Published:Updated:

ஒற்றையாளாக வெள்ளையடித்த 'கோவாலு' கருணரத்னே - சுருட்டிய நியூசிலாந்து பௌலர்கள்!

ஒற்றையாளாக வெள்ளையடித்த 'கோவாலு' கருணரத்னே - சுருட்டிய நியூசிலாந்து பௌலர்கள்!
ஒற்றையாளாக வெள்ளையடித்த 'கோவாலு' கருணரத்னே - சுருட்டிய நியூசிலாந்து பௌலர்கள்!

பிரமாதமான பௌலிங் அட்டாக்கும் இல்லை. இந்த டார்கெட்டை டி20-யில் டிபெண்ட் செய்வதே கஷ்டம்! இலங்கையின் ஒரே நம்பிக்கை இப்போது மலிங்காதான். ஆனால், அவரின் முதல் ஓவரிலேயே பத்து ரன்கள் எடுத்து மெசேஜ் சொல்லியது நியூஸிலாந்து.

உலகக் கோப்பையின் முதல் இரண்டு ஆட்டங்களும் நடந்து முடிந்த தேர்தல் போல ஒன்சைடு கேமாகவே இருந்தன. ஒருபக்கம் தென்னாப்பிரிக்காவை வாரிச் சுருட்டியது இங்கிலாந்து. மறுபுறம் ஷார்ட் பால்கள் போட்டே பாகிஸ்தானை பந்தாடியது வெஸ்ட் இண்டீஸ். இந்நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் 2011-ன் பைனலிஸ்ட்டான இலங்கையும் 2015-ன் பைனலிஸ்ட்டான நியூசிலாந்தும் மோதிக்கொண்டன. நியூசிலாந்தைப் பிடிக்காத கிரிக்கெட் ரசிகர்களே இருக்க முடியாது என்பதால் ஒவ்வொரு முறையும் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடனே தொடரில் கால் வைக்கும். இந்தமுறையும் அப்படித்தான்! ஆனால், இலங்கைக்கு நிலைமையே வேறு!

மெட் ஹென்றி
மெட் ஹென்றி

2015 உலகக் கோப்பைக்குப் பின் ஆடிய 20 ஒருநாள் தொடர்களில் நான்கில் மட்டுமே வென்றுள்ளது இலங்கை. அதுவும் அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற குட்டி அணிகளோடு! மொத்தமாக ஆடிய 85 ஒருநாள் போட்டிகளில் 55 போட்டிகளில் தோல்வியே! போதாக்குறைக்கு மலிங்கா, திஷாரா பெரேரா, மேத்யூஸ் என ஆறு கேப்டன்கள் மாறியதும் கன்சிஸ்டன்ஸியைப் பாதித்தது. இந்தத் தொடரின் கேப்டனாகப் பொறுப்பேற்றிருக்கும் கருணரத்னே ஒருநாள் போட்டிப் பக்கமே நான்கு ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வந்திருக்கிறார். இப்படி கொசகொச குழப்பங்களுக்கு இடையில் ஒரு வெற்றி அந்த அணியை மீண்டும் நம்பிக்கைப் பாதைக்கு இழுத்து வரும். இவற்றையெல்லாம் தாண்டியும் ஒரு காரணமிருக்கிறது. குண்டுவெடிப்புகளால் சிதைந்துகிடக்கும் அக்குட்டித் தேசத்தை சில வெற்றிகள் ஓரளவுக்கு ஆற்றுப்படுத்தலாம்.

காயம் காரணமாக டிம் சவுதி வெளியே உட்கார பயிற்சி ஆட்டத்தில் சொதப்பிய மேத் ஹென்றி ஆடும் லெவனில் இடம்பிடித்தார். டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஓப்பனர்களாக கேப்டன் கருணரத்னேவும் திரிமன்னேயும் களமிறங்கினார்கள். பிட்ச்சை கிரவுண்டின் பச்சை பசேலுக்குள் ஒளித்து வைத்திருந்தார்கள். 'தம்பி நான் ஆடி நீ பாத்தது இல்லையே' என ஹென்றியின் முதல் பாலையே பவுண்டரிக்கு விரட்டினார் திரிமன்னே. அடுத்த பந்தை ஹென்றி லெக் சைடில் இறக்க, பேடில் பட்டு தெறித்தது. அப்பீலுக்கு நியூ. வீரர்கள் கத்திய கத்தில் சாலையில் சென்ற பஸ் காரெல்லாம் சடன் பிரேக் அடித்திருக்கும். அம்பயர் மறுக்க, ரிவ்யூவில் அவுட் எனத் தெரிந்தது. முதல் அடி!

கருணரத்னே
கருணரத்னே

ஒன் டவுனில் இறங்கிய குஷால் பெரேரா நிலைமை உணர்ந்து நிதானமாகவே ஆடினார். போல்ட் வீசிய ஆறாவது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள். சிக்கும் பந்துகளைத் தரையோடு தரையாக பவுண்டரிக்கு விரட்டுவது, மற்ற பந்துகளில் சிங்கிள்கள் ஓடுவது என டிபிக்கல் ஒன்டே ஆட்டத்தை ஆடினார்கள் இருவரும். எட்டு ஓவர்கள் முடிவில் 46/1 என ஸ்கோரும் டீசன்ட்டாக இருந்தது. மீண்டும் வந்தார் ஹென்றி என்னும் வில்லன். ஃபுல் லென்த் பந்தைத் தூக்......கியடித்து கேட்ச் கொடுத்து வெளியேறினார் குஷால் பெரேரா. அடுத்து இறங்கிய குஷால் மென்டிஸ் பந்தைத் லேசாகத் தொட அது ஸ்லிப்பில் நின்றிருந்த குப்தில் கையில் தஞ்சமடைந்தது. இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்கள்.

யாராவது ஒருவர் நின்று ஆடி கேப்டனுக்கு கம்பெனி கொடுத்தே ஆக வேண்டும்! ஐந்தாவதாக வந்த டி சில்வா இரண்டு ஓவர்கள் மட்டும் கம்பெனி கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார். அடுத்து வந்த மேத்யூஸும் அதேபோலத்தான். இரண்டு ஓவர்களுக்குப் பின் டாட்டா காண்பித்தார். தனியாக ஓ.பி ரவீந்திரநாத் நிற்க மற்ற வேட்பாளர்கள் நடையைக் கட்டியதுபோல வரிசையாக பொசுக் பொசுக்கென வெளியேறினார்கள் பேட்ஸ்மேன்கள்.

நியூசிலாந்து
நியூசிலாந்து

16 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள். திஷாரா மனது வைத்தால் மட்டுமே ஸ்கோர் ஏறுமென்ற நிலைமை. ஓரளவுக்கு ஏறவும் செய்தது. இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தார்கள். அதன்பின் அவசியமே இல்லாத ஷாட் ஒன்றை அடித்து வெளியேறினார் பெரேரா. ஸ்கோர் 112/7. அதன்பின் நியூசிலாந்து பவுலர்களும் சரி, பீல்டர்களும் சரி நெட் பிராக்டீஸ் போல ஜாலியாக ஆடினார்கள். கருணரத்னே மட்டும் முடிந்தவரை முட்டிக்கொண்டிருந்தார். கடைசி விக்கெட்டாக மலிங்காவும் காலியாக 136 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை. கேப்டன் 52 நாட் அவுட்! மேத் ஹென்றியும் பெர்குசனும் ஆளுக்கு 3 விக்கெட்கள் வீழ்த்தினார்கள்.

பிரமாதமான பௌலிங் அட்டாக்கும் இல்லை. இந்த டார்கெட்டை டி20யில் டிபெண்ட் செய்வதே கஷ்டம்! இலங்கையின் ஒரே நம்பிக்கை இப்போது மலிங்காதான். ஆனால், அவரின் முதல் ஓவரிலேயே பத்து ரன்கள் எடுத்து மெசேஜ் சொல்லியது நியூசிலாந்து. அடுத்த மூன்று ஓவர்கள் அடக்கி வாசித்த ஓப்பனர்களான குப்திலும் முன்ரோவும் ஐந்தாவது ஓவரில் இருந்து டி20 மோடுக்கு மாறினார்கள். அடுத்துவந்த எந்த ஓவரிலும் ரன்ரேட் எட்டைக் குறையவே இல்லை. முதலில் விளாசத் தொடங்கியது முன்ரோதான்! லக்மல் ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி, மலிங்கா ஓவரில் ஒரு பவுண்டரி என ஸ்கோரை விறுவிறுவென ஏற்றினார்.

குப்தில்
குப்தில்

இவரைப் பார்த்து குஷியாக பேட்டை சுழற்ற ஆரம்பித்த குப்திலுக்கு இரண்டு பவுண்டரிகள் தக்காளித் தொக்காகச் சிக்க ரவுண்டு கட்டினார். ஆறு ஓவர்களில் 58 ரன்கள். பவர்ப்ளே முடிவில் 77 ரன்கள். அதன்பின் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களே டயர்டானாலும் 'இந்தாங்க தம்பி இப்படிப் வளைச்சு இப்படி அடிங்க' என போட்டுப் போட்டுக் கொடுத்தார்கள் இலங்கை பவுலர்கள். அலட்டிக்கொள்ளாமல் 39 பந்துகளில் குப்திலும் 41 பந்துகளில் முன்ரோவும் அரைசதம் கடந்தார்கள். 'சரி இவ்ளோ பண்ணோம்ல, ஒரு விக்கெட்டாவது தாங்கய்யா' என பவுலர்கள் பிரயத்தனப்பட்டும் பரிதாபமேப்படவில்லை இருவரும். 16வது ஓவரின் முதல் பாலில் 137 ரன்களை எட்டி தம்ஸ் அப் காட்டினார்கள். பத்து விக்கெட் கணக்கில் படுதோல்வி இலங்கை கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மேத் ஹென்றிதான் ஆட்டநாயகன்.

முன்றோ
முன்றோ

மற்றுமொரு ஒன்சைட் கேம். போக, இலங்கை பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை சமாளிக்கத் திணறும் வீக் லிங்க் எல்லா அணிகளுக்கும் அப்பட்டமாகியுள்ளது. இனி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அந்த அணிக்கு மிகவும் முக்கியம். நியூஸிலாந்தின் நெட் ரன்டேட் 5.754 என எகிறியிருக்கிறது. இது நெருக்கடியாக நேரத்தில் அந்த அணிக்கு கைகொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு