸ்டம்பை மிதித்துவிடுவது போல நிற்கிறார். வோக்ஸ் ஃபுல் டாஸாக வீசியதை பாயின்ட் நோக்கி அடிக்கிறார். அந்த ஷாட்டில் பவர் இல்லை. மோர்கன் பாய்ந்து பிடித்தார். பந்து அவர் கைகளில் சிக்கவில்லை. பவுண்டரி. அதுதான் பாண்டியா கடைசியாக அடித்த பவுண்டரி.

India's Hardik Pandya bats during the Cricket World Cup match between India and England in Birmingham.
India's Hardik Pandya bats during the Cricket World Cup match between India and England in Birmingham.
AP

அதற்குப்பின் இங்கிலாந்து பெளலர்கள் பாண்டியாவை பவுண்டரி அடிக்கவிடவில்லை. அவர் நிற்கும் பொசிஷனைப் பார்த்து, எப்படியும் டீப் மிட் விக்கெட், லாங் ஆஃன் அல்லது லாங் ஆஃப், எக்ஸ்ட்ரா கவர் ஏரியாவில்தான் அடிப்பார் என்று யூகித்து, அங்கு நல்ல ஃபீல்டர்களை நிறுத்தி இருந்தார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன். ரன் அடிக்க வேண்டிய நெருக்கடியில் இருந்த பாண்டியா, கூடுமானவரை பெரிய ஷாட் அடிக்க முயற்சித்தார். அந்தநேரத்தில் பந்துவீசிய ரஷீத், ஆர்ச்சர், வோக்ஸ் மூவரும், சரியான லென்த்தில் சரியான வேகத்தில் பந்துகளை வீசி பாண்டியாவுக்கு நெருக்கடி கொடுத்தனர்.

கங்குலி சொன்னதுபோல பாண்டியா அப்படியொரு பொசிஷனில் நின்றிருந்ததால், கட் ஷாட் ஆடுவதற்கு வழியுமில்லை. அதனால், தேர்ட் மேன் ஏரியாவில் ஃபீல்டர் நிற்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை. டிரைவ் ஆடினாலும் பவுண்டரி போக வாய்ப்பில்லை. அப்படியே ஆஃப் சைடில் ஓங்கி அடித்தாலும் அந்த ஷாட்டில் வீரியம் இல்லை. எக்ஸ்ட்ரா கவர் ஏரியாவில் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் மட்டுமே கிடைத்தது. கடைசியாக சிக்ஸர்கள் தேவைப்பட்ட நேரத்தில் பிளங்கட் பந்தில் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பாண்டியா வெளியேறியபோதே இந்தியாவின் தோல்வியும் உறுதியாகிவிட்டது.

இந்த இடத்தில் பாண்டியாவின் ஆட்டத்திலும், நோக்கத்திலும் குறை சொல்ல முடியாது. அவர் ஒரு பின்ச் ஹிட்டர். அப்படித்தான் நின்றிருப்பார். அப்படித்தான் ஆடுவார். ஆனால், இந்திய அணி சமீபகாலமாக அவரை மிடில் ஆர்டரில் மலையாக நம்பியிருக்கிறது. கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுக்க வேண்டிய புதிய பொறுப்பும் அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறது.

இதையெல்லாம் ஆலோசித்து அவர் தன்னை, ஒரு தேர்ந்த பேட்ஸ்மேனாக மெருகேற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு சில நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியதும் அவசியம். ஏனெில், நடப்பது ஐ.பி.எல் அல்ல, உலகக் கோப்பை. இங்கு ஒவ்வொரு வீரரின் பலம், பலவீனத்தையும் எதிரணியின் தொழில்நுட்பக் குழு நுட்பமாக ஆய்வுசெய்து வைத்திருக்கும். அதனால், இங்கு ஒரே ஷாட், ஒரே டெக்னிக்கை வைத்துக்கொண்டு காலத்தை ஓட்ட முடியாது.

`நீங்கள் பிரத்யேகமாக ஒரு ஷாட்டில் கில்லி எனில், எதிரணி உங்களை எளிதில் கட்டம் கட்டிவிடும்’’
ராகுல் டிராவிட்

பாண்டியா விஷயத்தில் அதுதான் நடந்தது. எதை நம் பலம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோமோ அதை எதிரணி நம் பலவீனமாகப் பார்க்கும். அதற்கேற்ப வியூகம் வகுக்கும். அதனால், தேவைப்படும் நேரத்தில் எது நம் ஃபேவரிட்டோ, அதைத் துறக்கவும் தயாராக இருக்க வேண்டும். டிரைவ் ஆடினால் சிக்கிவிடுவோம் என சிட்னி டெஸ்ட்டில் சதம் அடித்தபோதும் கூட, சச்சின் கவர் டிரைவ் ஆடவே இல்லை. ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் விக்கெட்டை இழக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்து வென்றார் விராட் கோலி.

Hardik Pandya Plays a Shot.
Hardik Pandya Plays a Shot.
AP

பாண்டியாவை அப்படியெல்லாம் தியாகம் செய்யச் சொல்லவில்லை. இயல்பான ஆட்டத்தை கைவிடச் சொல்லவில்லை. `இவன் இங்கதான் நிப்பான், இங்கதான் அடிப்பான், இப்படிப் போட்டா போதும்’ என எளிதில் வியூகம் வகுக்க மட்டும் அனுமதிக்கக் கூடாது. பொசிஷனை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். பெளலரை குழப்பிக்கொண்டே இருக்க வேண்டும். எதிரணியின் கேப்டனை மண்டை காய வைக்க வேண்டும். அவ்வளவே. அதற்கு பாண்டியா செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். நிற்கும் பொசிஷனை அவ்வப்போது மாற்றுவது.

ஒருவேளை, அடுத்தமுறை பாண்டியாவை சந்திக்கும்போது கங்குலியே இதை அவரிடம் சுட்டிக்காட்டலாம். ஆனால், அதற்கு முன் சப்போர்டிங் ஸ்டாஃப் ஒருவர் இந்த வேலையைச் செய்ய வேண்டும். ஏனெனில், பாண்டியா அடங்காத காளை... அவரை அடிமாடாக்கிவிடக்கூடாது!

அடுத்த கட்டுரைக்கு