Published:Updated:

ரோ-ஹிட்மேனின் 5-வது சதம்... அரை இறுதி ஸ்கிரிப்டை மாற்றிய வெற்றிகள்!

Team India
Team India

ரோஹித், ராகுலின் சதங்கள், பும்ரா, ஜடேஜாவின் விக்கெட்டுகள் இலங்கையை வீழ்த்த, இந்திய அணி அரை இறுதிக்கு `பராக்’ என்று கிவிகளுக்கு அறிவித்துள்ளது. ஆனால், அந்த நான்காவது பேட்ஸ்மேனைப் பற்றிய கவலை மட்டும் இன்னும் தீரவில்லை. #SLvIND

உலகக்கோப்பைத் தொடரில் 5 சதங்கள் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா

இது ரோஹித் ஷர்மாவின் புதிய ரெக்கார்டு. இலங்கைக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா, உலகக்கோப்பைத் தொடரில் 5 சதங்கள் கடந்த முதல் கிரிக்கெட் வீரரானார். ரோஹித், ராகுலின் சதங்கள், பும்ரா, ஜடேஜாவின் விக்கெட்டுகள் இலங்கையை வீழ்த்த, இந்திய அணி அரை இறுதிக்கு `பராக்’ என கிவிகளுக்கு அறிவித்துள்ளது. ஆனால், அந்த நான்காவது பேட்ஸ்மேனைப் பற்றிய கவலை மட்டும் இன்னும் தீரவில்லை. #SLvIND

ஹெடிங்லி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்த உலகக்கோப்பையில் எந்த அணிக்கும் சேஸிங் ரெக்கார்டுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. 200-250 இலக்கு நிர்ணயித்தாலும், அதை டிஃபெண்ட் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலும் முதலில் பேட் செய்வதையே விரும்புவதால், டாஸ் ஜெயித்த உற்சாகத்தில் திமுத் அண்டு கோ முதலில் களமிறங்கினர்.

பும்ரா - இந்தியாவின் துருப்புச்சீட்டு

இன்னிங்ஸ் தொடக்கத்தில் சில ஓவர்கள், கடைசியில் சில ஓவர்கள். பும்ரா பந்துவீசினால், அதிக ரன்கள் இருக்காது, விக்கெட்டுகள் சரிவது நிச்சயம், `கொடுத்த வேலையை சரியாக செய்தால் பலன்’ என்பார்கள், அதை நடத்திக் காட்டுபவர் பும்ரா.

Vs இலங்கை பும்ரா - 10-37-3 (2 மெய்டன் ஓவர்கள் உட்பட)
Jasprit Bumrah
Jasprit Bumrah

ஒவ்வொரு முறை இந்திய அணி ஃபீல்டிங் செய்யும்போதும், வர்ணனையில் இருப்பவர்கள் பும்ராவைப் பற்றி பேசாமல் இருப்பதில்லை. இலங்கைக்கு எதிரான போட்டியிலும் அது தொடர்ந்தது. 32-வது ஓவரின்போது வர்ணனையில் இருந்த முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசேன் இப்படிச் சொல்வார், ``பும்ரா...High class..” உண்மைதான்!

தொடக்கத்திலிருந்து புவனேஷ்வர் குமார் தடுமாறி வந்தபோது, விக்கெட் எடுக்கும் இலக்கு பும்ராவுக்குக் கொடுக்கப்பட்டது. முதல் ஓவர் மெய்டன். இரண்டாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளும் டாட் பால். நான்காவது பந்தில் விக்கெட்! பந்து எட்ஜாகி தோனியின் கைகளை எட்ட, கேப்டன் திமுத் கருணரத்னே பெவிலியன் திரும்பினார். கேப்டனை வீழ்த்திய அதே ஸ்டைலில் பும்ரா மீண்டும் பந்துவீச, இம்முறை சிக்கியது குசல் பெராரா.

பந்து பேட்டைத் தொட்டு எட்ஜான சத்தம் கேட்க, அம்பயர் அவுட் கொடுத்தார். 7.1 ஓவர் முடிவில் 50/2 என இலங்கை தடுமாறத் தொடங்கியது. இன்னிங்ஸ் தொடக்கத்திலும் முடிவிலும் இந்தியாவின் துருப்புச்சீட்டு பும்ரா. லீக் சுற்றுகள் முடிந்து அரை இறுதிக்குள் நுழையும் இந்தியாவுக்கு, பும்ரா பெளலிங் போட்டிகளை வென்றுதரும் என்பதில் சந்தேகமில்லை.

#SLvIND
#SLvIND

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த அவிஷ்கா ஃபெர்ணாண்டோ, பாண்டியாவின் பவுன்சரை எதிர்கொண்டு கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஏற்கெனவே வேகப்பந்துவீச்சுக்கு மூன்று விக்கெட்டுகளை பறிக்கொடுத்திருந்த இலங்கை, ஜடேஜாவின் சுழலுக்கு ஒரு விக்கெட்டைக் கொடுத்தது. கிரீஸ்விட்டு வெளியே சென்ற மெண்டிஸ் சுதாரிப்பதற்குள், பந்து தோனியின் கைகளை எட்ட, அவர் தன் கடமையைச் செய்து முடித்துவிட்டார். இலங்கையின் முதல் நான்கு விக்கெட்டுகளில் மூன்று கேட்ச்கள், ஒரு ஸ்டம்பிங் தோனியின் கைவசம்!

