Published:Updated:

7 தவறுகளும், ஏழாவது தோல்வியும்... பாகிஸ்தான் தோற்றது ஏன்?! #INDvPAK

Imad

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தோல்வி, சிறு தவறுகளால் நேர்ந்தது அல்ல. இந்தியாவின் மிகச் சிறந்த பர்ஃபாமன்ஸ் என்பதையும் தாண்டி, பல்வேறு தவறுகள் செய்திருக்கிறது சர்ஃபராஸ் அண்ட் கோ

7 தவறுகளும், ஏழாவது தோல்வியும்... பாகிஸ்தான் தோற்றது ஏன்?! #INDvPAK

இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் தோல்வி, சிறு தவறுகளால் நேர்ந்தது அல்ல. இந்தியாவின் மிகச் சிறந்த பர்ஃபாமன்ஸ் என்பதையும் தாண்டி, பல்வேறு தவறுகள் செய்திருக்கிறது சர்ஃபராஸ் அண்ட் கோ

Published:Updated:
Imad
முதல் தரக் கிரிக்கெட்டை முன்னேற்ற, இந்தியா அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது. மிகப்பெரிய முதலீடு செய்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் அப்படிச் செய்யவேயில்லை. அதை ஒவ்வொரு வருடமும் மாற்றிக்கொண்டே இருக்கிறோம். யாரென்றே தெரியாத ஒருசில நிருபர்களால்தான் பாகிஸ்தானின் முதல் தரக் கிரிக்கெட் நடத்தப்படுகிறது. அதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், இன்றுவரை அதுவே தொடர்கிறது
வாசிம் அக்ரம்

"ஒருகாலத்துல பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ராஜ்ஜியம் நடத்துச்சே" என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கேட்க, மனதில் இருந்த பாரத்தையெல்லாம் இறக்கிவைத்தார் அந்த பாகிஸ்தான் ஜாம்பவான். பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் இருக்கும் பிரச்னைகள் ஏராளம்தான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு சர்வதேச களத்தில் கூடவா அதை பிரதிபலிப்பத்துக்கொண்டிருப்பது? வெஸ்ட் இண்டீஸ் போர்டில் இல்லாத பிரச்னையா? பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு, பல அரசியல் காரணங்களைக் கூறலாம். ஆனால், அவர்கள் களத்தில் செய்யும் தவறுகள்தான் அனைத்தையும் விடப் பெரியதாக இருக்கிறது. நேற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் தவறு மேல் தவறாகச் செய்துகொண்டிருக்க, இந்தியாவிடம் உலகக் கோப்பையில் ஏழாவது முறையாகத் தோற்றிருக்கிறது அந்த அணி!

#INDvPAK
#INDvPAK
ஹசன் அலி எதற்கு?
காரணம் 1

இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளில் மிகவும் சுமாராகவே பந்துவீசினார் ஹசன் அலி. 24-0-172-1. இதுதான் அவருடைய நம்பர். வீழ்த்திய அந்த ஒரு விக்கெட்டும் கம்மின்ஸுடையது. லைன், லென்த் எதுவுமே சரியில்லை. எல்லா பேட்ஸ்மேன்களும் எளிதாகக் கையாள்கிறார்கள். அப்படியிருக்கையில் அவரை இன்னும் ஏன் அணியில் எடுக்கிறார்கள் என்று புரியவில்லை. மேட்ச் பிரிவ்யூவில்கூட ஹஸ்னைனை எடுக்கலாம் என்று பேசியிருந்தோம். ஆனால், பாகிஸ்தான் அதைப் பற்றி யோசிக்கவேயில்லை போல!

அணியில் எடுத்ததோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. முதல் ஸ்பெல்லே அவருக்கு. ஆமிர் ஒருபக்கம் நெருக்கடி கொடுத்தால், அதை இவர் சரிகட்டிவிடுகிறார்.

