Published:Updated:

``இந்திய ரசிகர்களே.. உங்க டிக்கெட்டைக் கொஞ்சம் தரலாமே..!” - நியூசிலாந்து வீரரின் கோரிக்கை

சத்யா கோபாலன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

ஜிம்மி நீஷம்
ஜிம்மி நீஷம் ( FaceBook /@Jimmy Neesham )

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதி போட்டிக்குத் தகுதி பெற்றன. முதல் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொண்டது. போட்டியின் முடிவில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் களம்கண்ட இங்கிலாந்து, எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்திய அணி
இந்திய அணி
Twitter/ @BCCI

லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை உலகக் கோப்பையைக் கையில் ஏந்தாத நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இந்த முறை இறுதிப் போட்டிக்குச் சென்றுள்ளன. எப்படியேனும் இந்தியா இறுதிப்போட்டிக்குள் நுழையும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களின் கனவைக் கலைத்தது தோனியின் ரன் அவுட். உலகக் கோப்பையிலிருந்து இந்தியா வெளியேறிவிட்டது என்ற அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இன்னும் பல ரசிகர்கள் சோகமாக சமூகவலைதளங்களில் கண்ணீரால் நிரம்பி வருகின்றனர்.

`45 நிமிட மோசமான கிரிக்கெட்... உலகக் கோப்பை கனவு க்ளோஸ்!' - கோலி சொல்லும் லாஜிக்! #INDvNZ

இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு இந்திய ரசிகர்கள் வாங்கிய டிக்கெட்டை மறு விற்பனை செய்யுமாறு நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜிம்மி நீஷம் ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார். “அன்புள்ள இந்திய ரசிகர்களே, நீங்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண வரப்போவதில்லையெனில் அதற்காக நீங்கள் வாங்கிய டிக்கெட்டுகளை தயவு செய்து அதிகாரபூர்வ இணையதளம் மூலம் மறு விற்பனை செய்துவிடுங்கள்.

இதன்மூலம் பெரும் லாபத்தை ஈட்டலாம் என்ற உந்துதல் ஏற்படும் என்று எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் அளிக்கும் டிக்கெட்டால் உண்மையான பல கிரிக்கெட் ரசிகர்கள் இறுதிப் போட்டியைக் காணும் வாய்ப்பை பெறுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.