Published:Updated:

முதல் பந்தில் ஷான் போலக்... நான்காவது பந்தில் நிதினி... மலிங்காவின் டபுள் ஹாட்ரிக்! #VikatanInfographics

வருண்.நா

இதுவரை சுமார் 4000 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றிருக்கும். அதில் 44 முறை மட்டுமே இந்த ஹாட்ரிக் மேஜிக் அரங்கேறியுள்ளது. உலகக் கோப்பை தொடரில் எடுக்கப்பட்ட ஹாட்ரிக் விக்கெட்ஸ் பற்றிய தொகுப்புதான் இந்தக் கட்டுரை...

பெளலர்கள், ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுப்பது பேட்ஸ்மேன் செஞ்சூரி அடிப்பதற்குச் சமம் என்பார்கள். ஆனால், பெளலர்கள் தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகள் எடுக்கும் மேஜிக்கிற்கு இணையாக பேட்டிங் சாதனை எதுவும் இல்லை என்றே சொல்லலாம். தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளைச் சாய்ப்பதற்கு கன்சிஸ்டன்ஸி, வேரியேஷன், கூடவே அதிர்ஷ்டமும் தேவை. இதுவரை சுமார் 4,000 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றிருக்கும். அதில் 44 முறை மட்டுமே இந்த ஹாட்ரிக் மேஜிக் அரங்கேறியுள்ளது.

மூன்று விக்கெட் தொடர்ச்சியாக எடுப்பதே பெரிய விஷயம். அதிலும் உலகக் கோப்பை போன்ற கிரிக்கெட்டின் மிகப் பெரிய தொடரில் எடுப்பது இன்னும் அசத்தல்! அப்படி அசத்தலாக எடுக்கப்பட்ட உலகக் கோப்பை ஹாட்ரிக்ஸின் தொகுப்புதான் இந்தக் கட்டுரை.

1

சேத்தன் ஷர்மா - இந்தியா vs நியூசிலாந்து - நாக்பூர், 1987

உலகக் கோப்பை வரலாற்றின் முதல் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தவர் இந்தியாவின் சேத்தன் ஷர்மா. நான்காவது உலகக் கோப்பை தொடரில்தான் முதல்முறையாக ஹாட்ரிக் எடுக்கப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான லீக் சுற்றில் இந்தச் சாதனையை நிகழ்த்தினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் ஷர்மா. 42–வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில், நியூசிலாந்தின் கென் ரூதர்ஃபோர்டு, இயான் ஸ்மித், எவன் சாட்ஃபீல்டு மூன்று பேரையும் அடுத்தடுத்து பெவிலியனுக்கு அனுப்பினார். உலகக் கோப்பையின் முதல் ஹாட்ரிக் என்பதைத் தாண்டி, உலகக் கோப்பை ஹாட்ரிக்குகளில், மூன்று பேட்ஸ்மேன்களையும் போல்டு செய்த ஒரே வீரர் என்ற பெருமையையும் இன்று வரை தன்வசம் வைத்துள்ளார் சேத்தன் ஷர்மா.

2

ஷக்லைன் முஸ்தாக் - பாகிஸ்தான் vs ஜிம்பாப்வே - லண்டன், 1999

உலகக் கோப்பையின் இரண்டாவது ஹாட்ரிக் வருவதற்கு 12 வருடங்கள் தேவைப்பட்டன. 41–வது ஓவரை வீசிய பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் ஷக்லைன் முஸ்தாக், முதல் மூன்று பந்துகளில் ஹென்றி ஓலங்கா, ஆடம் ஹக்கில், போமி எம்பாங்வா ஆகிய மூவரின் விக்கெட்டையும் எடுத்தார். அவுட் ஆனவர்கள் மூன்று பேரும் டெயில் எண்டர்கள் என்றாலும், உலகக் கோப்பை ஹாட்ரிக் என்பதால் ஸ்பெஷல்தான்! முதல் இரண்டு விக்கெட்டுகளை ஷக்லைன் எடுப்பதற்கு கீப்பர் மொயீன் கானின் உதவி தேவைப்பட்டது. இரண்டு ஸ்டம்பிங்குகளைத் தொடர்ந்து மூன்றாவது விக்கெட் எல்.பி.டபிள்யூவாக அமைந்தது.

3

சமிந்தா வாஸ் - இலங்கை vs வங்கதேசம் - பீட்டர்மரிட்ஸ்பெர்க், 2003

சமிந்தா வாஸ், 2003 உலகக் கோப்பையில் எடுத்த ஹாட்ரிக் மிகவும் ஸ்பெஷல். காரணம். அந்தப் போட்டியின் முதல் மூன்று பந்துகளிலேயே ஹாட்ரிக் சாதனையைச் செய்து முடித்து, ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டார் வாஸ். முதல் பந்தை எதிர்கொண்ட ஹனான் சர்கார் க்ளீன் போல்டு. இரண்டாவது பந்தில் முகமது அஷ்ரஃபுல் வாஸிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மூன்றாவது பந்தை எதிர்கொண்ட எசானுல் ஹக் ஸ்லிப் ஃபீல்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

4

பிரட் லீ - ஆஸ்திரேலியா vs கென்யா - டர்பன், 2003

சமிந்தா வாஸின் ஹாட்ரிக் சாதனை நடந்து முடிந்து 11 நாள்கள் கழித்து மீண்டும் ஒரு ஹாட்ரிக் சாதனை அரங்கேறியது. கென்யாவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார் பிரட் லீ. 4–வது ஓவரின் கடைசி 3 பந்துகளில் கென்யாவின் டாப் ஆர்டரை காலி செய்தார் லீ. முதல் விக்கெட் கெனடி ஒடியானோ. எல்போவில் பட்ட பால் ஸ்டம்பை பதம் பார்த்தது. இரண்டாவது விக்கெட் பிரிஜால் படேல். ஸ்லிப்பில் நின்றிருந்த பான்டிங்கிடம் கேட்ச் கொடுத்தார். மூன்றாவது டெலிவரி, யார்க்கர். டேவிட் ஒபுயா க்ளீன் போல்டு.