ஓவர் 1 : ஆமிர் - மெய்டன்
ஓவர் 2 : ஹசன் அலி - 9 ரன்கள்
ஓவர் 3 : ஆமிர் - 2 ரன்கள்
ஓவர் 4 : ஹசன் அலி - 5 ரன்கள்
ஓவர் 5 : ஆமிர் - 4 ரன்கள்
ஓவர் 6 : ஹசன் அலி - 12 ரன்கள்
Hasan Ali
Hasan Ali
AP

ஆமிரின் முதல் ஸ்பெல்லையும் சேர்த்து பயனற்றதாக்கியது ஹசன் அலி வீசிய அந்த 3 ஓவர்கள். இவரது ஓவரில் நன்றாக ரன் வர, ஆமிர் ஓவரில் டாட் பால் வைப்பதைப் பற்றி இந்திய பேட்ஸ்மேன்கள் அலட்டிக்கொள்ளவேயில்லை.

வழக்கமாக நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கும் ரோஹித் ஷர்மாவை, இரண்டாவது ஓவரிலிருந்தே டாப் கியரில் பயணிக்க வைத்த பெருமை ஹசன் அலியையே சேரும். மிடில் ஓவர்களிலாவது சரியாக வீசினாரா? அதுவும் இல்லை. எவ்வளவு வெளியே பந்துவீச முடியுமோ அந்த அளவுக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார். ரோஹித், ராகுல், கோலி எல்லோருமே மிகவும் எளிதாக இவரைக் கையாண்டனர். எந்த ரிஸ்கும் இன்றி ரன்ரேட் கூடிக்கொண்டே இருந்தது. சர்ஃபராஸ் அஹமது, பிளான் பி என்றவொன்று இல்லாமல், 9 ஓவர்கள் இவரையே வீசச்செய்தார். 9 ஓவர்களில் 84 ரன்கள்!

Rohit Sharma
Rohit Sharma
ரோஹித்துக்கு வீசப்பட்ட லைன்!
காரணம் 2

'இந்திய பேட்ஸ்மேன்கள் இடது கை வேகப்பந்துவீச்சுக்குத் திணறுவார்கள்' என்பது மொத்த உலகமும் அறிந்ததே. அதுவும் அதை அம்பலப்படுத்திய ஆமிரே இன்று பந்துவீசப்போகிறார். எப்படியும் பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஒன்றுமே இல்லை. இடது கை பவுலர்களிடம் திணறுவார்கள் என்பதற்காக, இஷ்டத்துக்கும் லைன் அண்ட் லென்த்தை மாற்றினால் விக்கெட் வீழ்ந்துவிடுமா என்ன? 'இடது கை பேட்ஸ்மேன்களின் இன்ஸ்விங்கர்களுக்குத்தான் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்' என்று பாகிஸ்தான் அறியவில்லைபோல!

ஆமிர், வஹாப் ரியாஸ் இருவரும் நேற்றைய போட்டியில் தங்களின் பலத்தைச் சரியாகப் பயன்படுத்தவேயில்லை. ஆமிர் வீசிய முதல் இரண்டு பந்துகள் மட்டுமே ரோஹித்துக்குக் கொஞ்சம் சவாலளித்தது. அதன்பின் மிகவும் எளிதாக அவரைக் கையாண்டார் ஹிட்மேன். ஆடுகளம் பெரிதாக ஸ்விங்குக்கு உதவவில்லை. அப்படியிருக்கையில் ஸ்டம்புகளையாவது அட்டாக் செய்திருக்கவேண்டும். ஆனால், பெரும்பாலான பந்துகள், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேதான் சென்றன. அது எந்த வகையிலும் இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தவில்லை.

