Published:Updated:

காயம் காரணமாக ஷிகர் தவானுக்கு ஓய்வு... பிசிசிஐ-யின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?

மலையரசு

சிறிய முறிவுதான் அவரது விரலில் ஏற்பட்டுள்ளது என்பதால் ஒருவேளை மருத்துவர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினால் அவர் இரண்டு போட்டிகளில் ஓய்வு எடுக்க வேண்டி வரும். எனினும் இதனை பிசிசிஐ அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை...

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய வீரர் ஷிகர் தவான் காயம் காரணமாக அடுத்த இரண்டு மூன்று போட்டிகளில் விளையாடுவது சந்தேகம் என்பது தெரியவந்துள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து ஃபார்மை மீட்டெடுத்தார் இந்திய ஓப்பனர் ஷிகர் தவான். 95 பந்துகளில் சதமடித்து அசத்திய தவான் 117 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

தவான்
தவான்

ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த 17-வது சதம் இது. ஐ.சி.சி தொடர்களில் அவர் அடித்திருக்கும் ஆறாவது சதம் இது. ஆட்டத்தின் தொடக்கத்தில், ஆஸ்திரேலிய வீரர் நைலின் ஷார்ட் பால் தாக்குதலில் கைவிரலில் காயம் அடைந்தார். இருப்பினும் காயத்தை பொருட்படுத்தாமல் விளையாடிய தவான், தொடர்ந்து விளையாடி சதம் அடித்தார். ஆனால், அவர் இரண்டாவது இன்னிங்ஸின்போது ஃபீல்டிங் செய்யவே வரவில்லை.

தொடக்கத்திலிருந்தே ஜடேஜாதான் களத்தில் இருந்தார். தவானின் காயம் எவ்வளவு தீவிரமானது என்று தெரியாத நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்த சந்தேகத்தை போக்கும் வகையில் இன்று அவரது காயத்துக்கான ஸ்கேன் எடுப்பதற்காக லீட்ஸ் நகரத்துக்கு சென்றுள்ளார். சிகிச்சையில் சொல்லப்படும் முடிவை பொறுத்தே அவர் போட்டியில் இருந்து விலகுவாரா இல்லையா என்பது தெரியவரும்.

காயம்
காயம்

சிறிய முறிவுதான் அவரது விரலில் ஏற்பட்டுள்ளது என்பதால் ஒருவேளை மருத்துவர்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தினால் அவர் இரண்டு போட்டிகளில் ஓய்வு எடுக்க வேண்டி வரும். எனினும் இதனை பிசிசிஐ அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. தவானின் சிகிச்சை முடிவுகள் இன்றே வெளியாகும் என்பதால் இன்றைக்கே பிசிசிஐ அறிவிப்பு வெளியாகலாம்.

மேன் ஆப் தி பிக் மேட்ச்!

தவானை பொறுத்தவரை பார்ம் இல்லாமல் இருந்தால் கூட பெரிய மேட்ச்களில் பெரிய அணிக்காக சிறப்பாக விளையாட தவறுவதில்லை. ஐசிசி டோர்னமெண்ட் என்று வந்துவிட்டால் அவர் எப்போதும் `மேன் ஆப் தி பிக் மேட்ச்'சாக திகழ்கிறார். உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற ஐசிசி டோர்னமெண்ட்டில் 20 போட்டிகளில் ஆறு சதம், 4 அரை சதத்துடன் 1238 ரன்கள் எடுத்துள்ளார். முக்கியமாக கடந்த போட்டியில் சதம் விளாசி பார்முக்கு வந்துள்ளார்.

தவான் - ரோஹித்
தவான் - ரோஹித்

தவான் - ரோஹித் பாட்னர்ஷிப்!

ஐசிசி தொடர்களில் எப்படி தவானின் பேட்டிங் பேசப்படுகிறதோ.. அதேபோல் ஒருநாள் போட்டிகளில் தவான் - ரோஹித் இருவரும் சிறந்த பாட்னர்ஷிப்பை கொடுத்து வருகின்றனர். தவான் இல்லை என்று சொன்னால், இந்தியா ஒரு சிறந்த பாட்னர்ஷிப்பை இழக்கும். ரோஹித் தனது வெற்றிகரமான கூட்டணி இல்லாமல் தான் விளையாட வேண்டி இருக்கும். இதுவரை 103 போட்டிகளில் விளையாடியுள்ள இருவரும் 4681 ரன்கள் சேர்த்துள்ளனர். இதன் சராசரி 45.89. ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இது நான்காவது அதிகபட்ச ஓப்பனிங் பாட்னர்ஷிப் ஆகும்.

தவானுக்கு பதில் யார்?

ஒருவேளை தவான் தொடரில் இருந்து விலகும் பட்சத்தில் அவருக்குப் பதில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பேச்சு எழுந்துள்ளது. உலகக்கோப்பைக்கான அணி தேர்வு செய்யப்படும்போதே அதிகம் பேசப்பட்ட நபர்கள் அம்பதி ராயுடு; ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கரும் தேர்வு செய்யப்பட்டதால் அவர்களுக்கு இடம் கிடைக்கப்படவில்லை. இதனால் முதல் மூவரில் ஒருவர் தவானுக்கு பதில் தேர்வு செய்யப்படலாம்.

ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், அம்பதி ராயுடு
ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், அம்பதி ராயுடு

தவான் ஒப்பனர் என்பதால் ஓப்பனிங் இடத்தை பூர்த்தி செய்ய ஸ்ரேயாஸ் ஐயருக்கு அதிகம் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் கேஎல் ராகுல் அணியில் இருப்பதால் அவர் ஓப்பனிங் இறங்கும் பட்சத்தில் மூன்றாவது வீரராக களமிறங்க அம்பதி ராயுடு, ரிஷப் பண்ட் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. தினேஷ் கார்த்திக் பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் இடம்பெறுவதற்கும் தற்போது வாய்ப்புகள் அதிகம்.

காயம் காரணமாக ஷிகர் தவானுக்கு ஓய்வு... பிசிசிஐ-யின் அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?