Published:Updated:

ஒரு பார்ட்னர்ஷிப்... இரு ரன் அவுட்கள்... கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த ஃபைனல்!

World Cup deciding Run Out

இந்த உலகக் கோப்பையே, ரன் அவுட்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்குப் பல போட்டிகளின் முடிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன இந்த ரன் அவுட்கள். சில இன்ச்களில் பல போட்டிகளின் முடிவுகள் மாறியிருக்கின்றன.

Published:Updated:

ஒரு பார்ட்னர்ஷிப்... இரு ரன் அவுட்கள்... கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த ஃபைனல்!

இந்த உலகக் கோப்பையே, ரன் அவுட்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்குப் பல போட்டிகளின் முடிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன இந்த ரன் அவுட்கள். சில இன்ச்களில் பல போட்டிகளின் முடிவுகள் மாறியிருக்கின்றன.

World Cup deciding Run Out

'நியூசிலாந்து 0 ரன் வித்யாசத்தில் தோற்றது' என்று ஒரு ஆங்கிலப் பத்திரிகை தலைப்பு வைத்திருக்கிறது. அந்தத் தலைப்பிலேயே கிரிக்கெட் ரசிகர்களை உலுக்குகிறது இந்த உலகக் கோப்பை. England vs Rest of the World எனச் சொல்லும் அளவுக்கு, மொத்த கிரிக்கெட் உலகமும் பிளாக் கேப்ஸுக்கு ஆதரவாக இருந்த நிலையில், இப்படியொரு முடிவைக் கண்டிருக்கிறது உலகக் கோப்பை. இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் ஆதிக்கங்களை மட்டுமே உலகக் கோப்பை ஃபைனலில் பார்த்த ஒரு தலைமுறைக்கு, இது ஆகச் சிறந்த அனுபவம்.

சூப்பர் ஓவர்வரை சென்று, அதுவும் டை ஆகி, பவுண்டரிகளின் அடிப்படையில் வெற்றியாளர் நியமிக்கப்பட்டிருக்கும் இந்தப் போட்டி, 175 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான ஒரு போட்டியாக அமைந்திருக்கிறது. ஆனால், இந்தப் போட்டியை சூப்பர் ஓவரும், பவுண்டரிகளும் மட்டும் தீர்மானிக்கவில்லை. ஒரு அட்டகாசமான பார்ட்னர்ஷிப்பும் சில ரன் அவுட்களும் இந்தப் போட்டியின் முடிவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

England - World Champions
England - World Champions
எல்லாம் சில இன்ச்தான்!
இது ரன் அவுட்களின் உலகக் கோப்பை

இந்த உலகக் கோப்பையே, ரன் அவுட்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்குப் பல போட்டிகளின் முடிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன இந்த ரன் அவுட்கள். சில இன்ச்களில் பல போட்டிகளின் முடிவுகள் மாறியிருக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில், பிராத்வெயிட் அடித்த அந்த கடைசி ஷாட், சில இன்ச்கள் பின்னால் விழுந்திருந்தால், நியூசிலாந்து லீக் சுற்றோடு வெளியேறியிருக்கும். குப்தில் அடித்த டைரக்ட் ஹிட், ஸ்டம்பில் படாமல் இருந்திருந்தால், அரையிறுதியின் முடிவு மாறியிருக்கும். நான் ஸ்டிரைக்கர் எண்டில் பட்லர் சரியாக ஸ்டம்பைத் தகர்க்காமல் போயிருந்தால், கடைசி 3 ஓவர்களில் அரையிறுதியின் ஸ்கோரை ஸ்டீவ் ஸ்மித் மாற்றியிருக்கலாம். எல்லாம் சில இன்ச்களில்தான் தப்பியது. இவ்வளவு ஏன், ஸ்டோக்ஸின் கேட்சைப் பிடித்துவிட்டு, டிரென்ட் போல்ட் பவுண்டரியில் கால் வைக்காமல் இருந்திருந்தால் இன்று சாம்பியன் வேறு ஆள்..!

