Published:Updated:

`எதிரில் யார் இருந்தாலும் பரவாயில்லை!' - இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து கேப்டன் புது `வியூகம்' #INDvNZ

மலையரசு

செமி ஃபைனலுக்குச் சென்றுள்ள நான்கு அணிகளில் ஒன்றாக இருப்பதற்கு நாங்களும் தகுதியானவர்கள்தாம். தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் இன்றைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம்.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன் ( AP )

எக்கச்சக்க எதிர்பார்ப்புகள், த்ரில் மேட்ச்சுகள், சுவாரஸ்ய சம்பவங்களுக்கு மத்தியில் நடப்பு உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மான்செஸ்டரில் இன்னும் சில மணிநேரங்களில் நடக்கவிருக்கும் முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. லீக்கின்போது இரு அணிகள் இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் நடப்பு உலகக் கோப்பையில் முதல்முறையாக இந்தப் போட்டியில்தான் மோதுகின்றன. சில போட்டிகளில் தோற்றிருந்தாலும், பேட்டிங், பௌலிங், பீல்டிங் என அனைத்திலும் இந்தியாவுக்கு இணையாக சம பலத்துடன் நியூசிலாந்து உள்ளது. அதனால் இன்று தொடங்கும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது எனத் தெரிகிறது.

இந்தியா
இந்தியா
AP

இன்றைய போட்டியில் கோலி யார் யாரை ப்ளேயிங் லெவனில் களமிறக்குவார் என்று தெரியாத நிலையில், போட்டிக்கு முன்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ``நிச்சயம் இந்தியா வெற்றிகரமான ஒரு அணியாகத் திகழ்கிறது. பௌலிங், பேட்டிங் அட்டாக் என அனைத்துப் பிரிவுகளிலும் தரமான விளையாட்டை விளையாடி வருகிறது. இருப்பினும் இது ஒரு போட்டி. இதில் ஒரு அணியை மற்ற அணி வெல்லவே நினைக்கும். ஆனால் அன்றைய தினத்தைப் பொறுத்தே எல்லாம் நடக்கும்.

அண்டர்டாக்ஸ் நியூசி... கலக்கல் இந்தியா... ஃபைனல் நோக்கி நகர்வோம்! #INDvNZ

எங்கள் வீரர்களும் சிறப்பான விளையாட்டை இந்தத் தொடரில் விளையாடியுள்ளனர். தொடக்கத்தில் இங்கிலாந்தின் பிட்ச் கண்டிஷன் ஒத்துழைக்காததால் சில போட்டிகளில் தோற்க நேர்ந்தது. இருந்தாலும், சிறப்பாக விளையாடி செமி ஃபைனலுக்குத் தகுதி பெற்றுள்ளோம். செமி ஃபைனலுக்கு சென்றுள்ள நான்கு அணிகளில் ஒன்றாக இருப்பதற்கு நாங்களும் தகுதியானவர்கள்தாம். தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் இன்றைய ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம்" என்றவர், ரோஹித் ஷர்மா குறித்தும் பேசினார்.

கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன்
AP

அதில், ``நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் ஷர்மா `தன்னிகரில்லாத வீரர்' என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இதற்கு முன் இந்தியாவுக்கு எதிராக விளையாடியிருக்கிறோம். இதில் வெற்றி, தோல்விகள் இருந்தாலும் இன்று நடக்கப்போவது இந்தியாவுக்கு எதிரான மற்றொரு போட்டி என்ற மனநிலையிலேயே விளையாடுவோம். எதிரில் ஆள் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்காமல் தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அதற்கான வியூகத்தை களத்தில் செயல்படுத்துவோம்" என்றார்.