55/4 முதல் 264/7 வரை

Angelo Mathews
Angelo Mathews

இலங்கை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏஞ்சலோ மேத்யூஸ், திருமண்ணேவின் 124 ரன் பார்ட்னர்ஷிப் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 53 ரன்கள் எடுத்திருந்தபோது திருமண்ணே அவுட்டாக, டி சில்வாவுடன் 73 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் சேர்ந்தார் மேத்யூஸ். 69 ரன்கள் எடுத்திருந்தபோது, ஜடேஜா வீசிய ஓவரில் மேத்யூஸ் கொடுத்த கேட்ச்சை தவறவிட்டார் புவனேஷ்வர் குமார். வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட அவர், 2 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் உட்பட 113 ரன்கள் எடுக்க, இலங்கை அணியின் ஸ்கோர் 264 எட்டியது.

ரோ-ஹிட்மேன் (103(94) – 14 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்)

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் இணை, 189 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தது. கடந்த போட்டிகளில் ராகுல் செட்டிலாவதற்கு நேரம் கொடுத்து, ரோஹித் அடித்துக்கொண்டிருந்தார். இந்தப் போட்டியில், ராகுலே செட்டிலாகி அடிக்கத் தொடங்கியபோது வேறென்ன வேண்டும் ஹிட்மேனுக்கு. அதிரடியில் இறங்கினர் இரு பேட்ஸ்மேன்களும்!

KL Rahul - Rohit Sharma
KL Rahul - Rohit Sharma

இலங்கை பெளலர்களால் இந்திய அணியின் ஓப்பனிங் இணையைப்பிரிக்க முடியவில்லை. விக்கெட் வீழ்த்தவும் முடியவில்லை, ரன் எடுக்காமல் தடுக்கவும் முடியவில்லை. இலங்கை பெளலர்களில் ஆபத்தானவர் மலிங்கா. ஆனால், நேற்றைய போட்டியில் மலிங்காவின் ஓவர்களில்தான் ரோஹித் பவுண்டரிகள் விளாசினார். முதல் பத்து ஓவர்களுக்கு மலிங்கா, அடுத்த பத்து ஓவர்களில் டி சில்வா என பார்த்து ரன் அடித்த ரோஹித் - ராகுல் இணை, முதல் விக்கெட் விழுவதற்கு முன்பே இந்தியாவின் வெற்றி வாய்ப்பை பிராகசப்படுத்திவிட்டுச் சென்றனர்.

கிறிஸ் கெயில், இம்ரான் தாஹிர், ஷோயப் மாலிக் வரிசையில் மலிங்காவுக்கு இது கடைசி உலகக்கோப்பை போட்டி. உலகக்கோப்பை தொடர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மலிங்காவின் கடைசிப் போட்டி இப்படியாக முடிந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், ரோஹித்தின் ஷாட்களைப் பார்த்து மலிங்காவே திணறியதை லீட்ஸ் மைதானம் பார்த்தது.

“வெற்றி தேவையென்றால், களத்தில் நின்று ரன் அடிக்க வேண்டும்”
ரோஹித் ஷர்மா

போட்டி முடிந்தபின், பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரோஹித் சொன்னது. ஆம், அணிக்கு வெற்றி தேவையென்றபோது ரோஹித் அடிப்பார். 2019 உலகக்கோப்பையில் ரோஹித்தின் 5 சதங்களில், 4 சதங்கள் மேட்ச் வின்னிங்!

ரோஹித்தின் 5 சதங்கள்

vs தென்னாப்ரிக்கா - 122* (இந்தியா வெற்றி)
vs பாகிஸ்தான் 140 (இந்தியா வெற்றி)
vs இங்கிலாந்து - 102 (இந்தியா தோல்வி)
vs வங்கதேசம் - 104 (இந்தியா வெற்றி)
vs இலங்கை - 103 (இந்தியா வெற்றி)

2019 உலகக்கோப்பையில் இந்திய அணி சேஸிங் செய்வது இதுதான் மூன்றாவது முறை. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 227 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதை செய்யத் தவறியது. அரை இறுதி போன்ற முக்கியமான கட்டத்தில், சேஸிங்கில் இந்திய அணி சொதப்பிடுமோ என்ற கவலை எழுந்தது. அந்த கவலையை நீக்கி நம்பிக்கை கொடுத்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள்.

KL Rahul
KL Rahul

சதம் அடித்த ரோஹித், ரஜிதாவின் ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒன் டவுன் இறங்கிய கோலி தன் பங்கிற்கு மூன்று பவுண்டரிகளை அடித்துக்கொண்டிருக்க ராகுல் சதம் கடந்தார். களத்தில் இருந்த கேப்டன் கோலி தட்டிக்கொடுக்க, ரசிகர்கள் கைத்தட்ட, அணி வீரர்கள் பாராட்ட, ராகுல் நிம்மதி பெருமூச்சுவிட்டது கண்களில் தெரிந்தது. 43.3 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி வெற்றி பெற்றது.

முக்கியமான கட்டத்தில் இந்திய அணியின் ஓப்பனிங் இணை செட்டிலாகியுள்ளது மேலும் பலம் சேர்த்துள்ளது. தவான் இல்லாத இடத்தை ராகுல் நிரப்புகிறார், ரோஹித்தின் அதிரடி ஃபாம், ஒன் டவுனில் விராட் வரை எல்லாம் செட்டாகிவிட்டது. அரை இறுதிக்கு முன், நான்காவது இடத்தை சோதனை செய்ய இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தும், அதில் இன்னும் திருப்தியடையவில்லை. அது மட்டுமே குறை.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா 15 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா. இதனால் ஆஸ்திரேலியா 14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அரையிறுதியில் முதலிடத்தில் உள்ள இந்தியா, நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்தையும், மற்றொரு அரையிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவையும் சந்திக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு