Published:Updated:

சுழலில் சிக்கிக் கரைசேர்ந்த பிளாக் கேப்ஸ்! #BANvNZ

#BANvNZ
#BANvNZ

சுழலுக்கு எதிரான அவர்களது திணறலை மற்ற அணிகளுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது பிளாக் கேப்ஸ். இந்தியா, ஆப்கானிஸ்தான் போல் சுழல் பலம் கொண்ட அணிகள் நியூசிலாந்து பேட்டிங்கை ஒரு கை பார்க்கலாம்.

245 ரன்கள் டார்கெட். ஓவருக்கு 5 ரன்கள் எடுத்தால் போதும். நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கே உரித்தான ஆட்டம். அவர்களின் கூல் அணுகுமுறை இப்படியான போட்டிகளை எளிதில் முடித்துவிடும். நிதானமும் நேர்த்தியும் சரியான கலவையில் கலந்து ஆடும் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம் அடங்கிய மிடில் ஆர்டரைக் குலைப்பது கடினம். வங்கதேசம் அதை ஆட்டிப் பார்த்திருக்கிறது. எளிதாக வெற்றியை நெருங்கியிருக்கவேண்டிய போட்டியில் நியூசிலாந்துக்கு தோல்வியை மிக நெருக்கமாகக் காட்டியிருக்கிறார்கள் குட்டிப் புலிகள். ஒரு வகையில் இது அவர்களுக்கு வெற்றிகரமான தோல்விதான்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மிகச் சிறப்பாக பார்ட்னர்ஷிப்கள் அமைத்த வங்கதேசம், நேற்றைய போட்டியில் அதைச் செய்யத் தவறிவிட்டது. ஷகிப் அல் ஹசன் - முஷ்ஃபிகுர் ரஹீம் கூட்டணி தவிர்த்து வேறு எந்த பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடக்கவில்லை. அதனால், அவர்களால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் போய்விட்டது. ஷகிப், முஷ்ஃபிகுர் இருவருக்கும் இடையிலும் அந்த இரண்டு பந்துகள் குழப்பம் ஏற்படாமல் இருந்திருந்தால் எல்லாம் நன்றாகவே இருந்திருக்கும். முந்தைய பந்தில் ஷகிப் இரண்டாவது ரன்னுக்கு அழைக்க, அதை மறுத்தார் ரஹீம். அடுத்த பந்து அவர் ஒரு ரன்னுக்கு அழைக்க, பாதி தூரம் வந்தவரை ஷகிப் திரும்பிப் போகச் சொல்ல, விக்கெட்டை இழந்ததுதான் மிச்சம். இத்தனைக்கும் இரண்டு ஓவர்களுக்கு முன்பே (22-வது ஓவர்) இருவருக்குமிடையே சிறு குழப்பம் ஏற்பட்டு ரன் அவுட்டிலிருந்து தப்பினார்கள். வங்கதேசத்தின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு நடுவிலேயே இவ்வளவு குழப்பம் என்றால் எப்படி?

Bangladesh
Bangladesh
AP

அந்த விக்கெட், ஷகிப் மீதான நெருக்கடியையும் அதிகரித்தது என்றுதான் சொல்லவேண்டும். பௌலிங் பிட்ச் என்று சொல்லிவிடும் படியான ஆடுகளம் இல்லை அது. இருந்தாலும், ரன்ரேட் ஐந்துக்கும் குறைவாக இருக்கிறது. ஓவருக்கு ஒரு பௌண்டரியாவது அடிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். அதுவே அவர் அவுட்டாவதற்கும் காரணமாக அமைந்தது. கடந்த இன்னிங்ஸைப் போலவே அரைசதத்தை சதமாக மாற்ற முடியாமல் வெளியேறினார் ஷகிப். அதுவரை மிகவும் சிறப்பாக வேகப்பந்துவீச்சைக் கையாண்டுகொண்டிருந்தவரை, அந்த ஒற்றைப் பந்து ஏமாற்றிவிட்டது.

சொல்லப்போனால், ஷகிப் ஆடும்போது சேன்ட்னரை முன்னரே பயன்படுத்தியிருக்கலாம். வில்லியம்சன் அதைத் தவறவிட்டுவிட்டார். ஏனெனில், வேகப்பந்துவீச்சுக்கு எதிரான ஷகிப்பின் சமீபத்திய ஃபார்ம் அப்படி. 2016-ம் ஆண்டுக்குப் பிறகு, வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அவரது சராசரி 60.5 (ஸ்டிரைக் ரேட் : 96.5). அதேவேளை, சுழலுக்கு எதிராக 28.8 (ஸ்டிரைக் ரேட் : 73.9) தான். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் தாஹிர் ஓவரில்தான் அவர் அவுட்டாகியிருந்தார். அப்படியிருக்கையில் அவருக்கு எதிராக முன்னமே ஸ்பின்னைப் பயன்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், 22-வது ஓவரில்தான் சேன்ர்னர் கையில் பந்தைக் கொடுத்தார் வில்லியம்சன். அதற்குள் ஓரளவு தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தார் ஷகிப். பிளேயிங் லெவனில் ஒரேயொரு ஸ்பின்னர் மட்டும் இருப்பது இனிவரும் போட்டிகளில் நியூசிலாந்தை பாதிக்கலாம்.

