Published:Updated:

மும்பை பெருமை மட்டுமா பிரச்னை... மஞ்ச்ரேக்கர் மாறப்போவதில்லை!

Sanjai Manjrekar ( Twitter )

மும்பை புராணம் மட்டுமே அவரிடம் இருக்கும் பிரச்னை இல்லை. ஒரு கிரிக்கெட் போட்டியை இவர் எப்படி அணுகுகிறார் என்பதே இவர் மீதான அபிப்ராயத்தை நெகட்டிவாக்கிவிடும்.

மும்பை பெருமை மட்டுமா பிரச்னை... மஞ்ச்ரேக்கர் மாறப்போவதில்லை!

மும்பை புராணம் மட்டுமே அவரிடம் இருக்கும் பிரச்னை இல்லை. ஒரு கிரிக்கெட் போட்டியை இவர் எப்படி அணுகுகிறார் என்பதே இவர் மீதான அபிப்ராயத்தை நெகட்டிவாக்கிவிடும்.

Published:Updated:
Sanjai Manjrekar ( Twitter )

ஒருநாள் போட்டிகளில், ரோஹித் ஷர்மா எத்தனை இரட்டைச் சதங்கள் அடித்திருக்கிறார் தெரியுமா?

கோடிக்கணக்கில் கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்டிருக்கும் இந்தியாவில், இந்தக் கடினமான கேள்விக்குப் பதில் தெரிந்தவர் ஒரே ஒருவர்தான் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? இந்த சரித்திர சாதனையின் பெருமையை கடைக்கோடி இந்தியனுக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காக அவ்வளவு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார், வர்ணனையில் கிடைத்த வரப்பிரசாதம் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!

கடந்த வாரம், ஜடேஜாவை 'Bits and pieces cricketer' என்று வர்ணனையின்போது அவர் விமர்சிக்க, அதற்கு ஜடேஜா, 'நான் உங்களைவிட இரண்டு மடங்கு அதிக போட்டிகளில் விளையாடியிருக்கிறேன்' என்று பொங்க, இத்தனை நாள்கள் வன்மத்தோடு இருந்தவர்களுக்கெல்லாம் டபுள் சந்தோஷமாகிவிட்டது. ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் புரொஃபைல் உள்ள அனைவருமே அவரை திட்டியும் கலாய்த்தும் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். வெறித்தனமான கிரிக்கெட் ரசிகனிலிருந்து, ஒருநாள் பொழுதுபோக்குக்கு கிரிக்கெட் பார்ப்பவர் வரை அனைவருமே கரித்துக்கொட்டியிருக்கிறார்கள். உண்மையில், பலருக்கும் ஜடேஜாவைக் குறைசொன்னதற்காக கோபம் வரவில்லை. 'மும்பை... மும்பை... மும்பை ' என்று மும்பைக்கு பி.ஆர் வேலைபார்க்கும் அவரின் வர்ணனையால்தான் இவ்வளவும்.

மும்பை பெருமை மட்டுமா பிரச்னை... மஞ்ச்ரேக்கர் மாறப்போவதில்லை!

எந்த வர்ணனையாளருமே, தான் சார்ந்த இடத்தைப் பற்றி பெருமையாகப் பேசத்தான்செய்வார். யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். மெக்கல்லம் வர்ணனையில் இருக்கும்போது, வில்லியம்சனுக்கு ஆதரவாக சில விஷயங்கள் பேசுவார். இங்கிலாந்து ரசிகர்கள் ஸ்மித், வார்னரைப் பார்த்து கூச்சலிட்டு எதிர்ப்பைக் காட்டும்போது, மைக்கேல் கிளார்க் அந்த வீரர்களை விட்டுக்கொடுக்காமல் பேசுவார். ஆனால், அவை ஒரு எல்லை வரை மட்டுமே.

