Published:Updated:

Thank you for everything - நீங்கள் எப்போதும் லெஜெண்ட்தான் தோனி!

மகேந்திர சிங் தோனி

குறிப்பு: ஆகஸ்ட் 15, 2020 தோனி தன் ஓய்வு முடிவை எளிமையாக இன்ஸ்டாவில் அறிவித்திருக்கிறார். அவரின் பிறந்தநாளுக்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரையை மீண்டும் அப்டேட் செய்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

Published:Updated:

Thank you for everything - நீங்கள் எப்போதும் லெஜெண்ட்தான் தோனி!

குறிப்பு: ஆகஸ்ட் 15, 2020 தோனி தன் ஓய்வு முடிவை எளிமையாக இன்ஸ்டாவில் அறிவித்திருக்கிறார். அவரின் பிறந்தநாளுக்காக எழுதப்பட்ட இந்தக் கட்டுரையை மீண்டும் அப்டேட் செய்து உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

மகேந்திர சிங் தோனி
Hope is a dangerous thing. Hope can drive a man insane.
Shawshank Redemption

பிடிப்பற்ற மனிதனின் குரலாக 'Shawshank Redemption' படத்தில் எதிரொலிக்கும் வசனம் இது. தோனியை மையம்கொண்டு நடப்பதை பார்க்கும்போது இந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது. கிரிக்கெட் மேல் கொண்டிருந்த நம்பிக்கைதான் கராக்பூரின் அழுக்குப்படிந்த பிளாட்பாரத்திலிருந்து சிட்டாகாங்கின் பச்சைப்பசேல் புல்தரைக்கு அந்த ஜடாமுடி இளைஞனை இழுத்துவந்தது. தனக்குக் கீழ் திரண்ட இளம்பட்டாளத்தின்மீது அவர் வைத்த நம்பிக்கைதான் ஜொஹானஸ்பர்க்கில் முதல் டி20 கோப்பையை நம் கைகளில் தவழவிட்டது. அதன்பின் ரசிகர்கள் அவர்மீது வைத்த நம்பிக்கைதான் ஒரு தசாப்தத்துக்கும் மேலாக கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை சுமந்தபடி அவரை வெற்றிகரமாக ஓடச் செய்தது. அதே நம்பிக்கைதான் இன்று பல்லாயிரம் ஜோடிக் கண்களை சோகத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. இனி அவரை நீலநிற ஜெர்ஸியில் பார்க்கவேமுடியாது என்கிற நிதர்சனம், நம்பிக்கையை மீறி முகத்திலறைவதன் விளைவு இது.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

இங்கே கிரிக்கெட் ஒரு மதம். இங்கே கிரிக்கெட் ஒரு கொண்டாட்டம். இங்கே கிரிக்கெட் எல்லோருக்குள்ளும் உறைந்திருக்கும் ஒரு கலர்ஃபுல் கனவு. 'கிரிக்கெட்டரா ஆயிடணும்' என்ற கனவை கடந்துவராத சிறுவன் இந்தியாவில் இருக்க முடியாது. அதேசமயம், கிரிக்கெட் ஒரு கொடூரமான விளையாட்டு. தலையில் வைத்துக் கொண்டாடப்பட்ட ஹீரோவை தரையில் எறிந்து புழுதிவாரித் தூற்றுவார்கள் ரசிகர்கள். கல் சிக்கினால் அதை எடுத்து வீட்டுக் கண்ணாடிகளைப் பதம் பார்ப்பார்கள். ஆம்! ''Hope can drive a man insane.''

உலகக் கோப்பை ஒரு அணிக்கு மட்டுமானதில்லை என உலகுக்கு உரத்துச் சொன்ன கபில்தேவ், கிரிக்கெட்டில் தன் கடைசிக்காலத்தில் எள்ளி நகையாடப்பட்டார். ரிச்சர்ட் ஹாட்லீயின் டெஸ்ட் விக்கெட்கள் சாதனையை முறியடிக்கவே ஓய்வு பெறாமல் இழுத்தடிக்கிறார் என புகார்க்கணைகள் பாய்ந்தன. பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையைப் பரிசளித்த மியான்தத் இந்தியாவுக்கெதிராக 96-ல் களம்கண்டபோது பாகிஸ்தான் கூட்டம் அவரை பரிகாசித்தது. கிரிக்கெட்டின் ஒன்டைம் வொண்டர், ஆல்டைம் கிரேட் சச்சினை ஒருகாலத்தில் கொண்டாடிய அவரின் ரசிகர்களே 'ப்ளீஸ் ரிட்டையர் ஆகுங்க' என வழியனுப்பத் தயாரானார்கள். தன்னுடைய 100-வது சதத்துக்காகக் காத்திருந்தார் என இப்போதும் அவர்மேல் புகார் சொல்பவர்கள் உண்டு.