கடைசி 2 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி. டபுள் அடிக்க விடக்கூடாது. பவுண்டரி எல்லையில் தீயாக நிற்கவேண்டும். ஒவ்வொரு த்ரோவும் துல்லியமாக ஸ்டம்புகள் நோக்கி மின்னலெனப் பாயவேண்டும். தான் பந்தை எடுக்க ஓடிவரும்போதே, பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவேண்டும். நியூசிலாந்து ஃபீல்டர்கள், அதை மிக அற்புதமாகச் செய்தனர். கடைசிப் பந்திலும் எப்படியாவது ஸ்டிரைக் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டோக்ஸ். அதற்காக விக்கெட்டைப் பணயம் வைக்கத் தயாராகிறார் ரஷீத். லாங் ஆஃப் திசையில் அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கும் விரைகிறார். ஆனால், அங்கு இரண்டு என்பதற்கு வாய்ப்பே இல்லை. அவசரத்தில் எந்தத் தவறும் இழைக்காமல், நேரம் எடுத்து சரியாக பௌலருக்கு பந்தை வீசுகிறார் சான்ட்னர். மிக எளிதாக ரன் அவுட் செய்யப்படுகிறார் ரஷீத்.

England - World Champions
England - World Champions

ஒரு பந்தில் 2 ரன்கள். குறைந்தபட்சம் சூப்பர் ஓவர் வரையாவது சென்றுவிடவேண்டும் என்றுதான் இரண்டு அணிகளுமே நினைத்திருக்கும். இப்போது லாங் ஆனில் அடித்துவிட்டு ஓடுகிறார். முதல் ரன்னை முடித்துவிட்டு, இரண்டாவது ரன்னை... வெற்றிக்கான ரன்னை எடுக்க ஸ்டம்புகள் நோக்கி ஓடுகிறார். ஆனால், மார்க் வுட் மற்றொரு முனையை நோக்கி ஓடுகிறார். கொஞ்சம் பின்தங்கித்தான் இருக்கிறார். இம்முறை நீஷம். மீண்டும் ஒரு பெர்ஃபக்ட் த்ரோ. மீண்டும் ரன் அவுட். ஆட்டம் டை!

சரி, சூப்பர் ஓவருக்குத்தான் போய்விட்டது, இனியும் இந்த சிக்கல்கள் இருக்காது என்று பார்த்தால், அங்கும் ரன் அவுட்தான் போட்டியைத் தீர்மானிக்கிறது. ஒரு பந்தில் இரண்டு ரன்கள். இரண்டு ரன்கள் எடுத்தே ஆகவேண்டும். எப்படியாவது கிரீஸுக்குள் நுழைந்துவிடவேண்டும். மிட்விக்கெட்டில் அடித்துவிட்டு ஓடுகிறார் குப்தில். முதலில் ஒருமுறை மிஸ்ஃபீல்ட் செய்த ஜேசன் ராய், இந்த முறை சரியாகப் பிடித்துவிடுகிறார். நியூசிலாந்து ஃபீல்டர்கள் வீசியதைப்போல் துல்லியமான த்ரோ இல்லை. ஆனால், அதை சரியாகப் பிடித்து ஸ்டம்புகளைத் தகர்த்தார் பட்லர். அந்த ஸ்டம்புகளோடு சேர்ந்து, நியூசிலாந்து ரசிகர்களின் கனவுகளையும் ஆசைகளையும் சேர்த்தே தகர்த்தார்.

Kane Williamson
Kane Williamson
பட்லர் - ஸ்டோக்ஸ்
போட்டியை மாற்றிய வெற்றிக் கூட்டணி

இயான் மோர்கன் அடித்த பந்தை லாகி ஃபெர்குசன் பாய்ந்து பிடித்தபோது, உலகக் கோப்பையின் முடிவு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்தது. மீண்டும் டாஸ்மானியக் கடல் தாண்டிப் பயணப்படத் தயாரானது அந்த தங்கக் கோப்பை.