Virat Kohli
Virat Kohli

அரௌண்ட் ஸ்டம்ப் லைனிலிருந்து வந்து பந்துவீசியபோதும் வஹாப், ஸ்டம்புகளுக்குக் குறிவைக்கவில்லை. சரி விராட் பேட்டிங் செய்யும்போது அந்த 'அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்' லைனை சரியாகப் பயன்படுத்தினார்களா? அதுவும் இல்லை. லைனை மாற்றிக்கொண்டே இருந்தார்கள். நான்காவது ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட சில பந்துகளிலும் லென்த் பிரச்னை. ஒன்று, ஷார்ட் லென்த்தில் பிட்சாகும்.. கோலி டிஃபண்ட் செய்வார். இல்லை, ஃபுல் லென்த்தில் பிட்சாகும்... அதை அழகாக டிரைவ் செய்வார். இப்படி அவரையும் எளிதாக அரைசதம் அடிக்கவிட்டார்கள். கடைசி கட்டத்தில் ஆமிருக்கு வீழ்ந்த விக்கெட்டுகள் எல்லாம், வேகமாக அடிக்க நினைத்து வீழ்ந்தவைதான். தொடக்கத்தில் இவர்கள் நெருக்கடியே கொடுக்காதது, இந்திய ரன்ரேட்டை, ஸ்கோரிங்கை பாதிக்கவேயில்லை!

ஆமிரைப் பயன்படுத்தியதில் தவறு..!
காரணம் 3

ஆமிரின் முதல் ஸ்பெல் (4-1-8-0) ஏழாவது ஓவரோடு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இந்திய ஓப்பனர்கள் இருவரும் மிகவும் எளிதாக ரன் சேர்த்துக்கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட அடுத்த 16 ஓவர்களில் மட்டும் 100 ரன்கள் எடுத்துவிட்டனர். ஒரு தொடக்க ஜோடி 20 ஓவர்களையும் தாண்டி ஆடிக்கொண்டிருக்கும்போது, எப்படியாவது அதைப் பிரிக்க முயற்சிக்கவேண்டும். அணியின் சிறந்த பவுலரை மீண்டும் அழைத்திருக்கவேண்டும். ஓரிரண்டு ஓவர்களாவது ஆமிருக்குக் கொடுத்திருக்கவேண்டும். அந்த இடைப்பட்ட 16 ஓவர்களில், வஹாப் ரியாஸ், சதாப் கான், இமாத் வசீம், ஷோயப் மாலிக், முகமது ஹஃபீஸ் எனப் பலருக்கும் கொடுத்த சர்ஃபராஸ், ஆமிருக்கு ஓவர் கொடுக்கவில்லை.

Amir
Amir

ஆமிரை கோலிக்காக வைத்திருப்பது என்று முன்பே முடிவெடுத்துவிட்டார் போல். அதனால், ராகுல் - ரோஹித் கூட்டணிக்கு மீண்டும் அவர் பயன்படுத்தவேயில்லை. ராகுல் அவுட்டான சில நிமிடங்களுக்குப் பின்புதான் ஆமிரை அழைத்தார். ஆம், கோலிக்காகத்தான்! கோலியின் விக்கெட்டுக்காக ஆமிரை வைத்திருப்பது ஒருபுறமிருக்கட்டும்... அந்த விக்கெட்டை வீழ்த்த கோலி களமிறங்கவேண்டுமே! அதைப் பற்றி அவர் யோசிக்கவில்லை போல். ஏதோ ராகுல், ஒரு மோசமான தவறால் விக்கெட்டை இழக்கு நேர்ந்தது. ஒருவேளை அவர்கள் இன்னும் 10 - 15 ஓவர்கள் ஆடியிருந்தாலும், சர்ஃபராஸ் ஆமிரைப் பயன்படுத்தியிருக்கமாட்டார் போல..!

ஸ்பின்னர்களின் லைன் & லென்த்..!
காரணம் 4

கீழே உள்ள படம், இந்திய ஸ்பின்னர்கள் வீசிய லைன் & லென்த். 50 சதவிகித பந்துகளை குட் லென்த்தில்தான் பிட்ச் செய்தார்கள். ஓவர் பிட்சுடு டெலிவரிகள் அவ்வளவாக இல்லை. தங்களின் பலம் என்ன, திட்டம் என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்து நடைமுறைப்படுத்தினர். ஆடுகளத்தின் தன்மை, பேட்ஸ்மேன்களின் தரம் என எந்த விஷயத்துக்காகவும் அவர்கள் மாறவில்லை. மிகவும் நேர்த்தியாகப் பந்துவீசினர். ஸ்டம்பின் இரண்டு பக்கமும் பந்தை பிட்ச் செய்தனர். இந்த இடம்தான், பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் தவறிய இடம்.

