Published:Updated:

``நான் அதிகம் நேசிக்கும் `ஒருநாள்’ கிரிக்கெட்!” - ஓய்வுபெற்ற பாக்., வீரர் மாலிக் உருக்கம்!

பிரேம் குமார் எஸ்.கே.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான சோயப் மாலிக் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

விடைபெறும் மாலிக்
விடைபெறும் மாலிக் ( ICC Twitter )

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பாகிஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டது. மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்துடன் இறங்கிய பாகிஸ்தான் இறுதியில் 94 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

மாலிக்
மாலிக்
Cricket world cup Twitter

எனினும் இந்த வெற்றி பாகிஸ்தான் அணியை அரையிறுதிச் சுற்றுக்கு எடுத்துச் செல்லவில்லை. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியே அந்த அணிக்கு உலகக் கோப்பை தொடரில் கடைசி ஆட்டமாக அமைந்து விட்டது. அந்த அணியின் மாலிக் -க்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அது கடைசி போட்டியாக அமைந்தது.

முன்னரே அறிவித்திருந்தது போன்று, உலகக் கோப்பை தொடரின் கடைசி போட்டியுடன் விடைபெற்றார் மாலிக். இந்தியா உடனான போட்டியில் பாகிஸ்தான் எளிதில் தோல்வியடைந்த போது மாலிக் அதிகம் விமர்சிக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் அவர் ப்ளேயிங் லெவனில் தேர்வாகவில்லை.

இதுவரை 287 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள மாலிக், 7534 ரன்கள் எடுத்திருக்கிறார்!

இதில் 9 சதங்களும், 44 அரை சதங்களும் அடங்கும். ஆல் ரவுண்டரான மாலிக் 158 விக்கெட்டுகளும் எடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.

தனது ஓய்வு தொடர்பாக ட்வீட் செய்துள்ள மாலிக், ``இன்று நான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறேன். என்னுடன் விளையாடிய வீரர்கள், பணியாற்றிய பயிற்சியாளர்கள் குடும்பம், நண்பர்கள், ஊடகங்கள், ஸ்பான்சர்கள் என அனைவருக்கும் மிகப் பெரிய நன்றி. மிக முக்கியமாக எனது ரசிகர்கள். ஐ லவ் யூ ஆல்....” எனப் பதிவிட்டுள்ளார்.

போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாலிக், ``இதற்கு முந்தைய பேட்டிகளின் போது நான் சொன்னதை போன்று உலகக் கோப்பையுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். பாகிஸ்தான் அணியின் கடைசி உலகக் கோப்பை போட்டியுடன் விடை பெற வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்.

நான் அதிகம் நேசிக்கும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது என்பது எனக்கு வருத்தமான முடிவுதான். ஆனால், இதன் மூலம் என்னால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும். மேலும் டி20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த முடியும்” என்றார்.