Published:Updated:

கரீபிய புயல்களைச் சமாளிப்பார்களா பாகிஸ்தான் வேகங்கள்? #WorldCup2019

கரீபிய புயல்களைச் சமாளிப்பார்களா பாகிஸ்தான் வேகங்கள்? #WorldCup2019
கரீபிய புயல்களைச் சமாளிப்பார்களா பாகிஸ்தான் வேகங்கள்? #WorldCup2019

இப்போதைக்கு, டிரென்ட் பிரிட்ஜ் போல் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் பிட்ச் எதுவும் இல்லை. லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா என்றால், டிரென்ட் பிரிட்ஜ், பேட்ஸ்மேன்களின் சொர்க்கம்.

போட்டி எண் : 2

தொடங்கும் நேரம் : பிற்பகல் 3 மணி

மைதானம் : டிரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம்

இப்போதைக்கு, டிரென்ட் பிரிட்ஜ் போல் பேட்டிங்குக்கு ஒத்துழைக்கும் பிட்ச் எதுவும் இல்லை. லார்ட்ஸ் கிரிக்கெட்டின் மெக்கா என்றால், டிரென்ட் பிரிட்ஜ், பேட்ஸ்மேன்களின் சொர்க்கம். கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த மைதானத்தின் சராசரி ரன்ரேட் 6.98! இந்த மைதானத்தில்தான் கிறிஸ் கெய்ல், ரஸல், ஹிட்மேயர் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் தன் முதல் போட்டியை விளையாடப்போகிறது! அண்ணனுக்கு ஒரு 400 பார்சேல்..!

பாகிஸ்தான் அணி பந்துவீச்சுக்குப் பெயர்போனது என்றாலும், அவர்களின் சமீபத்திய ஃபார்ம் சுமார்தான். சொல்லிக்கொள்ளும்படியான பெர்ஃபாமன்ஸ்கள் இல்லை. டிரென்ட் பிரிட்ஜ் போன்ற ஆடுகளங்களில், கொஞ்சம் இடம் கொடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கதகளி ஆடிவிடுவார்கள். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் எடுத்துக்கொண்டிருப்பது முக்கியம். ஷதாப் கானின் சுழல் மிகவும் முக்கியப்பங்கு வகிக்கும். ஆப்கானிஸ்தானுடனான பயிற்சிப் போட்டியில் தோற்றது, அவர்களின் பேட்டிங் மீதும் கேள்வி எழுப்புகிறது. பாபர் ஆஸம், எல்லாப் போட்டிகளிலும் போராடுகிறார். ஆனால், அவருக்கான நிலையான பார்ட்னர் ஒருவர் இருப்பது அவசியம்.

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்

நேருக்கு நேர் :

இந்த இரு அணிகளும் இதுவரை 133 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றுள் 70 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற்றுள்ளது. மற்ற 60 போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றுள்ளது. உலகக் கோப்பையில் மோதிய 9 போட்டிகளின் ரெக்கார்டு, 6-3 என வெஸ்ட் இண்டீஸுக்குச் சாதகமாக இருக்கிறது. கடந்த உலகக் கோப்பையில், இந்த இரு அணிகளும் மோதிய போட்டியில் 150 ரன்கள் வித்யாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் 17 பந்துகளில் 42 ரன்கள் அடித்துவிட்டு, 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி ஆட்டநாயகனானார் ஆண்ட்ரே ரஸல். இப்போது அதைவிட முரட்டு ஃபார்மில் இருக்கிறார். என்ன நடக்குமோ!

பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?

வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரை கிறிஸ் கெய்ல், ஈவின் லூயிஸ், ஷாய் ஹோப், ஹிட்மேயர் நிச்சயம் ஆடுவார்கள். டேரன் பிராவோ, நிகோலஸ் பூரண் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்யவேண்டியிருக்கும். பிராவோவின் சமீபகால செயல்பாடு சொல்லிக்கொள்ளும்படியில்லை. அதனால், லோயர் மிடில் ஆர்டரைப் பலப்படுத்த பூரணைக் களமிறக்கலாம். ஆல்ரவுண்டர்களாக ரஸல், ஹோல்டர் இருப்பார்கள். பிராத்வெயிட்டுக்கு இடம் கொடுக்க நினைத்தால், ஒரே ஸ்பின்னரோடு களமிறங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதேபோல் வேகப்பந்துவீச்சில் ஷெனான் கேப்ரியல், ஷெல்ன் காட்ரல் இருவருக்கும் பிளேயிங் லெவனில் விளையாட போட்டி இருக்கும்.

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்

பாகிஸ்தான் அணியில் இவ்வளவு குழப்பங்கள் இருக்காது. இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான், பாபர் ஆஸம், சர்ஃபராஸ் அஹமது, ஹஃபீஸ், மாலிக், இமாத் வசீம், ஷதாப் கான், ஹசன் அலி, ஷஹீன் அப்ரிடி ஆகிய 10 பேரும் கட்டாயம் விளையாடுவார்கள். வஹாப் ரியாஸ் அல்லது ஆமிர் இருவரில் ஒருவரை நீக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

கீ பிளேயர்கள்

பாகிஸ்தான் : பாபர் ஆசம், ஷதாப் கான்

வெஸ்ட் இண்டீஸ் : ஷாய் ஹோப், ஜேசன் ஹோல்டர்.

வெற்றி வாய்ப்பு :

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். சமீப போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்யும் அணி 350 ரன்களை எடுத்துவிட, அதை சேஸ் செய்யவேண்டிய நெருக்கடியில் அடுத்து ஆடும் அணிகள் சீக்கிரம் விக்கெட்டை இழக்கின்றன. அதனால், முதலில் பேட் செய்யும் அணிக்கு ஆட்டம் சாதகமாக அமையலாம்.

அடுத்த கட்டுரைக்கு