Indian spinners to Pakistan
Indian spinners to Pakistan

பாகிஸ்தானின் விக்கெட் டேகிங் பவுலர் சதாப் கான் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், நேற்று அவர் (9-0-61-0) அதை சரியாக பூர்த்தி செய்யவில்லை. காரணம் அவர் பந்தை பிட்ச் செய்த லைன், லென்த். சில பந்துகளை ஷார்ட் லென்த்தில் பிட்ச் செய்து, இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட வழிவகுத்தார் சதாப். சரி, ஒருசில தவறுகள் நடப்பது சகஜம்தான் என்று நினைத்தால், அவரது லைன்தான் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒரு லெக் ஸ்பின்னர், தான் வீசிய 54 பந்துகளில் ஒன்றைக்கூட லெக் ஸ்டம்ப் லைனில் வீசவில்லை என்பதை நம்பவே முடியவில்லை. இந்தியாவில் இடது கை பேட்ஸ்மேன்களே இல்லையெனும்போது, இவர் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தியிருக்கவேண்டும். பந்து, ஸ்டம்புகள் நோக்கி சுழன்று வரும்போதுதான், செட்டிலாகி நிற்கும் பேட்ஸ்மேன்களுக்கு அது நெருக்கடியை ஏற்படுத்தும். ஆனால், சதாப் அப்படிச் செய்யவில்லை. ஸ்டம்ப் லைனில் பிட்சானதே மொத்தம் 5 பந்துகள்தான். சரி, வெளியே பிட்ச் செய்கிறாரே கூக்ளியால் மிரட்டியிருப்பாரோ என்று பார்த்தால் அதுவும் இல்லை.

Shadab Khan to India
Shadab Khan to India

ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் செய்கிறார். லெக் பிரேக்தான் ஆகிறது. பெரிய வேரியேஷன்களும் இல்லை! அது என்ன திட்டம் என்பதுதான் சுத்தமாகப் புரியவில்லை! Planning, Execution என ஒவ்வொரு ஏரியாவிலும் முடிந்தவரை தவறிழைத்தார் சதாப். மிகமுக்கியமான மிடில் ஓவர்களில் அணு அளவுகூட பாகிஸ்தானில் தாக்கம் ஏற்படுத்தமுடியவில்லை.

முகமது ஹஃபீஸ் ஆல்ரவுண்டர்தானே?
காரணம் 5

உண்மையில் இது தனியாகவே எழுதப்பட, பேசப்பட, விவாதிக்கப்படவேண்டிய விஷயம். இது இரண்டு வருடங்களாகவே எனக்குள் எழுந்துகொண்டிருக்கும் கேள்வி. ஏன் இந்தியாவுக்கு எதிராக மட்டும் முகமது ஹஃபீஸுக்கு அதிகம் ஓவர் வழங்கப்படுவதில்லை? நேற்று தன் முதல் ஓவரில் 11 ரன்கள் கொடுத்தார். அதற்காக அப்படியே ஓவர் கொடுக்காமல் விட்டுவிடுவதா? அவர் இன்றும் கேதர் ஜாதவ்போல் பார்ட் டைமர் இல்லை. ஒரு முழு நேர ஆலரவுண்டர். பல மாதங்கள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவர். ஆனால், அவருக்கு இரண்டாவது ஓவர் வழங்கப்படவில்லை.

Hafeez
Hafeez

கூர்ந்து கவனித்தால், இது இந்தியாவுக்கு எதிராக மட்டுமே நடக்கும் விஷயம் என்பது புரியும். 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலிலும் இவருக்கு ஒரு ஓவர்தான் கொடுக்கப்பட்டது. அதே தொடரின் லீக் போட்டியில் ஒரு ஓவர்கூட கொடுக்கப்படவில்லை. இந்தியா 300 ரன்கள் அடித்தும்..! ஆனால், அந்த இரு போட்டிகளுக்கும் இடையே, 3 போட்டிகளில் 23 ஓவர்கள் பந்துவீசினார் ஹஃபீஸ். இந்த உலகக் கோப்பையிலும் இதற்கு முன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தலா 7 ஓவர்கள் பந்துவீசினார். ஆனால், இந்தியாவுக்கு எதிராக மட்டும் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை.

