Published:Updated:

‘முதலில் தோல்விதான்; வலுவாக வந்தோம் கோப்பையை வென்றோம்’ - வக்கார் யூனிஸ் ஆறுதல்

ராம் பிரசாத்

முதல் போட்டியிலே தோல்வி என்பது ஏற்றுக்கொள்வதற்கு கடினமாகத் தான் இருக்கும் அதற்காக எல்லாம் முடிந்துவிட்டது எனக் கூறுவது அபத்தமானது என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வக்கார் யூனிஸ் பேசியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் சீட்டுக்கட்டு போல் பாகிஸ்தான் வீரர்கள் சரிந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. உலகக்கோப்பை முதல் போட்டியிலே தோல்வி, அதுவும் மிகக்குறைந்த ஸ்கோரில் வீழ்ச்சி இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் சற்று உடைந்து தான் போயுள்ளனர். ஒரு போராட்ட வீரனுக்கு உடல்வலிமையும் மனவலிமையும் மிகவும் அவசியது. முதல் தோல்வி பாகிஸ்தான் வீரர்களுக்கு மனரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். விமர்சனங்கள் என்ற பெயரில் எழும் கணைகளும் மேலும் அவர்களை காயப்படுத்தும். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாக வக்கார் யூனிஸ் பேசியுள்ளார்.

வக்கார் யூனுஸ்
வக்கார் யூனுஸ்
"ஒரு தோல்வியை வைத்து எதையும் கணித்து விடாதீர்கள். உலகக் கோப்பை என்பது ஒரு நெடுந்தொடர்."
வக்கார் யூனுஸ்

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனுஸ், `ஒரு தோல்வியை வைத்து எதையும் கணித்து விடாதீர்கள். உலகக் கோப்பை என்பது ஒரு நெடுந்தொடர். இன்னும் நிறைய போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. ஒரு போட்டியில் அடைந்த தோல்விக்காக பாகிஸ்தான் அணியே முடிந்துவிட்டது என்பது போல் யாரும் பேசவேண்டாம். 1992 உலகக் கோப்பை தொடரின் முதல்போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றது. ஆனால் மீண்டும் வலுவாக எழுந்து வந்தோம். அந்தத் தொடரை வெற்றிகரமாக முடித்து உலகக் கோப்பையைக் கைப்பற்றினோம். 27 வருடங்களுக்கு முன்பு நடந்தது மீண்டும் நடக்கலாம். வரலாறும் மீண்டும் திரும்பும். தோல்விகள் அணிக்குள் சிறு சேதாரத்தை ஏற்படுத்தும். இந்தச் சூழல் சற்று கடினமானதாகத்தான் இருக்கும். அதிலிருந்து மீண்டும் வரவேண்டும்.

இந்தத் தருணத்தில் எல்லோரும் கவலையாகத்தான் இருப்பார்கள். தற்போது அமைதியாக இருக்க வேண்டும் மீண்டும் வலுவாக எழுந்து வரவேண்டும். அவர்கள் தாங்கள் யார் என்பதை தனக்குள் தேட வேண்டும். தனது அடையாளத்தை வெளிக்கொண்டு வரவேண்டும். அந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்கவேண்டும். எதனால் தோற்றோம் என்பதை ஆராய வேண்டும்.

ரஸல்
ரஸல்

பாகிஸ்தான் வீரர்களைத் திணறடித்த மேற்கிந்திய பந்துவீச்சாளர்களைப் பாராட்ட வேண்டும். ரஸல் சிறப்பாகப் பந்துவீசினார். அவரது மூன்று ஓவர்கள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஓவர்களில் சில விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் வெற்றியை நோக்கிப் பயணித்த போதும் முகமது அமீர் சிறப்பாகச் செயல்பட்டு சில விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த விக்கெட்டுகள் அவருக்கு நம்பிக்கையைக் கொடுக்கும்'' எனப் பேசியுள்ளார்.

ராம் பிரசாத்