Published:Updated:

"போராடும் குணம் எங்கள் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. மீண்டு வருவோம்" - ரபாடா #SAvWI

Rabada
Rabada ( AP )

டி காக் அல்லது டுப்ளெஸ்ஸி இருவரில் ஒருவர் இன்று மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடுவது அவசியம். இது நடந்தால் மட்டுமே தென்னாப்பிரிக்கா வெற்றியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.

மீண்டு வருமா தென்னாப்பிரிக்கா

யாரும் எதிர்பாராத வகையில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றுள்ளது தென்னாப்பிரிக்க அணி. அரையிறுதி வாய்ப்பில் பெயரளவேனும் நிலைக்கவேண்டுமென்றால், இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டியது அவசியம். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எல்லாமே அவர்களுக்கு எதிர்பாராத முடிவுகளைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அணியின் ஒவ்வொரு வீரரும், 200 சதவிகித உழைப்பைக் கொட்டினால் மட்டுமே அந்த அணியால் மீண்டு வர முடியும்.

#SAvWI
#SAvWI

டுப்ளெஸ்ஸி, வான் டெர் டூசன், டி காக் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சீராக விளையாடுவதில்லை. அவர்களும்கூட பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறுகிறார்கள். டி காக் அல்லது டுப்ளெஸ்ஸி இருவரில் ஒருவர் இன்று மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடுவது அவசியம். இது நடந்தால் மட்டுமே தென்னாப்பிரிக்கா வெற்றியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷார்ட் பால் தாக்குதலை சமாளிப்பதும் முக்கியம். எந்த இடத்திலும் அவசரப்பட்டு விக்கெட்டை இழந்துவிடக்கூடாது. அனுபவ வீரர் ஹஷிம் அம்லா, முதல் பவர்பிளே முடியும் வரையாவது தாக்குப்பிடிக்கவேண்டும்.

அம்லா
அம்லா
AP

பந்துவீச்சிலும் யாரும் எதிர்பார்த்த அளவுக்குச் செயல்படவில்லை. ஃபெலுக்வாயோ மட்டுமே சிக்கனமாகப் பந்துவீசுகிறார். மற்றவர்கள் ரன்களை வாரி வழங்குவதோடு விக்கெட் வீழ்த்தவும் தவறுகிறார்கள். ரபாடா, தாஹிர் ஆகியோர்கூட எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இன்றைய போட்டியில் பௌலர்களின் பங்களிப்பும் முக்கியம். கொஞ்சம் தவறினாலும், வெஸ்ட் இண்டீஸ் வெறியாட்டம் ஆடி, நினைத்துப் பார்க்க முடியாத ஸ்கோர் எடுத்துவிடும். லெக் ஸ்பின்னுக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் தடுமாற்றத்தை தாஹிர் பயன்படுத்திக்கொள்வது அவசியம்.

மிகச் சிறந்த இரண்டு அணிகளிடம்தான் நாங்கள் தோற்றிருக்கிறோம். வங்கதேசத்துக்கு எதிராகவும் கடைசி வரை போராடினோம். இந்தியாவுடனான போட்டியிலும் அப்படித்தான். ஆட்டத்தைக் கடைசிவரை எடுத்துச் சென்றோம். நாங்கள் எப்போதும் போராடுவதை நிறுத்தியதில்லை. போராடும் குணம் எங்கள் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. ஒரு சில விஷயங்கள் கிளிக் ஆனால் போதும், வெற்றி பெறத் தொடங்கிவிடுவோம்
ககிசோ ரபாடா
டி காக்
டி காக்
AP

இதுவரை

தென்னாப்பிரிக்கா

vs இங்கிலாந்து - 104 ரன் வித்யாசத்தில் தோல்வி

vs வங்கதேசம் - 21 ரன் வித்யாசத்தில் தோல்வி

vs இந்தியா - 6 விக்கெட் வித்யாசத்தில் தோல்வி

வெஸ்ட் இண்டீஸ்

vs பாகிஸ்தான் - 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி

vs ஆஸ்திரேலியா - 15 ரன் வித்யாசத்தில் தோல்வி

#SAvWI
#SAvWI

நேருக்கு நேர்

இந்த இரு அணிகளும் 61 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. தென்னாப்பிரிக்கா 44 போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் 15 போட்டிகளிலும் வென்றுள்ளன. ஒரு போட்டி டை ஆகியுள்ளது. இன்னொரு போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. உலகக் கோப்பையில் விளையாடிய 6 போட்டிகளில், தென்னாப்பிரிக்கா 4-2 என முன்னிலை வகிக்கிறது. 2003 உலகக் கோப்பைக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. கடந்த உலகக் கோப்பையில், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவசம் செய்து டி வில்லியர்ஸ் ஆடிய (66 பந்துகளில் 162*) ஆட்டம் யாராலும் மறக்க முடியாதது!

பிளேயிங் லெவன்

தென்னாப்பிரிக்கா தங்கள் யுக்தியில் நிறைய மாற்றங்களோடு களமிறங்கவேண்டியிருக்கிறது. பிளேயிங் லெவனில் நிறைய மாற்றங்கள் செய்வார்களா தெரியவில்லை. இருந்தாலும் ஒருசில மாற்றங்கள் அவசியமாகிறது. தப்ராய்ஸ் ஷம்சிக்குப் பதிலாக, இடது கை வேகப்பந்துவீச்சாளர் பியூரான் ஹெண்ட்ரிக்ஸ் இன்று களமிறங்குவார். ஹஷிம் அம்லா தொடர்ந்து சொதப்பி வருகிறார். வங்கதேசத்துக்கு எதிராக ஓப்பனராகக் களமிறங்கிய மார்க்ரம், ஓரளவு சிறப்பாகவே விளையாடினார். அதனால், அவரைக் களமிறக்குவது நல்ல முடிவாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக, மார்க்ரமின் ஆஃப் ஸ்பின்னும் பயன்படும்.

#SAvWI
#SAvWI

வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை எந்த மாற்றமும் செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்றிருந்தாலும், அவர்களின் செயல்பாட்டில் குறை சொல்ல ஏதுமில்லை. ஆனால், ரஸல் மட்டும் முழு உடற்தகுதியோடு இல்லை என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் அவர்களைப் பாதிக்கலாம். ஒருவேளை ரஸல் ஆடவில்லை என்றால், அந்த இடத்தில் ஃபேபியன் ஆலனை இறக்குவது பலன் கொடுக்கும். இந்தியாவைப் போல் இரண்டு ஸ்பின்னர்களை வைத்து, தென்னாப்பிரிக்காவை மிடில் ஓவர்களில் கட்டுப்படுத்தலாம்.

தென்னாப்பிரிக்கா (உத்தேச அணி) : ஹஷிம் அம்லா / எய்டன் மார்க்ரம், குவின்டன் டி காக், ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, ராஸி வேன் டெர் டூசன், டேவிட் மில்லர், ஜே.பி.டுமினி, ஆண்டைல் ஃபெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ், பியூரன் ஹெண்ட்ரிக்ஸ், ககிசோ ரபாடா, இம்ரான் தாஹிர்.

வெஸ்ட் இண்டீஸ் (உத்தேச அணி) : கிறிஸ் கெய்ல், ஈவின் லூயிஸ், ஷாய் ஹோப், ஷிம்ரான் ஹிட்மேயர், நிகோலஸ் பூரண், ஆண்ட்ரே ரஸல் / ஃபேபியன் ஆலன், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் பிராத்வெயிட், ஆஷ்லி நர்ஸ், ஷெல்டன் காட்ரல், ஒஷேன் தாமஸ்.

அடுத்த கட்டுரைக்கு