தோனியின் மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் கிளம்புவதற்குள் அவரே முடிவெடுத்துவிட்டார். அவர் எப்போதுமே அப்படித்தான். டெஸ்ட்டில் சட்டென ஓய்வுபெற்றபோதும் சரி, கேப்டன் பதவியிலிருந்து சிரித்தபடி விலகியபோதும் சரி... க்ரீஸைப் போலவே அதிரடிதான். தோனி எப்போதுமே ரெக்கார்ட்களுக்காக விளையாடியதில்லை. அவரை குற்றம் சொல்பவர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரே விஷயம், 'He never played for records' என்பதை! அணிக்குத் தேவையானதை யோசித்து, சூழ்நிலைகளை ஆராய்ந்து அதற்கேற்றாற்போல ஆட்டத்தின் போக்கை மாற்றி முன்எடுத்துச் செல்வது டிபிக்கல் தோனி ஸ்டைல். இந்த முடிவும் அப்படியானதுதான்.

தோனி என்ற பெயரை மந்திரம்போல மொத்த நாடும் உச்சரித்தது 2007-லிருந்து 2011 வரை. டி20 உலகக் கோப்பை வெற்றி, சென்னை சூப்பர்கிங்ஸ் வருகை, டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1, 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றி எனத் தோனி தொட்டதெல்லாம் பொன். கிரிக்கெட்டின் தங்கத் தலைநகராக மொத்த நாடும் ஜொலித்தது. தோனி வீடுதோறும் தலைச்சன்பிள்ளை ஆனார். அந்தக் காலகட்டத்தில் தோனி அடித்த ரன்கள் 3,821 (உலகக் கோப்பைகளை சேர்க்காமல்)... 97 இன்னிங்ஸ்களில் (ஆவரேஜ் 51.63). அதற்கடுத்த நான்கு ஆண்டுகள் ஏற்றமும் தாழ்வுமாக இருந்தது இந்திய அணியின் கிராஃப். அந்தக் காலகட்டத்தில் அவர் அடித்த ரன்கள் 2,201 (உ.கோ தவிர்த்து)... 56 இன்னிங்ஸ்களில் (ஆவரேஜ் 64.73). தோனி முழுமனதாய் கொண்டாடப்பட்ட காலத்தைவிட விமர்சனங்களை சந்தித்த அடுத்த நான்காண்டுகளில் அவரின் பேட்டிங் ஆவரேஜ் அதிகமாகவே இருந்தது.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

2015 உலகக் கோப்பைக்குப் பின் இந்த உலகக் கோப்பைக்கு முன்வரை அவரின் ரன்கள் 2,001... 61 இன்னிங்ஸ்களில்! (ஆவரேஜ் 44.7). ஆக, அவரின் பேட்டிங் ஆவரேஜ் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், நான்காண்டுகளில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் 85.29! இது அவரின் ஆல்டைம் ஸ்ட்ரைக் ரேட்டுக்கு கொஞ்சம் குறைவு (87.67)! அதேசமயம் அவரின் அவே ஸ்ட்ரைக் ரேட்டைவிட (84.42) கொஞ்சம் அதிகம். கடைசியாக ஆடிய உலகக் கோப்பையிலும் அவே ஸ்ட்ரைக்ரேட்டைவிட அதிகமே (93.31) வைத்திருக்கிறார். வயது ஏற ஏற தோனியின் பர்ஃபாமன்ஸ் குறைந்ததென்பதில் சந்தேகம் இல்லை. இது எல்லாருக்கும் நடக்கும்! விமர்சனங்களும் வரத்தான் செய்யும்! அவர் அதற்கு அப்பாற்பட்டவரில்லை! அதை மென்சிரிப்பில் கடந்துசெல்வதுதான் அவரை ரசிகர்களுக்கு இன்னமும் நெருக்கமாக்குகிறது.

தோனி அறிமுகமான காலத்தில் டெஸ்க்ட்புக் ரக ஷாட்கள் ஆடும் பேட்ஸ்மேன்கள்தாம் இந்திய அணியில் அதிகம். ஷேவாக் மட்டுமே அதிரடி காட்டுவார். அப்படியான பேட்டிங் லைன் அப்பில் தோனி பாய்ச்சியது புதுரத்தம். அவரின் unorthodox ஸ்டைலைப் பார்த்துப் பதறிப்போனார்கள் பெளலர்கள். தோனியின் 'எப்படிப் போட்டாலும் அடிப்பேன்' ஆட்டிட்யூட் குட்டிக் குட்டி வாண்டுகள் முதல் நரை தரித்த பெரியவர்கள்வரை எல்லாரையும் டிவி முன் கொண்டுவந்து சேர்த்தது. அவரின் ஹேண்ட் பவரைப் பற்றி அடிபட்ட பந்துகள் காலத்திற்கும் பேசும். இப்போது முதுகுவலிப் பிரச்னையில் முன்போல ஊன்றி ஆடமுடிவதில்லை அவரால்! அவருக்கும் வயதாகிறது என்கிற யதார்த்தம் சட்டென அறைகிறது அவரின் ரசிகர்களை! மனதும் கனம் ஏறிப்போகிறது. ஆனாலும் 'ரன்னிங், ஸ்டம்பிங்ல கடைசிவரை எங்காளுதான் கிங்கு!' என தன்னைத்தானே கொஞ்சம் ஆற்றிக்கொள்ளப் பார்க்கிறது மனம்.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

