Published:Updated:

``தினேஷ் கார்த்திக், பாண்டியாவுக்குப் பின் தோனி களமிறங்கியது ஏன்?” - ரவி சாஸ்திரி சொல்லும் காரணம்!

பிரேம் குமார் எஸ்.கே.

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பாண்டியா மற்றும் கார்த்திக் களமிறங்கிய பின்னர் தோனி களமிறங்கியது சர்ச்சையான நிலையில் ரவி சாஸ்திரி அது குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரி

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. நியூஸிலாந்து இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்திய அணி அரையிறுதியுடன் வெளியேறிவிட்டது. நியூஸிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் தொடர்பான பல்வேறு கருத்துகள் உலாவந்தன.

வில்லியம்சன் - கோலி
வில்லியம்சன் - கோலி

குறிப்பாகப் பல முன்னாள் வீரர்கள் தோனி முன்னதாக களமிறங்கியிருக்க வேண்டும். பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு முன்னதாக களமிறங்கி இருந்தால் ஆட்டத்தின் முடிவு என்பது வேறு மாதியாக இருந்திருக்கும் என்றனர். கங்குலி, லக்‌ஷ்மன் உள்ளிட்ட பல வீரர்கள் இதே கருத்தை தெரிவித்தனர்.

``நீங்கள் தோனியை ப்ளேயிங் லெவனில் எடுப்பீர்களா?” - வில்லியம்சன் முன் வைக்கப்பட்ட கேள்வி

2011 -ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் தோனி முன்னதாக களமிறங்கியிருப்பார். அதையே இங்கும் செய்திருக்க வேண்டும் என ரசிகர்களும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் தோனி பின் வரிசையில் இறங்க வேண்டும் என்பது யாருடைய முடிவு எனப் பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

தோனி
தோனி

இந்நிலையில் ஆங்கில ஊடகமான இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தோனி பின்வரிசையில் களமிறங்கியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

ரவி சாஸ்திரி, ``தோனி பின் வரிசையில் இறங்கியது அணியின் முடிவு. அனைவரின் பங்கும் அதில் இருக்கிறது. இது ஒரு சாதாரண முடிவும்கூட. இறுதியில் உங்களுக்கு வேண்டியது எல்லாம் தோனி, முன்னதாகவே களமிறங்கி ஆட்டமிழந்து செல்ல வேண்டும் என்பது தானா? அப்படி நடந்திருந்தால் அது இந்த ஒட்டுமொத்த சேஸிங்கை அப்போதே கொன்றிருக்கும்.

அரையிறுதி ஆட்டத்தில் தோனி
அரையிறுதி ஆட்டத்தில் தோனி

நமக்கு அவரின் அனுபவம் பின் வரிசையில் கட்டாயம் தேவை. தோனியை அப்படிப் பயன்படுத்தாமல் போனால் அது கிரிமினல் குற்றமாக இருந்திருக்கும். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த அணியும் தெளிவாக இருந்தது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``பன்ட் களமிறங்கிய போது பாதுகாப்பாகத்தான் விளையாடினார். ட்ரெண்ட் போல்டை கூட சிறப்பாக எதிர்கொண்டார். இது ஒரு விளையாட்டு. அவர் விரைவில் பல விஷயங்களைக் கற்றுக்கொள்வார். இந்திய அணி காட்டிய ஆர்வத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். பன்ட் மற்றும் பாண்டியா ஆட்டமிழந்த பின்னரும் அவர்கள் தளர்ந்து விடவில்லை. தொடர்ந்து போராடினர்” என்றார்.

பன்ட்
பன்ட்

ஒருநாள் போட்டி இரண்டு நாள்கள் நடந்ததும் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தது என்கிறார் ரவி சாஸ்திரி, ``முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பலமாக இருந்தது. ஆனால், போட்டியை நிறுத்தி மறுநாள் முதலிலிருந்து ஆடும் போது அந்த உத்வேகம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், அதுதான் விளையாட்டு. சில நேரங்களில் இப்படியும் நடக்கும்” என்று முடித்தார்.

தினேஷ் கார்த்திக், பாண்டியாவுக்கு முன்னதாக தோனி களமிறங்கியிருந்தால் இந்தியாவுக்கு பாசிட்டிவ் முடிவு கிடைத்திருக்குமா....? காரணத்துடன் பதிலை பதிவு செய்யுங்கள் கமென்டில்....