Published:Updated:

'இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்' – இது பாகிஸ்தானின் வெற்றி – தோல்விக் கதை!

Shaheen Afridi
Shaheen Afridi

ஃபகர் ஜமான் – இமாம் உல் ஹக் ஜோடி அந்த அதிசயத்தை அரங்கேற்றும் நோக்கில் களமிறங்கினர். ஆனால், அவர்கள் ஆடியவிதம் அதிசயத்தை நிகழ்த்துவதற்கானதாகத் தெரியவில்லை

“இந்த போட்டியில் அதிசயம் நடந்தால் நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறலாம்” எனப் போட்டிக்கு முன்பு பேட்டி கொடுதார் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ். அதாவது பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால், குறைந்தது 307 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிபெற வேண்டும். இரண்டாவதகாக பேட்டிங் செய்தால் வங்கதேசத்திற்கு வீசப்படும் முதல் பந்துக்கு முன்பே பாகிஸ்தான் ரசிகர்களின் அரையிறுதி ஆசை (பேராசை) துவம்சமாகிவிடும். சர்ஃப்ராஸ் சொன்ன அந்த அதிசயம் நடக்க வேண்டுமானால் பாகிஸ்தான் குறைந்தது 400 - 450 ரன்கள் எடுக்கவேண்டும்.

எப்படியோ பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் டாஸை வென்று விட்டார். எதிர்ப்பார்த்தபடி பேட்டிங்கும் தேர்வு செய்துவிட்டார். ஃபகர் ஜமான் – இமாம் உல் ஹக் ஜோடி அந்த அதிசயத்தை அரங்கேற்றும் நோக்கில் களமிறங்கினர். ஆனால், அவர்கள் ஆடியவிதம் அதிசத்தை நிகழ்த்துவதற்கானதாகத் தெரியவில்லை. அவர்களை அதிரடி காட்டவிடாமல் பார்த்துக் கொண்டார் மெஹதி ஹாசன் மிராஜ்.

Babar Azam
Babar Azam

ஓப்பனர்கள் இருவரும் இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் அவர்களை அட்டாக் செய்ய ஆஃப் ஸ்பின்னரான மிராஜை முதல் ஓவரிலேயெ கொண்டு வந்தார் வங்கதேச கேப்டன் மொர்டசா. எல்லா பந்துகளையும் குட் லென்த்தில் பிட்ச் செய்து, ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் அட்டாக் செய்தார் மிராஜ். ஃபகர் ஜமான் அவரின் பந்துகளில் ரொம்பவும் திணறினார். அவரை ரன்கள் அடிக்க விடமால், டாட் பால்கள் ஆடச்செய்து நெருக்கடி ஏற்படுத்தினார். ஐந்தாவது ஓவரில் ஷைஃபுதின் பந்தில் கட் அடிக்க முற்பட்டு பாயின்ட் திசையில் நின்றிருந்த மிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் ஃபகர் ஜமான். அவர் 31 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தார்.

அதன் பிறகு ஜோடி சேர்ந்த இமாம் – பாபர் ஆசம் ஜோடியின் ஆட்டம், `அதிசயம் நடப்பது கஷ்டம்” என்பதை உணர்த்தியது. அதேநேரத்தில் இயல்பான போட்டியில் நல்ல ஸ்கோர் அடிப்பதற்கான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் வங்கதேசத்தின் சுழல் மற்றும் வேகப்பந்து இரண்டையும் நேர்த்தியாக எதிர்கொண்டனர். இருவரும் தவறுகள் குறைவாகவே செய்தனர். அப்படி அவர்கள் செய்யும் ஒரு சில தவறுகளை பயன்படுத்த தவறவிட்டனர் வங்கதேச வீரர்கள். பல கேட்ச் டிராப்கள், மிஸ் ஃபீல்டிங் செய்து அவர்களின் சுமாரான பெளலிங்கிற்கு விழும் அடியை அதிகரித்தனர்.

Imam Ul Haq
Imam Ul Haq

இந்த உலகக் கோப்பையில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தி, கேப்டன் என்கிற ஒரே காரணத்தால் அணியில் இருக்கும் மொர்டசாவின் மோசமான ஃபார்ம், இந்தப் போட்டியிலும் தொடர்ந்தது. பாபர் ஆசம் – இமாம் உல் ஹக் இருவரும், லைன் அன்ட் லென்தில் தடுமாறிய வங்கதேச வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சரியான ட்ரீட்மென்ட் தந்தனர். இருவரும் 157 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நான்கு ரன்களில் சதத்தை மிஸ் செய்தது மட்டுமல்லாமல், லார்ட்ஸ் வரலாற்றுப் பக்கத்தில் தன்னுடைய பெயர் பொறிக்கப்படும் வாய்ப்பைத் தவறவிட்டார் பாபர் ஆசம்.

ஆனால், இமாம் அதைத் தவறவிடவில்லை. தன்னுடைய முதல் உலகக் கோப்பை சதத்தை பதிவு செய்து, லார்ட்ஸ் புக்கிலும் தன்னுடைய பெயரை பொறித்தார். அந்த சரித்திர நிகழ்வு நடந்த சில நொடிகளிலேயே, ரன் ஓட முற்படும் போது தவறுதலாக கால் ஸ்டம்பில் பட்டு ‘ஹிட் அவுட்’ முறையில் அவுட்டானார்.