இந்த உலகக் கோப்பையின் தொடக்கத்தில், வார்னர் மிகவும் மெதுவாக ஆடும்போது அதை சுட்டிக்காட்டி, ''தவறு'' என்று சொல்லியிருக்கிறார் கிளார்க். இத்தனைக்கும், அவர்கள் இருவருமே நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக ஆடியவர்கள்தான். ஹர்ஷா போக்ளே ஆந்திரக்காரர். அம்பாதி ராயுடுவைப் பற்றி பெரிதாகப் பேச்செடுத்ததில்லை. பன்ட், அகர்வால் ஆகியோர் அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும்போது, ராயுடு தேர்வு செய்யப்படாதது விவாதத்துக்கு உட்படுத்தக்கூடிய விஷயம்தான். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. சக லான்காஷயர்காரர் என்பதற்காக, ஜாஸ் பட்லரை மட்டும் தூக்கிவைத்து மைக்கேல் ஆதர்டன் பேசிவதில்லை. எல்லோரும் கிரிக்கெட் என்ற கோட்பாட்டுக்குள் நடுநிலையோடு நடந்துகொள்கிறார்கள். ஆனால், மஞ்ச்ரேக்கரால் மட்டும் முடிவதில்லை.

Michael Clarke
Michael Clarke

'எங்க போனாலும் கடைசில சாப்பிட்ற இடத்துக்குத்தான் வருவியா' என்பதுபோல், எந்த டாப்பிக் ஓடினாலும் அங்கு ரோஹித்திடம் வந்து நிற்கிறார் சஞ்சய். பேட்ஸ்மேனைப் பற்றி பேசினால், 'இப்படித்தான் ரோஹித் அன்னைக்கு டபுள் செஞ்சுரி அடிச்சாப்ல' என்று தொடங்குகிறார். பௌலரைப் பற்றி பேசினால், 'இப்படி பௌலிங் போட்டா ரோஹித்லாம் இன்னொரு 200 அடிச்சிடுவார்' என்று பேசுகிறார். எங்கு தொடங்கினாலும், எப்படி முடித்தாலும் ரோஹித் என்ற வார்த்தையை குறைந்தபட்சம் ஒருநாளைக்கு 108 முறையாவது சொல்லிவிடுகிறார்.

இந்தியா - இலங்கை ஆடிய கடைசி லீக் போட்டி. பும்ரா பந்தில் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்யப்பட்டு, ரிவ்யூவில் தப்பிக்கிறார் அவிஷ்கா ஃபெர்னாண்டோ. அந்தப் பந்தை அவர் தவறாக ஆடியிருப்பார். Bottom hand மிகவும் இறுக்கமாக இருக்கும். ஆன் சைட் ஆட முயற்சி செய்திருப்பார். அதே மாதிரி வரும் அடுத்த பந்தை, Bottom hand-ஐ லூசாக விட்டு ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடுவார். இதைப் பற்றிப் பேசிய சஞ்சய், "பரவாயில்லையே..! அவிஷ்கா ஃபெர்னாண்டோ உடனடியாகத் தன் தவறைத் திருத்திக்கொண்டாரே. அவருக்கு உண்மையில் திறமை இருக்கிறது. Bottom hand ஃப்ரீயாக இருக்கும் வீரரால்தான் இப்படி சிறப்பாக ஆட முடியும். அதனால்தான் ரோஹித் ஷர்மா ரன்களைக் குவித்துக்கொண்டிருக்கிறார்." தட், பாத்ரூம் செவுத்த தாண்டிக் குதிச்சாலும் சாப்பிடுற இடம் வந்திடும் மொமன்ட்!

Rohit - Sanjai Manjrekar
Rohit - Sanjai Manjrekar

ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி. டாஸ் வென்ற ரஹானே பௌலிங் தேர்வு செய்கிறார். அவரும் ரோஹித்தும் அணி மாற்றம் பற்றியெல்லாம் மஞ்ச்ரேக்கரிடம் பேசிவிட்டுச் செல்கின்றனர். உடனே மஞ்ச்ரேக்கர், "இந்தப் போட்டியில் என்ன நடந்தாலும் ஜெயிக்கப்போவது மும்பைதான்" என்கிறார். காரணம் ரோஹித், ரஹானே இருவரும் மும்பைக்காரர்கள். இந்த உலகக் கோப்பையில் ரஹானே ஆடியிருந்தால், "ரஹானே மாதிரி டிஃபன்ஸ் பண்ணத் தெரியாமல்தான் வெஸ்ட் இண்டீஸ் டீம் வெளியே போகுது" என்று சொல்லியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இப்படி மும்பை வீரர்களைப் பற்றி மட்டுமே பேசும் அவர், மற்றவர்களைப் பற்றி துளியும் வாய் திறப்பதில்லை என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கோபம். டெல்லி டேர்டெவில்ஸ் ஆடும்போது, பிரித்வி ஷா, ஷ்ரேயாஸ் ஐயர் இருவரையும் பாராட்டுவார். ஆனால், ரிஷப் பன்ட் மீது குறைகள் இருந்தாலும் அதிகமாக விமர்சனம் செய்வார். "ஷாட் ஆடும்போது பேலன்ஸ் இருப்பதில்லை... அன்ஆர்தடாக்ஸ் ஷாட்டுகள் இப்போது தேவைதானா... ஆட்டத்தை ஃபினிஷ் செயவதில்லை" என அடுக்கிக்கொண்டேபோவார்.

