Published:Updated:

``இந்த உலகக் கோப்பை தொடரின் ஓர் அங்கமாக நான் இருக்கப் போவதில்லை!'' - ஷிகர் தவான் உருக்கம்!

மலையரசு

துரதிர்ஷடவசமாக என் கையில் ஏற்பட்ட காயம் குணமாகவில்லை. ஆனால், நமது அணியின் பயணம், விளையாட்டு தொடரும்......

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. காயத்துடனே விளையாடிய தவான் சதம் அடித்து அசத்தினார். காயம் காரணமாக அவர் மூன்று வாரங்களுக்கு விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

பின்னர், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டும் தவான் விளையாடமாட்டார் என பிசிசிஐ கூறியது. அந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார். நான்காவது வீரராக தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார். இதற்கிடையில் ரிஷப் பண்ட் இங்கிலாந்து பயணமானார்.

இந்த நிலையில்தான் தவான், இந்த உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதில் ``ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது தவானுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. தவான் ஜூலை மாதம் வரை ஓய்வெடுக்கவுள்ளதால் உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகுகிறார்” எனக் கூறப்பட்டுள்ளது.

ஷிகர் தவான்
ஷிகர் தவான்

இதற்கிடையே, உலகக் கோப்பை போட்டியில் விளையாடாதது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ளார் தவான். அதில், ``இனி இந்த உலகக் கோப்பை தொடரின் ஓர் அங்கமாக நான் இருக்கப் போவதில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். துரதிர்ஷடவசமாக என் கையில் ஏற்பட்ட காயம் குணமாகவில்லை. ஆனால், நமது அணியின் பயணம், விளையாட்டு தொடரும்.

எனது சகாக்கள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் என் மீது காட்டிய அன்புக்கு நன்றிக்கடன் பட்டவனாகிறேன். ஜெய் ஹிந்த்...'' என உருக்கமாக ஃபேஸ்புக்கில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட்

இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் மேனேஜர் சுனில் சுப்பிரமணியம், ``காயத்தால் அவதிப்படும் தவானுக்கு ஜூலை மாதம் வரை சிகிச்சை தேவைப்படுவதால் அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட்டை அணிக்கு அழைத்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.