"நான் விட்டதை என் நண்பன் சாதிக்கப்போகிறான்" என்று நினைத்திருப்பார், வர்ணனையில் இருந்த பிரெண்டன் மெக்குல்லம். வெஸ்ட் இண்டீஸ், இந்தியா போன்ற நாடுகளில் கிரிக்கெட் புரட்சி ஏற்படுவதில் முக்கிய அங்கம் வகித்த அந்த லார்ட்ஸ் பால்கனி, சொந்த அணிக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்று வருந்தியிருக்கும். ஆனால், அடுத்து களமிறங்கிய ஜாஸ் பட்லரின் கிளவுசில், பென் ஸ்டோக்ஸ் தன் கைகளைத் தட்டிக்கொடுத்தபோது, எல்லாம் மாறியது. இங்கிலாந்து கிரிக்கெட்டின் வரலாறும், எதிர்காலமும் ஒருசேர மாற்றி எழுதப்பட்டது!

Butler - Stokes
Butler - Stokes

86 ரன்களுக்கு 4 விக்கெட்... இன்னொரு விக்கெட் விழுந்துவிடமால் நிதானமாக ஆடவேண்டும். 163 பந்துகளில் 156 ரன்கள் தேவை... தேவைப்படும் ரன் ரேட்டை அதிகமாக்காமல், ஸ்கோர் செய்துகொண்டே இருக்கவேண்டும். கோலி, ஜோ ரூட், வில்லியம்சன் போன்ற வீரர்களுக்கு உரித்தான சூழ்நிலை. விக்கெட் வீழ்ச்சியையையும் தடுத்து, அதேசமயம் ரன் அடித்துக்கொண்டே இருப்பதென்பது எல்லோராலும் செய்துவிட முடியாது. அதுவும், அதிரடி வீரர்களாக அறியப்படும் ஸ்டோக்ஸ், பட்லர் இருவராலும் அது எப்படி முடியும்? ஆனால், இருவரும் அதை நடத்திக்காட்டினர்.

பேட்ஸ்மேன்கள் இருவரும் சிங்கிள்களில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினர். தொடர்ச்சியாக ஸ்டிரைக் ரொடேட் செய்துகொண்டிருக்கும்போது, பௌலரின் திட்டங்கள் நடக்காதபோது, அந்த விரக்தியில் நிச்சயம் ஒரு மோசமான பால் வீசப்படும். ஸ்டோக்ஸ், பட்லர் இருவரும் அதைத் தெளிவாக உணர்ந்திருந்தனர். மற்ற பந்துகளில் சிங்கிள்களும், அந்த மோசமான பந்துகளில் அவ்வப்போவது பவுண்டரிகளும் எடுத்துக்கொண்டிருந்தனர்.

Stokes
Stokes

30 யார்டு சர்க்கிளுக்கு அருகில் ஃபீல்டர்களை நிறுத்தாமல், மிகவும் முன்னே நிறுத்தினார் வில்லியம்சன். அதனால், ஃபீல்டர்களுக்கு இடையிலான இடைவெளி குறைந்தது. சிங்கிள் எடுப்பதற்கான வழிகள் குறைந்தன. தொடக்கத்தில், பேட்ஸ்மேன்கள் இருவரும், கிரீஸுக்கு முன் நகர்ந்து சென்று சிங்கிள் ஆடிக்கொண்டிருந்தனர். அதைத் தடுப்பதற்கு, கிராந்தோம், நீஷம் போன்றவர்களின் பந்துவீச்சில், ஸ்டம்புகளுக்கு அருகிலேயே நின்றார் கீப்பர் லாதம். ஆனால், அதற்காக இவர்கள் அவசரப்படவேயில்லை. தேவைப்படும் ரன்ரேட் 6 ரன்களைத் தொட்ட நிலையில், 27-வது ஓவர் மெய்டன்! ஆனால், அதைப் பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை.