Sanjay Manjrekar
Sanjay Manjrekar

கடந்த 9 ஆண்டுகளில், மும்பை 2 முறைதான் ரஞ்சிக் கோப்பையை வென்றிருக்கிறது. கடந்த சீசனில், லீக் சுற்றையே தாண்டவில்லை. மும்பையில் மட்டுமே குடியிருந்த கிரிக்கெட் கடவுள் அங்கிருந்து ராஞ்சி, மீரட் வரை நகர்ந்துவிட்டார். வடகிழக்கு மாநிலங்களும் இந்திய கிரிக்கெட் மேப்பில் இடம்பெற்றுவிட்டன. இந்தியாவின் இப்போதைய சூப்பர் ஸ்டார் டெல்லியில் பிறந்தவராகிவிட்டார். ஆக, இந்திய கிரிக்கெட்டின் மையப்புள்ளி, மும்பையில் இருந்து மெள்ள மெள்ள நகர்ந்துவிட்டது. ஆனால், அதை இழுத்துப்பிடித்துக்கொண்டிருக்கிறார், மஞ்ச்ரேக்கர். எப்படியேனும் இழுத்துப் பிடித்து, மும்பையை மீண்டும் கிரிக்கெட் தலைநகராக மாற்ற முயன்றுகொண்டிருக்கிறார். அதற்கு, ரோஹித் ஷர்மாதான் அவருக்குக் கிடைத்திருக்கும் கருவி போல!

கே.எல்.ராகுல் இப்போதுதான் உலகக் கோப்பையில் ஓப்பனராக ஆடிக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே, நெருக்கடியை உணர்ந்துகொண்டிருக்கும் ஒரு வீரரால், தொடக்கத்திலிருந்தே தவானைப் போல் ஆடிவிட முடியாது. அதைப் புரிந்துகொண்டுதான், தனது வழக்கமான ஆட்டத்தை விட்டுவிட்டு அதிரடி காட்டுகிறார் ரோஹித். கங்குலி, பீட்டர்சன் போன்றவர்களும் 'ராகுலுக்கு இன்னும் அவகாசம் தரவேண்டும். அரைசதம் கடக்கும் அவரால் அதை சதமாக மாற்றமுடியும். அதற்கான அவகாசத்தை அவருக்குக் கொடுப்பது அவசியம்' என்றார்கள். ஆனால், மஞ்ச்ரேக்கருக்கு அது பிடிக்கவில்லை.

வங்கதேசத்துக்கு எதிராக 77 ரன்கள் அடிக்கிறார் ராகுல். ஆனால், அந்தப் போட்டி முடிந்து, "ராகுலின் ஆட்டம் திருப்திகரமாக இல்லை" என்று ட்வீட் செய்கிறார் சஞ்சய். ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் மெச்சும்படி இல்லைதான். ஆனால், தொடர்ச்சியாக நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறாரல்லவா! அதை விடுவோம். ஓப்பனராக ஆடிய ஆறு வருட காலத்தில், ரோஹித் ஷர்மாவின் அணுகுமுறையும் இப்படித்தானே இருந்தது. சதமடிக்கும் வரை அவரும் 70-80 ஸ்ட்ரைக் ரேட்டில்தானே ஆடிக்கொண்டிருந்தார்.