அதன் பிறகு மற்ற வீரர்கள் எல்லோரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். 44 ஓவர் முடிவில் 255-5 என தடுமாறியது பாகிஸ்தான். இதற்கிடையில் சர்ஃப்ராஸ் ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். இருந்தும் வங்கதேச அணியின் டெத் பெளலிங் சொதப்பலாலும், இமாத் வாசிமின் அதிரடியாலும் (26 பந்துகளில் 44 ரன்கள்) பாகிஸ்தான் கடைசி ஆறு ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தது. ஸ்கோர் 315 -9.

Shakib Al Hasan
Shakib Al Hasan

‘நல்ல மீன்கள் விற்கப்படும்’ டூ ‘மீன்கள் விற்கப்படும்’!

வடிவேலு ஒரு காமெடியில், “இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்” என்று எழுதி வைத்திருந்ததை, ஒவ்வொரு வார்த்தையாக அழித்து கடைசியில் எல்லாற்றையும் அழித்துவிடுவார். அதேபோல, `அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்“ என முதல் இன்னிங்ஸ் தொடங்கும் முன் வேண்டிக்கொண்ட பாகிஸ்தான் ரசிகர்கள், முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் `வெற்றிபெற்றால் போதும்’’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறவேண்டுமானால் வங்கதேச அணியை ஏழு ரன்களுக்குள் ஆல் அவுட்டாக்க வேண்டும் என்ற சூழல். தலைகீழாக நின்றால் கூட முடியாத காரியம். 1.5 ஓவரில் வங்கதேசம் அணி 6 ரன்களை கடந்தது. அப்போதே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்புக்கு எண்டு கார்டு விழுந்தது. அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த தொடரில் எல்லா போட்டிகளிலும் அருமையாக தொடங்கி, அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் தவிக்கும் செளம்யா சர்க்கார், நேற்றும் அதேபோல தவித்தார். இந்தியாவுக்கு எதிராக அவுட்டானதைப் போலவே, அதே மாதிரி பந்தில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து தமீம் இக்பாலும் பாகிஸ்தான் அணியின் இளம் சூறாவளி ஷஹீன் அஃப்ரிடியின் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

Shakib Al Hasan
Shakib Al Hasan

இந்த போட்டியிலும் பேட்டிங்கில் வங்கதேச அணியின் டாப் ஸ்கோரர் ஷகீப்தான். இந்த உலகக் கோப்பையில் ஷகீப் ஆடிய ஆட்டத்தில், ஒரு பத்து சதவிகிதம் மற்ற வீரர்கள் செய்திருந்தால் கூட வங்கதேச அணி அரையிறுதிக்கு முன்னேறியிருக்கக் கூடும். இது பெளலர், பேட்ஸ்மேன் எல்லோருக்கும் பொருந்தும். 9 போட்டிகளில் 5 அரைசதம் 2 சதம் உட்பட 606 ரன்கள் (சராசரி103), பெளலிங்கில் 11 விக்கெட் எடுத்து, உலகக் கோப்பையின் சிறந்த ஃபெர்பார்மன்ஸை கொடுத்திருக்கிறார் ஷகீப்.

ஷஹீன் அஃப்ரிடியின் மிரட்டல் பெளலிங்

நேற்றைய போட்டியிலும் அரைசதம் கடந்தார் ஷகீப். லிட்டன் தாஸ் – ஷகீப் கூட்டணி ஒரு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வெஸ்ட் இண்டீஸுடன் ஆட்டத்தைப் போல் இந்த போட்டியிலும் இருவரும் வெற்றி தேடித்தருவர் என எதிர்ப்பார்த்தபோது மீண்டும் அந்த இளம் சூறாவளியின் “ஸ்லோ பாலுக்கு பலியானார் லிட்டன் தாஸ். அதோடு நிற்கவில்லை அவரின் விக்கெட் வேட்டை. வங்கதேச அணியின் எல்லா முக்கிய வீரர்களையும் அவர் தன் அற்புதமான பெளலிங்கால் வெளியேற்றினார், ஷகீப் உட்பட.

வங்கதேசத்திடம் தன் வாழ்நாளின் மிகச்சிறந்த பெளலிங்கை வெளிப்படுத்தினர். விக்கெட் எடுத்தாலும் ரன்களை வழங்கும் ஷஹீன், நேற்று அந்த ஏரியாவிலும் பாஸ் மார்க் வாங்கினார் (எகானமி 3.81). ஆறு விக்கெட் கைப்பற்றி உலகக் கோப்பையில் இளம் வயதில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய பெளலர் என்ற சாதனையையும் படைத்தார். இறுதியில் வங்கதேசம் 221 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Shaheen Afridi
Shaheen Afridi

இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் இருந்தாலும் பாபர் ஆசம், இமாம் உல் ஹக், ஹாரிஸ் சோஹைல், ஷஹீன் அஃப்ரிடி என அடுத்த தலைமுறை வீரர்கள் சிறப்பான பங்களிப்பைத் தந்தனர். அடுத்த உலகக் கோப்பைக்கான பாதி அணி இப்போதே உருவாகிவிட்டது.

அடுத்த கட்டுரைக்கு