Published:Updated:

கெய்ல் பாதி... பிராவோ மீதி - நிகோலஸ் பூரண்! #INDvWI #PlayerBio

ராம் கார்த்திகேயன் கி ர

2014 ‘அண்டர் 19’ உலக் கோப்பையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இவர் ஆடிய ஆட்டம் அந்தத் தொடரிலியே சிறந்த செயல்பாடு என அடித்துச் சொல்லலாம்.

pooran
pooran
பெயர் : நிகோலஸ் பூரண்
பிறந்த தேதி : 2-10-1995
ஊர் : கெளவா, டிரினிடாட் & டொபாக்கோ
ரோல் : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்
பேட்டிங் ஸ்டைல் : இடது கை பேட்ஸ்மேன்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 23-9-2016

பிளேயிங் ஸ்டைல்

நிகோலஸ் பூரண் வித்தியாசமான ஆட்டக்காரர் இல்லை. மற்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களைப் போலவே ஆக்ரோஷமான ஷாட்கள் அடிக்கக்கூடியவர்தான். ஆனால், அந்த ஷாட்களில் ஒரு நளினம் இருக்கும். டுவைன் பிராவோவைப் போல் flexible உடல்வாகு கொண்டவர் நிகோலஸ். அவர் அடிக்கும் ஷாட்கள் பிராவோவை நினைவுபடுத்தும். கெயிலைப் போல் நின்ற இடத்திலிருந்தும் சிக்ஸர் அடிப்பார், ஸ்பின்னர் ஓவர்களில் மேக்ஸ்வெல் போல் ரிவர்ஸ் ஸ்வீப் செய்தும் பவுண்டரியை க்ளியர் செய்வார்.

எந்தப் பந்தையும் சிக்ஸராக மாற்றும் திறன் கொண்டவர். ஆட்டத்தைத் தனி ஆளாக மாற்றக்கூடய திறமை இவரிடம் உள்ளது. களத்தில் செட்டாகிவிட்டால், இவரின் அதிரடியைத் தடுப்பது மிகவும் சிரமம். முன்வரிசை, பின்வரிசை என எந்த பொசிஷனிலும் வந்தாலும் அதிரடிதான்!

Nicholas Pooran
Nicholas Pooran

கிரிக்கெட் பயணம்

பள்ளிக் காலத்திலிருந்தே கிரிக்கெட் விளையாடும் பூரண், டிரினிடாட் & டொபாகோ அணிக்காக, பல்வேறு வகையான வயது வரம்பிலான போட்டிகளில் பங்கேற்று, அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். தன் 17 வயதிலேயே கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் ரெட்ஸ்டீல் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் போட்டியிலேயே கயனா அணிக்கு எதிராக 24 பந்துகளில் 54 ரன்கள் விளாசினார். அந்த அதிரடி ஆட்டம் அவரை 19 வயதுக்குட்பட்டோருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தேர்வாகக் காரணமாக இருந்தது. 2014 ‘அண்டர் 19’ உலகக் கோப்பையின் காலிறுதியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடித்த சதம் கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்தது.

அப்போதே தேசிய அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப் பட்டபோது, விபத்தில் சிக்கி ஒன்றரை வருடம் ஓய்வில் இருக்க நேரிட்டது. 2016-ல் மீண்டும் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய நிகோலஸ், அந்த வருட கரீபியன் ப்ரீமியர் லீக்கில் 217 ரன்கள் (9 போட்டிகள்) எடுத்து கம்பேக் கொடுத்தார்.

Nicholas Pooran
Nicholas Pooran

அவரின் அந்த அசத்தல் செயல்பாடு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கதவுகளைத் திறந்தது. டெஸ்ட் அணியில் இடம்பெறாவிட்டாலும் லிமிட்டெட் ஓவர்களில், குறிப்பாக டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெளுத்துக்கட்டினார். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இவர் காட்டிய வாணவேடிக்கை ஐ.பி.எல் போட்டிகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 75 லட்சம் அடிப்படை விலை கொண்டிருந்த இவரை 4.5 கோடி கொடுத்து வாங்கியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

விபத்து ஏற்படுத்திய வலி என்னை மெருகேற்றியது. முன்பைவிட இப்போது பொறுப்பாக உணர்கிறேன். காயத்தின்போது நான் கற்றுக்கொண்டது அதிகம்!
நிகோலஸ் பூரண்

சிறந்த பர்ஃபாமன்ஸ்

2014 ‘அண்டர் 19’ உலக் கோப்பையில், ஆஸ்திரேலிய அணிக்கெதிராக இவர் ஆடிய ஆட்டம், அந்தத் தொடரிலியே சிறந்த செயல்பாடு என அடித்துச் சொல்லலாம். 70 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை தாண்டுவதே கேள்விக்குறியாக இருந்த சமயத்தில், தன் பொறுப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு கொண்டு வந்தார். எப்போதும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிகோலஸ், அன்று ஆட்டத்தைச் செதுக்கிய விதம் அபாரம்.

கெய்ல் பாதி... பிராவோ மீதி - நிகோலஸ் பூரண்! #INDvWI #PlayerBio

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி–20 போட்டியில் இவர் ஆடியது வேற லெவல் ஆட்டம். ஐந்தாவது வீரராக களமிறங்கி இந்திய பந்துவீச்சாளர்களை பதம் பார்த்த இவர், 25 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். நான்கு சிக்ஸர், நான்கு பவுண்டரி எனச் சிதறடித்தார். அடித்த எல்லா சிக்ஸர்களும் க்ளீன் ஹிட்!

பூரண் ஸ்பெஷல்

கரீபியன் ப்ரீமியர் லீக்கில் களமிறங்கிய இளம் வீரர்.
ரோல் மாடல் – தோனி