Published:Updated:

9 பேர் டக் அவுட்; டீம் ஸ்கோர் `6'! - டி20 வரலாற்றில் மோசமான சாதனை

டி20
டி20 ( Metroclub.uk )

சர்வதேச அங்கீகாரம் பெற்ற டி20 போட்டி ஒன்றில் மாலி அணி 6 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்திருக்கிறது.

ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில் அந்நாட்டு தேசிய பெண்கள் அணிக்கும் மாலி பெண்கள் அணிக்கும் இடையிலான டி20 போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த மாலி அணி, சர்வதேச கிரிக்கெட்டில் விநோதமான சாதனையைப் படைத்தது. பேட்டிங் செய்யக் களமிறங்கிய அந்த அணியின் வீராங்கனைகள் ருவாண்டா பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மாலி அணியின் ஸ்கோர் கார்டு
மாலி அணியின் ஸ்கோர் கார்டு
News.com.au

அந்த அணி 9 ஓவர்களில் மொத்தம் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், மாலி அணியின் அந்த இன்னிங்ஸ் வரலாற்றில் பதிவானது. அந்த அணியின் தொடக்க வீராங்கனை மரியம் சமாகே (Mariam Samake) 6 பந்துகளை எதிர்க்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்தார். இதுவே அந்த அணி தரப்பில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். மற்ற 9 வீராங்கனைகளும் ரன் கணக்கைத் தொடங்காமலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

மாலி அணியில் ஒரே ஒரு வீராங்கனை மட்டுமே 10 பந்துகளுக்கு மேல் சந்தித்தார். அந்த ஒரு ரன் தவிர மற்ற 5 ரன்களும் எக்ஸ்ட்ராஸ் தரப்பில் கிடைத்தவை. ருவாண்டா அணி, 2 லெக் பைஸ், 2 பைஸ் மற்றும் ஒரு வைட் என 5 உதிரிகளை வழங்கியது. அதேபோல், ருவாண்டா தரப்பில் பந்துவீசிய 4 பேருமே விக்கெட் வீழ்த்தினர். மாலி அணி நிர்ணயித்த இலக்கை ருவாண்டா அணி, 4 பந்துகளில் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 116 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் வெற்றியை ருசித்தது.

ருவாண்டா அணி
ருவாண்டா அணி
The New Times

ஐ.சி.சி-யின் சமீபத்திய விதிகளின்படி உறுப்பு நாடுகள் இடையிலான டி20 போட்டிக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கலாம். எனவே, இந்தப் போட்டியில் மாலி அணி எடுத்த 6 ரன்கள் என்பது, சர்வதேச டி20 வரலாற்றில் மிகவும் குறைந்த ஸ்கோராகப் பதிவானது. அதேபோல், அதிக பந்துகள் மீதமிருக்கும் நிலையில், வென்ற அணி என்ற டி20 சாதனையை ருவாண்டா அணி தன்வசமாக்கியது.

இதற்கு முன்பாக டி20 வரலாற்றில் குறைந்தபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தது சீன மகளிர் அணி. யு.ஏ.இ அணிக்கெதிராகக் கடந்த ஜனவரி மாதம் நடந்த போட்டியில் அந்த அணி, 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

மாலி அணி
மாலி அணி
National Courier

அந்தப் போட்டியில் யு.ஏ.இ அணி 189 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டி20 வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற சாதனையை யு.ஏ.இ படைத்தது.

அடுத்த கட்டுரைக்கு