ஆனால், இந்த மும்பைப் புராணம் மட்டுமே அவரிடம் இருக்கும் பிரச்னை இல்லை. ஹர்ஷா போக்ளேவைப் போல் உயிர்ப்போடு இவருக்குப் பேச வராது. மைக்கேல் கிளார்க் போல் மிகவும் டெக்னிக்கலாகவும் பேச முடியாது. அதனால்தான், வாய் போன போக்கில் பேசிக்கொண்டிருக்கிறார் அவர். ஒரு கிரிக்கெட் போட்டியை எப்படி இவர் அணுகுகிறார் என்பதே, இவர் மீதான அபிப்ராயத்தை நெகட்டிவாக்கிவிடும். ராகுல் விஷயத்தில் ஸ்ட்ரைக் ரேட் எனும் நம்பரை வைத்துதான், ஒரு பேட்ஸ்மேனின் திறமையை அணுகினார். ஆனால், அது அந்த விஷயத்தில் மட்டும் இல்லை என்பதுதான் உண்மை.

Asghar Afghan
Asghar Afghan

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய உலகக் கோப்பைப் போட்டி. 311 ரன்களை சேஸ் செய்த ஆப்கானிஸ்தான், ஒரு கட்டத்தில் விக்கெட்டுகளை இழக்கிறது. அந்த அணியின் சீனியர் பேட்ஸ்மேன் ஆஸ்கர் ஆஃப்கான் அதிரடி காட்டிக்கொண்டிருக்கிறார். அப்போது வர்ணனையில் இருந்த சஞ்சு...

ஒருநாள் போட்டிகளில் 24 என்ற சராசரியும், 65 என்ற ஸ்ட்ரைக் ரேட்டும்கொண்ட வீரர், இப்படி அதிரடியாக ஆடுவது ஆச்சர்யமாக இருக்கிறது.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

சிறிது நேரம் கழித்து வர்ணனையாளர்கள் மாறுகிறார்கள். ஹர்ஷே போக்ளே கமென்ட்ரியில் இருக்கும்போது, ஜேசன் ஹோல்டர் ஓவரில் இரண்டு பவுண்டரிகளைத் தொடர்ந்து பறக்கவிடுகிறார் ஆஃப்கான்.

கடந்த சில ஆண்டுகளாக, ஆஃப்கான் இரண்டு கியர்களில் ஆடுவதைப் பார்த்துவருகிறேன். ஆரம்பத்தில் Block.. Block.. Block என்று ஆடிக்கொண்டிருப்பார். ஆனால், ஒருகட்டத்தில் திடீரென வெடித்துக் கிளம்பிவிடுவார்.
ஹர்ஷா போக்ளே

இந்த இரண்டு கமென்ட்டுகளின் வித்தியாசம் மிகப்பெரியது. ஒரு வீரரை வெறும் நம்பர்களால் அளவிடுவது ஒன்று. ஒரு வீரரைத் தொடர்ந்து கவனித்து, அதன்பிறகு அவரைப் பற்றிப் பேசுவது ஒன்று. ஹர்ஷா இதில் இரண்டாவது ரகம். எந்தவொரு நல்ல வர்ணனையாளரும் அந்த ரகத்தில் இருப்பதுதான் நல்லது. ஹர்ஷா சொன்னதுபோல், ஆஃப்கான் அதிரடியாகவும் ஆடத் தெரிந்தவரே! அவருடைய ஒரே ஒருநாள் சதம் (101 ரன்கள்) 90 பந்துகளில் எடுக்கப்பட்டது. பெரும்பாலான அவரது 50+ ஸ்கோர்கள் 80+ ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்கப்பட்டவை. 40 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் அரை சதம் அடித்திருக்கிறார்தான். ஆனால், ஹர்ஷா சொன்னதுபோல் அவரால் 2 கியர்களிலும் ஆடமுடியும். அவர் அதிரடி காட்டுவது பெரிய ஆச்சர்யமெல்லாம் இல்லை.

Asghar Afghan
Asghar Afghan

ஆஃப்கானைப் பற்றித் தெரிந்திருக்க, அவர் அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுடன் ஆடிய ஆட்டத்தைப் பார்த்திருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம்கூட இல்லை. இந்த உலகக் கோப்பையைப் பார்த்திருந்தாலே போதும். இங்கிலாந்து அணிக்கெதிராக 48 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தவர், பாகிஸ்தானுக்கு எதிராக 35 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இந்த உலகக் கோப்பையில், அவரது ஸ்ட்ரைக் ரேட் 87! ஆனால், இதெல்லாம் மஞ்ச்ரேக்கருக்குத் தெரியவில்லை.