நேற்று மிடில் ஓவர்களில் இந்தியா முழு ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும்போது, ஒரு அனுபவ வீரரை சர்ஃபராஸ் பயன்படுத்தாதது ஆச்சர்யம்தான். உண்மையில், இந்தக் கேள்விக்கான விடை, சர்ஃபராஸிடம் இருக்கும். அது பல பெரிய அதிர்ச்சிகளை உண்டாக்கலாம்.

ஃபீல்டிங்..!
காரணம் 6

பாகிஸ்தான் ஃபீல்டிங் பற்றி வேறென்ன சொல்வது. காலம் காலமாக இப்படித்தான் இருக்கிறது. ரோஹித் - ராகுல் இருவருக்குமிடையே நேற்று அத்தனை குழப்பங்கள். இதுவே ஆஸ்திரேலியாவாக இருந்திருந்தால், இருவரையும் ஐந்து முறையாவது ரன் அவுட் செய்திருப்பார்கள். ஆனால், பாகிஸ்தான்..! கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பையும் தவறான எண்டில் த்ரோ செய்து கோட்டை விட்டார் வஹாப் ரியாஸ். இன்னொருமுறை ஃபைன் லெக்கில் நின்று மிகவும் மெதுவாக வந்து அவர் பந்தை எடுக்க, கடுப்பான சர்ஃபராஸ் உடனடியாக அவரை வேறு இடத்துக்கு அனுப்பினார்.

Wahab Riaz
Wahab Riaz

மற்ற போட்டிகளைப் போல் நேற்று டிராப்கள் இல்லையென்றாலும், பந்தை எடுத்த வேகம், த்ரோ போன்றவற்றில் சொதப்பினார்காள் பாக் ஃபீல்டர்கள். அந்த முதல் விக்கெட்டை சீக்கிரமே வீழ்த்தியிருந்தால், ஆட்டம் மொத்தமாகவே மாறியிருக்கலாம்! கிறிஸ் கெய்ல்கூட டைவ் அடித்து பந்தைத் தடுக்கிறார். ஆனால், இவர்கள்தான்..!

மிடில் ஆர்டர் சொதப்பல்
காரணம் 7

இந்த உலகக் கோப்பைக்கு முன், இந்திய அணியின் மிடில் ஆர்டரை நினைத்து நாம் எப்படியெல்லாம் புலம்பியிருப்போம். இந்த உலகக் கோப்பையைப் பார்த்தால், பல அணிகளைவிட இந்திய மிடில் ஆர்டர் பரவாயில்லை என்று தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான்..!

Malik
Malik

இதுவரை ஆடிய 4 போட்டிகளில், நம்பர் 4,5,6,7 பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சேர்ந்து அடித்துள்ள ஸ்கோர் வெறும் 342! சராசரி 22.8. அதுவும் இங்கிலாந்துக்கு எதிராக ஹஃபீஸ், சர்ஃபராஸ் அடித்த அரைசதங்களால் தான் இந்த சராசரி. மாலிக் தொடர்ந்து இரண்டு டக். ஆஃபிஃப் அலி, ஹாரிஸ் சோஹைல் இருவருமே சொதப்பல். யாருமே நிலைத்து நின்று ஆடுவதில்லை. போதாதற்கு மோசமான ஷாட் செலக்சனால் எளிதாக விக்கெட்டை இழக்கின்றனர். நேற்றும் அப்படித்தான், பாண்டியா ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ, அந்த இடத்திலயே அவர்களின் தோல்வி முடிவு செய்யப்பட்டுவிட்டது.

ஒரு போட்டியில், இப்படிப் பல்வேறு தவறுகள் செய்திருக்கிறது பாகிஸ்தான். இப்போது புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அரையிறுதியைப் பற்றி கனவு காண வேண்டுமென்றாலும் இனி வெற்றிகளைப் பதிவு செய்யவேண்டும். அதற்கு இந்தத் தவறுகளை முற்றிலுமாக சரிசெய்யவேண்டும்.