Published:Updated:

‘சீனியர்களை நம்பினோம்; ஆனால்..!’ - உலகக் கோப்பை தோல்வியால் வருந்தும் குல்பாதின் நயீப்

ராம் பிரசாத்

'உலகக் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் சரியாக ஒத்துழைப்பு தராததே எங்களின் மோசமான தோல்விக்குக் காரணம்' என குல்பாதின் நயீப் தெரிவித்துள்ளார்.

குல்பாதின் நயீப்
குல்பாதின் நயீப்

ஆப்கானிஸ்தான் அணி, நடந்துமுடிந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடிய 9 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி வெளியேறியது. இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியைத் தழுவினாலும் ஆசிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளின்போது, வெற்றிக்காக கடுமையாகப் போராடினர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி

உலகக் கோப்பை தொடரின்போது, ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்திச் சென்றது குல்பாதின் நயீப் தான். உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 அணிகளுக்கு கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட ரஷித் கான், ``ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக நியமித்ததற்காக கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தான் அணிக்கு சேவையாற்றுவது எனக்குக் கிடைத்த மரியாதை. குல்பாதின் நயீப் ஆதரவுக்கு நன்றி. நாம் இணைந்து பல வெற்றிகளைக் கொண்டுவர முயல்வோம்' எனத் தெரிவித்திருந்தார்.

ரஷித் கான்
ரஷித் கான்

இந்த நிலையில், தற்போது சீனியர் வீரர்கள்குறித்து குல்பாதின் நயீப் சர்ச்சையாக கருத்தைப் பதிவுசெய்துள்ளார். ``இந்த உலகக் கோப்பை தொடரில் நாங்கள் அதிகமாக சீனியர் வீரர்களையே நம்பி இருந்தோம். ஆனால், அவர்கள் எங்கள் நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் செயல்படவில்லை. அவர்கள், நான் சொல்வதை காது கொடுத்துக் கேட்பதாக இல்லை. நான் பந்துவீச அழைக்கும்போது என்னை கவனிப்பதாக இல்லை. போட்டிகளில் தோல்வியடைந்த போது வருத்தமே இல்லாமல் சிரித்துக்கொண்டு இருந்தனர்” என குல்பாதின் நயீப் தனது வருத்தத்தைப் பதிவுசெய்துள்ளார்.