ஷகிப் அல் ஹசன்
ஷகிப் அல் ஹசன்

சுழல் பலம் அணியில் இல்லையென்றாலும், மிடில் ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்தது. சரியான லைன், லென்த்தில் பந்துவீசி ரன் எடுப்பதை கடினமாக்கினர். ஃபீல்டர்களின் அட்டகாசமான செயல்பாடு சிங்கிள், டபுள் எடுப்பதையும் கடினமாக்கியது (ஷகிப் - ரஹீம் சம்பவம் போல்!). அதனால் டாட் பால்களின் எண்ணிக்கை அதிகமானது. ஓவருக்கு மூன்று, நான்கு என்றுதான் ஒருகட்டத்தில் வங்கதேசத்தால் அடிக்க முடிந்தது. லாகி ஃபெர்குசன் - காலின் டி கிராந்தோம் வீசிய இணைந்து வீசிய முதல் ஸ்பெல்தான் வங்கதேசத்தின் மீதான நெருக்கடியை அதிகரித்தது.

11 ஓவர்கள் முடிவில் அந்த அணியின் ஸ்கோர் 54/1. ரன்ரேட் 4.9. இவர்கள் 8 ஓவர்கள் வீசிய பிறகு, 19-வது ஓவரின் முடிவில் 75/2. ரன்ரேட் 3.94! ரன்ரேட் அப்படியே கவிழ்ந்தது இந்த ஸ்பெல்லில்தான். 8 ஓவர்களில் வெறும் 21 ரன்கள். ஓவருக்கு வெறும் 2.6 ரன்கள்! அதுவும் ஃபெர்குசனின் அந்த 4 ஓவர்கள் வேற லெவல். வெறும் ஏழே ரன்கள். முதல் ஓவரில் 2 ரன்கள். அடுத்தடுத்த ஓவர்களில் 1, 2, 2 என மிகச் சிறப்பாகப் பந்துவீசினார். அந்த 24 பந்துகளில் 19 டாட் பால்கள்! ஒரு விக்கெட் வேறு! ஷகிப் - ரஹீம் கூட்டணியையே அடிக்க வாசிக்க வைத்த அந்த ஸ்பெல், நியூசிலாந்தின் வெற்றியில் முக்கியமானது!

லாகி ஃபெர்குசன்
லாகி ஃபெர்குசன்

இவர்களது சிறப்பான பௌலிங் பௌண்டரிகளை மட்டுமல்ல, ஓடி ரன் எடுப்பதையும் தடுத்துக்கொண்டே இருந்தது. கடைசி கட்டத்தில்கூட, மஹமதுல்லா (41 பந்துகளில் 20), மொசாடக் ஹொசைன் (22 பந்துகளில் 11) போன்றவர்கள் ஸ்டிரைக் ரொடேட் செய்யவே சிரமப்பட்டனர். வங்கதேசத்தை இந்த ஆடுகளத்தில் 244 ரன்களுக்குள் சுருட்டியதற்கு நியூசிலாந்து பந்துவீச்சைப் பாராட்டியே ஆகவேண்டும்.

இந்த டார்கெட்டை எப்படியும் ஐந்து விக்கெட், ஆறு விக்கெட் வித்யாசத்தில் நியூசிலாந்து வென்றுவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், இப்படியான இலக்கை அவர்கள் கூலாக எதிர்கொள்வார்கள். ஆனால், நேற்று அவர்கள் சுழற்பந்துவீச்சை எதிர்கொண்ட விதம் வெற்றியையே கேள்விக்குறியாக்கியிருக்கும். விழுந்த 8 விக்கெட்டுகளில் 6 சுழலுக்குப் பலியானவை. முதல் ஐந்து விக்கெட்டுக்குமே! குப்தில், முன்றோ, வில்லியம்சன், ராஸ் டெய்லர், டாம் லாதம் என டாப் ஆர்டர் முழுக்க சுழலிடம் சிக்கியது. ஒருவேளை போல்டு, எல்.பி.டபிள்யூ என்றால் பரவாயில்லை. எல்லாமே கேட்ச். சுமாரான பந்துகளில் தேவையில்லாத ஷாட்கள் ஆடி இழந்த விக்கெட்டுகள். அதனால்தான் வில்லியம்சன் - ராஸ் டெய்லர் இருவரும் நல்லதொரு பார்ட்னர்ஷிப் அமைத்தும், கடைசிவரை போராடவேண்டியிருந்தது.

#BANvNZ
#BANvNZ

வங்கதேசத்துடனான போட்டி இரண்டு புள்ளிகள் கொடுத்ததற்கு நியூசிலாந்து சந்தோஷப்படலாம். ஆனால், சுழலுக்கு எதிரான அவர்களது திணறலை மற்ற அணிகளுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது பிளாக் கேப்ஸ். இந்தியா, ஆப்கானிஸ்தான் போல் சுழல் பலம் கொண்ட அணிகள் நியூசிலாந்து பேட்டிங்கை ஒரு கை பார்க்கலாம். இத்தனைக்கும் நியூசிலாந்துக்கு அடுத்த இரண்டு போட்டியுமே இந்த அணிகளுடன்தான். சீக்கிரம் இந்த சிக்கலுக்கான விடை கான்பது நல்லது.

அடுத்த கட்டுரைக்கு