சி.எஸ்.கே ஆடும்போட்டிகள் டிவியைவிட நேரில் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்... காரணம் தோனி ஃபீல்ட் செட் செய்யும் அழகுதான்! இனி மஞ்சள் ஜெர்ஸியில் மட்டுமே அந்த அழகியல் காணக்கிடைக்கும் என்பதை இனிப்பும் கசப்புமாய் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

மிடில் ஆர்டர் சொதப்பலாக இருந்தாலும், தோனி பழைய ஃபார்மில் இல்லாவிட்டாலும், அவர் களத்திலிருக்கும்வரை எதிரணிகள் பதற்றத்திலேயேதான் இருந்தன. அவரின் முதல் சதம் வந்த நாளில் அவருக்கு பந்து வீசிய அஃப்ரிடி முதல் கடைசியாக அவருக்கு பந்துவீசிய பெர்குசன் வரை யாருமே அவரை குறைத்து மதிப்பிடத் தயாரில்லை. அவரின் இருப்பே வெற்றியைத் தட்டிப்பறிக்கும் என நம்பினார்கள். இனியும் நம்புவார்கள், ஐ.பி.எல்லில்! அதுதான் தோனி.

முன்போல இரண்டு மூன்று தொடர்கள் வாய்ப்பெல்லாம் எந்தக் கிரிக்கெட்டருக்கும் வாய்ப்பதில்லை. 'இரண்டு ஆட்டங்கள் ஆடவில்லையா? இறக்கு இவரை' என ரசிகர்களே கண்டனங்களைக் குவிக்கிறார்கள். இந்தப் பிரஷர் பிளேயர்கள், பி.சி.சி.ஐ என எல்லோரையும் ஆட்டுவிக்கிறது. ஐ.பி.எல், ஃபர்ஸ்ட் க்ளாஸ் மேட்ச்கள் என ரசிகர்கள் தொடர்ந்து ஃபாலோ செய்வதால் ஆப்ஷன்கள் அவர்கள் கண்ணுக்கு நிறைய தெரிகிறது. பிரஷரும் எகிறுகிறது.

இதைத் தோனியும் உணர்ந்துவிட்டார். கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதை அவரும் தன் ரசிகர்களுக்கு உணர்த்துகிறார். குறியீடை உணர்ந்தாலும் கசக்கும் உண்மையை ஏற்றுக்கொள்ள இன்னமும் சிலருக்கு கஷ்டமாகத்தான் இருக்கும். 'I may not be batting tomorrow' எனக் கடந்த ஐ.பி.எல்லில் தோனி சொன்னபோது பதறியவர்கள் சாட்சி! 15 ஆண்டுகள் பிரகாசித்த சூரியன் மெல்லக் குன்றி ஒளிக்கீற்றாகி இருளில் கரைந்துபோவதை கனத்த இதயங்களோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இருள் தற்காலிகமானதுதான். நாளை, புதிதாய் தொடங்கும்.

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி

பொய்த்துப்போன கனவுகளுக்கு உயிரூட்டி கோப்பைகளை பரிசளித்த... கிரிக்கெட் உட்பட விளையாட்டு எல்லாருக்குமானது என்பதற்கு சாட்சியான... வெற்றிகளால் மொத்த தேசத்தையும் ஒருங்கிணைத்த தோனியின் காய்த்துப்போன கரங்களை எப்போதும் வாஞ்சையாய் அணைத்தபடி இருக்கும் கோடிக்கணக்கான கைகள்.

Shawshank redemption-ல் தொடங்கியதை அதிலேயே முடிப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

இறுதிக்காட்சியில் தளர்ந்துபோன உடலோடு மெல்ல மேடேறுவார் மார்கன் ஃப்ரீமேன்! பழகிப்போன வாழ்க்கையிலிருந்து இன்னொரு வாழ்க்கைக்கு கூடு பாய்வதற்கு முன்னான தயக்கத்தோடு நடை போடுவார் அவர். தூரத்தில் ஒற்றைமரம் ஓங்கி நின்றிருக்கும். அதன் அடியில் புதைக்கப்பட்டிருக்கும் பெட்டியிலிருந்து ஒரு கடிதத்தை எடுப்பார். அது இந்த இடத்தில் இந்த நொடியில் இப்படியாக விரிய வேண்டும் என்பதுதான் விதி!

Dear Dhoni, If you're reading this... you've gotten out and if you've come this far, maybe you're willing to come a little further! Remember... Hope is a good thing! Maybe the best of things and no good thing ever dies! We'll be hoping this letter finds you and finds you well. Thank you for everything! We are proud of you! We love you!