5

லசித் மலிங்கா இலங்கை vs தென்னாப்பிரிக்கா - ப்ராவிடன்ஸ், 2007

ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் லசித் மலிங்கா. மொத்தம் 3 ஹாட்ரிக் விக்கெட்டுகள். அதில் இரண்டு உலகக் கோப்பையில் எடுக்கப்பட்டது. 2007 உலகக் கோப்பையில் இவர் எடுத்த ஹாட்ரிக், ஒரு டபுள் ஹாட்ரிக் ஆக அமைந்தது கூடுதல் சிறப்பு. கிரிக்கெட்டில் தொடர்ந்து 4 விக்கெட்டுகள் எடுப்பதுதான் டபுள் ஹாட்ரிக் என்பார்கள். 45–வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளும், 47–வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளும் மலிங்காவுக்கு இந்த டபுள் ஹாட்ரிக் சாதனையைப் பெற்றுதந்தது. 45–வது ஓவரில் ஷான் போலக் போல்டு முறையிலும், ஆண்ட்ரூ ஹால் கவர் திசையில் கேட்ச் கொடுத்தும் அவுட்டானார்கள். 47–வது ஓவரில் ஜாக் காலிஸ், கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, மகாயா நிதினி யார்க்கரில் க்ளீன் போல்டு ஆனார்.

6

கீமர் ரோச் - மேற்கிந்தியத் தீவுகள் vs நெதர்லாந்து - டெல்லி, 2011

உலகக் கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுக்கும் முதல் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கீமர் ரோச். 331 ரன்கள் என்ற டார்கெட்டுடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி 31 ஓவர்களில் 115/7 என்றிருந்தது. 32–வது ஓவரை வீசிய ரோச் முதல் 3 பந்துகளிலேயே நெதர்லாந்து அணியை பார்சல் செய்தார். முதல் இரண்டு விக்கெட்டுகளான பீட்டர் சீலர் மற்றும் பெர்னார்ட் லூட்ஸ் இருவருமே எல்.பி.டபுள்யூ. மூன்றாவது விக்கெட்டுக்கு பெரெண்ட் வெஸ்டிக்கின் மிடில் ஸ்டம்ப்பை காலி செய்து ஹாட்ரிக்கை கம்ப்ளீட் செய்தார் ரோச்.

7

லசித் மலிங்கா - இலங்கை vs கென்யா - கொழும்பு, 2011

கென்யா அணிக்கு எதிராகத் தனது இரண்டாவது உலகக் கோப்பை ஹாட்ரிக் சாதனையைச் செய்து முடித்தார் ஸ்லிங்கா மலிங்கா. 42–வது ஓவரின் கடைசி பந்தில் தன்மே மிஷ்ராவை எல்.பி.டபுள்யூ முறையில் அவுட் செய்தார். இந்த முறையும் தனது ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்த அடுத்த ஓவர் வரை காத்திருந்தார் மலிங்கா. 44–வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில், பீட்டர் ஆங்கோண்டோ மற்றும் ஷெம் கோசே இருவரையும் போல்டு செய்தார்.

8

ஸ்டீவன் ஃபின் - இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா - மெல்போர்ன், 2015

உலகக் கோப்பையில் ஹாட்ரிக் எடுக்கும் முதல் இங்கிலீஷ் கிரிக்கெட்டர் ஸ்டீவன் ஃபின். ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் முடிய 3 பந்துகள் இருந்தது. ஸ்கோர் 342/6. 50–வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் 3 விக்கெட்டுகள். ஃபின் வீசிய பந்தை, பிராட் ஹாடின் தூக்கி அடிக்க கேட்ச் ஆனது. அடுத்த பந்தை எதிர்கொண்ட மேக்ஸ்வெல்லும் தூக்கி அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த மிட்செல் ஜான்ஸன் மிட் ஆஃப் திசை நோக்கி அடித்த பந்தும் கேட்ச்.

9

ஜே.பி. டுமினி - தென்னாப்பிரிக்கா vs இலங்கை - சிட்னி, 2015

உலகக் கோப்பையின் நாக் அவுட் போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஒரே வீரர் ஜே.பி. டுமினி. ஒரு பார்ட் டைம் பெளலர் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் எடுத்ததும் அதுவே முதல்முறை. டுமினி வீசிய 33–வது ஓவரின் கடைசி பந்தில் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஏஞ்சலா மேத்யூஸ். 35–வது ஓவரின் முதல் பந்தில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் நுவான் குலசேகரா. அடுத்து வந்த தரிண்டு கௌஷல் டுமினியின் ஆஃப் ஸ்பின்னைத் தடுக்க முயன்று எல்.பி.டபுள்யூ ஆனார்.