ஒருகட்டத்தில், கிராந்தோமைச் சந்தித்த 10 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுக்கிறார் ஸ்டோக்ஸ். நெருக்கடி கூடுகிறது. அந்த இடத்தில் பொறுமை இழந்து பவுண்டரி அடிக்க ஆசைப்படலாம். அப்படிப்பட்ட சூழலில்,122 கிலோமீட்டர் வேகத்தில், குட் லென்த்தில் பிட்சாகி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வரும் ஒரு பந்தை, மிட் விக்கெட்டுக்கு புல் செய்யலாம்... பாயின்ட் ஃபீல்டருக்கு மேல் பறக்கவிடலாம்... மிட் ஆஃப் ஃபீல்டரின் தலைக்கு மேல் சிக்ஸர்கூட அடிக்கலாம். ஆனால், அதை தேர்ட் மேன் திசையில் தட்டிவிட்டு சிங்கிள் எடுக்கிறார். எத்தனை டாட் பால்கள் அதிகரித்தாலும், களத்தில் இருப்பது அதைவிட முக்கியம் என்பதை உணர்ந்து ஆடினார். இதுதான் ஸ்டோக்ஸ் போன்ற வீரருக்கும் ரிசப் பன்ட் போன்ற ஒரு பேட்ஸ்மேனுக்குமான வித்யாசம். அனுபவம் தரும் பாடம்!

Buttler
Buttler

ஸ்டோக்ஸ், கடைசிவரை களத்தில் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். செட்டில் ஆக நேரம் எடுத்துக்கொள்கிறார். அவர் செட்டில் ஆவதற்குள், ஒன்று... இரண்டு... என கேப் விடாமல் ரன்களை சேகரிக்கத் தொடங்குகிறார் பட்லர். நியூசிலாந்தின் திட்டங்களை மாற்றியமைக்கத் தொடங்குகிறது இந்தக் கூட்டணி. ஒருகட்டத்தில், பவுண்டரி எல்லையில் மூன்று ஃபீல்டர்களை மட்டும் (இரண்டாவது பவர்பிளேவில்) நிறுத்தி அட்டாக் செய்துகொண்டிருந்தது நியூசிலாந்து. ஆனால், பட்லர் - ஸ்டோக்ஸ் ஆடிய ஆட்டம், அந்த வீரியத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தது.

இந்த பார்ட்னர்ஷிப் சந்தித்த முதல் 77 பந்துகளில் அடிக்கப்பட்டது இரண்டே பவுண்டரிகள்தான். ஆனால், ஓடி ஓடியே 57 ரன்கள் எடுத்திருந்தனர். தன்னுடைய நான்காவது மற்றும் ஐந்தாவது பௌலர்களான கிராந்தோம், சேன்ட்னர், நீஷம் ஆகியோரால் அந்தக் கூட்டணியைப் பிரிக்க முடியவில்லை. டிரென்ட் போல்டைக் கொண்டுவந்தும் வேலை நடக்கவில்லை. மேட் ஹென்றி, லாகி ஃபெர்குசன் ஆகியோரையும் அழைக்கிறார் வில்லியம்சன். ஆனால், ஆட்டம் அதன்பிறகுதான் அடுத்த கியருக்கு நகரத் தொடங்கியது.

England - World Champions
England - World Champions

37-வது ஓவரின் முதல் பந்தை, ஆஃப் ஸ்டம்புக்கு மிகவும் வெளியே வீசினார் லாகி ஃபெர்குசன். அதை பாயின்ட் திசையில் பவுண்டரியாக்கினார் பட்லர். அங்கு தொடங்கியதுதான்... அடுத்த 4 ஓவர்களிலும், ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்தது இந்த ஜோடி. பவுண்டரியே அடித்தாலும், அந்த ஓவர்களில் 6, 7, 6, 8 என மொத்தமே 27 ரன்கள்தான் எடுக்கப்பட்டன. ஆனால், நியூசிலாந்து வீரர்களின் மனதில் அச்சத்தை விதைத்தன அந்த 24 பந்துகள். பவுண்டரியைத் தடுப்பதா, விக்கெட் வீழ்த்த அட்டாக் செய்வதா என்று புரியாமல் குழம்பினார்கள். இப்போது, நீஷம் ஓவரில் ஸ்டம்புக்கு தொலைவிலேயே சென்று நின்றுகொண்டார் லாதம். ஃபைன் லெக், தேர்டு மேன் எல்லைக்கு அருகுல் சென்றார்கள். மிகவும் சாதாரணமான ஃபீல்டிங் செட் அப்புக்கு மாறியது நியூசிலாந்து. அந்த இடத்தில், போட்டியை இங்கிலாந்துக்கு வென்று கொடுத்தது பட்லர் - ஸ்டோக்ஸ் கூட்டணி!