Published:Updated:

அடுத்த ஹோல்டிங், அடுத்த கார்னர்..? வெஸ்ட் இண்டீஸ் இளம் புயல் ஒஷேன் தாமஸ்! #PlayerBio

ஒஷேன் தாமஸ்
ஒஷேன் தாமஸ்

ஆறடி உயரம் கொண்ட தாமஸ் அசுர வேகத்தில் பந்து வீசுவது, அதிலும் பவுன்சர்கள், யார்க்கர் என மிரட்டுவதே நிச்சயம் எல்லா பேட்ஸ்மேன்களையும் நிலைகுலையச் செய்யும். அதிலும் ஸ்விங் இருந்தால்..?

பெயர் : ஒஷேன் தாமஸ்

பிறந்த தேதி : 18.2.1997

ஊர் : கிங்ஸ்டன், ஜமைக்கா

ரோல் : பெளலர்

பெளலிங் ஸ்டைல் : வலது கை வேகப்பந்து வீச்சாளர்

பேட்டிங் ஸ்டைல் : இடது கை பேட்ஸ்மேன்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 21-10-2018

உலகக் கோப்பை 2019
உலகக் கோப்பை 2019

பிளேயிங் ஸ்டைல்

147 KM/HR ,147 KM/HR ,140 KM/HR, 149 KM/HR ,147 KM/HR ,147 KM/HR

இது ஒஷேன் தாமஸ் இந்தியாவுக்கு எதிரான, முதல் ஒருநாள் போட்டியின் முதல் ஓவரில் வீசப்பட்ட ஆறு பந்துகளின் வேகம். ஆறடி உயரம் கொண்ட தாமஸ் அசுர வேகத்தில் பந்து வீசுவது, அதிலும் பவுன்சர்கள், யார்க்கர் என மிரட்டுவதே நிச்சயம் எல்லா பேட்ஸ்மேன்களையும் நிலைகுலையச் செய்யும். அதிலும் ஸ்விங் இருந்தால்? அதுதான் தாமஸின் மிகப்பெரிய பலம். புதிய பந்தில் 150 கி.மீ., வேகத்தில் வரும் பந்தை கணிக்கவே நேரம் இல்லாமல் இருக்கும்போது, அது ஸ்விங்கும் ஆகும் பட்சத்தில் நிச்சயம் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் தலைவலிதான். அந்தத் தலைவலியைத்தான் பேட்ஸ்மேன்களுக்கு தந்துகொண்டிருக்கிறார் இந்த 21 வயது இளைஞன்.

கிரிக்கெட் பயணம்

தாமஸின் குடும்பமே கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் குடும்பம். அவரின் குடும்பம் வாயிலாகவே கிரிக்கெட் இவரது வாழ்க்கையில் நுழைந்தது. கிங்ஸ்டனில் இருக்கும் மெல்போர்ன் கிரிக்கெட் க்ளப்பில் (MCC), தன் பயிற்சியைத் தொடங்கினார் தாமஸ். 2016-ல் மெல்போர்ன் கிரிக்கெட் க்ளப்பில் ஒரு பயிற்சி போட்டியைக் காண கிறிஸ் கெயில் மற்றும் கரீபியன் ப்ரீமியர் லீகின் ஜமைக்கா தள்ளவாஸ் அணியின் உறுப்பினர்கள் பார்வையாளராக வந்தனர். அந்த போட்டியில் தாமஸ், தன் அசுர வேகத்தால் பேட்ஸ்மேன்களை திணறடித்த விதத்தைப் பார்த்து வியந்த கெயில் “இந்த பையனிடம் ஏதோ ஒண்ணு இருக்கு, இவனை உடனே ஒப்பந்தம் செய்துவிடுங்கள்” என தள்ளவாஸ் அணி உறுப்பினர்களிடம் கூறினார். அந்த போட்டி முடிந்த பின் தாமஸ் காதில் விழுந்த முதல் செய்தி, அவர் கரீபியன் ப்ரீமியர் லீகில் ஆடப்போகிறார் என்பதுதான். 2017-ல் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பாட்ரியாட்ஸ் அணியுடனான போட்டியில் 150 கி.மீ வேகத்தில் ஒரு யார்க்கர் வீசி தன்னை அடையாளம் கண்ட கெயிலையே அவுட் ஆக்கி அசத்தினார். அதே போட்டியில் தொடர்ந்து கார்லோஸ் பிரத்வேயிட், முகமது நபி ஆகியோர் விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

ஒஷேன் தாமஸ்
ஒஷேன் தாமஸ்
“தாமஸிடம் அடுத்த மைக்கேல் ஹோல்டிங் அல்லது ஜோயல் கார்னர் ஆவதற்கான திறமையுள்ளது”
கார்லோஸ் பிரத்வேயிட்

2018-ம் ஆண்டு இவருக்குத் திருப்புமுனையாக அமைந்த ஆண்டு. அந்த வருடம் நடந்த கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களிலே அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் தாமஸ்தான். தொடரிலியே இரண்டாவது அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவரானார். அந்தத் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. முதல் தொடரே பலமான இந்தியாவுடன். அத்தொடரில் விக்கெட்டுகள் அதிகம் வீழ்த்தாவிட்டாலும் தன்னை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்களை தன் வேகத்தால் பதற வைத்தார். ஓப்பனர் தவானை அந்த தொடரில் மூன்று முறை பெவிலியனுக்கு அனுப்பினார். குறுகிய காலத்திலேயே வெஸ்ட் இண்டீஸின் ஒருநாள் டி20, டெஸ்ட் ஆகிய அனைத்து தரப்பு அணியிலும் இடம்பிடித்தார். அந்தத் தொடரில் அவரின் வேகம் கண்டு ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணி 1.10 கோடி கொடுத்து வாங்கியது.

சிறந்த பெர்ஃபாமன்ஸ்

இந்தியாவுடனான முதல் டி20 போட்டியில் இவர் காட்டிய வேகம் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஓப்பனர்கள் தவான், ரோஹித்தின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தார். நான்கு ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்த இரண்டு முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளைகை் கைப்பற்றி அசத்தினார்.

ஒஷேன் தாமஸ்
ஒஷேன் தாமஸ்

இந்தியாவுடனான 5-வது ஒரு நாள் போட்டியில் வீழ்ந்த ஒரே விக்கெட் இவர் வீழ்த்தியதுதான். விராட் கோலி எப்போதாவதுதான் தவறான ஷாட்களை ஆடுவார். அவரைத் தவறான ஷாட்டை ஆடவைத்து ஸ்லிப்பில் ஒரு வாய்ப்பை உருவாக்கினார். மற்றொரு பந்தில் அவர் வீசிய அவுட் ஸ்விங்கில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்தார் ரோஹித்.ஆனால், அது நோ-பால் ஆனது. இரண்டு வாய்ப்புகள் நழுவியபோதும் அந்தப் போட்டியில் அவர் காட்டிய ஆட்டிட்யூட் அபாரமானது.

ஒஷேன் ஸ்பெஷல்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள வீரர்களில் வயது குறைந்தவர்.

2018 கரீபியன் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர்.

ரோல் மாடல் - மைக்கெல் ஹோல்டிங்

ஃபேவரட் பால் – யார்க்கர்

அடுத்த கட்டுரைக்கு