இலங்கைக்கு எதிரான போட்டியில், தொடக்கத்தில் சற்று தடுமாறினார் ராகுல். ஒரு பந்து நேராக பௌலருக்கு முன்பே பிட்சானது. அப்போது, சஞ்சய் சொன்னது...

Harsha Bhogle
Harsha Bhogle
இந்தத் தொடரில் ஏற்கெனவே ஓரிரு முறை ராகுல், பௌலரிடம் கேட்ச்சாகி அவுட் ஆகியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இங்கிலாந்துக்கு எதிராக பிளங்கட் ஓவரில் அப்படித்தான் ஆடி அவுட்டானார். அந்த ஷாட்டில் கொஞ்சம் தடுமாறினார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

இங்கிலாந்து போட்டியில் ராகுல் டக் அவுட் என்பது உலகறிந்த விஷயம். டக் அவுட் ஆகும் ஒரு ஓப்பனர், முதல் ஸ்பெல் வீசும் பௌலரிடம்தான் அவுட்டாக முடியும் என்பதைக் கொஞ்சம் லாஜிக்கலாக யோசித்தாலும் சரியாகச் சொல்ல முடியும். இங்கிலாந்தின் முதல் ஸ்பெல் பௌலர்கள் வோக்ஸ் மற்றும் ஆர்ச்சர். பிளங்கட் மிடில் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்பதும் தெரிந்ததே! இருந்தும், எந்த லாஜிக்கில் அவர் வாயிலிருந்து பிளங்கட் என்று வந்தது எனப் புரியவில்லை.

K.L.Rahul - Woakes
K.L.Rahul - Woakes

இதுமட்டுமல்ல, எத்தனையோ முறை இப்படிச் செய்திருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், புவனேஷ்வர் குமார் பேட்டிங் செய்ய இறங்குகிறார். "He is back, Bhuvneshwar Kumar... in the expense of a spin bowler" என்கிறார் சஞ்சு.

In the expense of a spin bowler..?

அதே இடத்தில் வேறு எந்த வர்ணனையாளராக இருந்தாலும் இப்படி வந்திருக்கும் - "He is back, Bhuvneshwar Kumar... in the expense of Kuldeep Yadav." போட்டியில் ஆடும் வீரர்களைப் பற்றித் தெரியாதது ஒருபக்கம். யார் விளையாடுகிறார், விளையாடவில்லை என்பதே இவருக்கு உறுதியாகத் தெரியாது. கடந்த ஆண்டு, இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய டி-20 உலகக் கோப்பையின் அரையிறுதியின்போது, அஞ்சும் சோப்ராவுடன் போட்டியில் மிதாலி ராஜ் ஆடாததைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார் சஞ்சய். அப்போது, அணித் தேர்வைப் பற்றி தன் கருத்துகளைச் சொல்லிக்கொண்டிருந்தவர், சுழற்பந்து வீச்சாளரான ஒரு இந்திய வீராங்கனையின் பெயரைச் சொல்லத் தடுமாறினார்.

Sanjay Manjrekar
Sanjay Manjrekar

இதுதான் சஞ்சு. எந்த தயாரிப்பும் இல்லாமல் மைக் முன் அமர்ந்துவிடுவார். யாரைப் பற்றியும் தெரியாமல் அவர்களை விமர்சனம் செய்யத் தொடங்கிவிடுவார். அதனால்தான் எது சரி, எது தவறு என்று யோசிக்காமல், தன் வாயில் வரும் வார்த்தைகளை உதிர்த்துவிடுகிறார். இப்படிப்பட்டவரை, இன்று ஜடேஜாவோ, அன்று பொல்லார்டோ சாடியதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. வர்ணனை எப்படியிருக்க வேண்டும் என்ற வரைமுறையைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், மஞ்ச்ரேக்கர் போன்றவர்கள் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். தாங்கள் எந்தத் தவறு செய்தாலும், அதைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்று நினைக்கும் பிசிசிஐ, ஐசிசி போன்ற அமைப்புகள் ஹர்ஷா போக்ளே, மைக்கேல் ஹோல்டிங் போன்றவர்களுக்குத்தான் எச்சரிக்கை விடுக்கும். மஞ்ச்ரேக்கர்களுக்கு எப்போதும் சிவப்புக் கம்பளம்தான். எவ்வளவு புலம்பியும் பலனில்லை.