Published:Updated:

வார்னரின் ஜம்ப்... தாஹிரின் ஓட்டம்... கேரியின் அதிரடி... தென்னாப்பிரிக்கா வெற்றியோடு முடிந்தது லீக் சுற்று!

David Warner
David Warner

நெருக்கடி இல்லாமல் ஆடும் தென்னாப்பிரிக்காவுக்கும், நெருக்கடியோடு ஆடும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் ஆறிலிருந்து அறுபது வித்தியாசங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.

2019 உலகக் கோப்பையின் கடைசி லீக் போட்டி நேற்று நடைபெற்றது. தொடரிலிருந்து இரண்டாவதாக வெளியேறிய தென்னாப்பிரிக்காவும் , அரையிறுதிக்கு முதலாவதாக முன்னேறிய ஆஸ்திரேலியாவும் நேற்று களம் கண்டன. உலகக் கோப்பை அட்டவணை வெளியிட்டபோது கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்த போட்டி இது. சொல்லப்போனால் அரையிறுதிக்கான அணியை இந்தப் போட்டிதான் தீர்மாணிக்க உதவும் என்றுகூட சிலர் நினைத்தனர். ஆனால், நேற்றைய போட்டிக்கு முன்பே அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் முடிவாகிவிட்டன. இருந்தாலும் நேற்றைய மற்றொரு போட்டியின் முடிவு இதை ஒரு `டெட் ரப்பர்’ போட்டியாகவும் கடந்துவிட முடியாமல் ஆக்கிவிட்டது. ஆம்! இந்தியா - இலங்கை போட்டியில் இந்தியா வெற்றிபெற்றுவிட்டது. ஆதலால் இந்தப் போட்டியின் முடிவுதான் எட்பஸ்டான் மைதானத்தில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் பலமான இங்கிலாந்துடன் மோதுவது யார் என்ற கேள்விக்கு முடிவு கொடுக்கும்.

நியூசிலாந்துடன் ஒப்பிட்டால் இங்கிலாந்து சற்று பலமான அணி. கடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் நியூசிலாந்தோ கடந்த மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து ஃபார்ம் அவுட் ஆகியுள்ளது. ஆகையால் இங்கிலாந்தை அரையிறுதியில் சந்திப்பதைவிட நியூசிலாந்தை சந்திப்பதைத்தான் ஆஸ்திரேலியா விரும்பும்…இந்தியாவும்கூட. ஆதலால் ரசிகர்களும் இந்தப் போட்டியின் முடிவை ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். தென்னாப்பிரிக்காவும் இந்தப் போட்டியில் வென்று ``ஆஸ்திரேலியாவை வீழ்த்திட்டோம்டா” என்கிற கெத்தில் நாடு திரும்ப ஆயத்தமாகினர். அதோடு தங்களுடைய கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் `பராசக்தி எக்ஸ்பிரஸ்’ தாஹிர் மற்றும் டுமினிக்கு சிறப்பான முறையில் வழியனுப்பவும் வேண்டினர்.

Faf du Plessis
Faf du Plessis

டாஸ் ஜெயித்த தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. ஓல்டு டிராஃபோர்ட் ஆடுகளம், எட்பாஸ்டனைப் போல் ஆட்டம் போகப் போக ஸ்லோவாகாது என்பதாலும், போட்டியில் இரு அணிகளுக்கும் பெரிய நெருக்கடி இல்லாததாலும் டாஸ் இந்தப் போட்டியில் பெரிய பங்கு வகிக்கவில்லை. காயம் காரணமாக அம்லா ஆடவில்லை. டிகாக் – மார்க்ரம் பவர்ப்ளே ஓவர்களில் ஃபீல்டிங் கட்டுப்பாடுகளை பயன்படுத்தி அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கினர். 10 ஓவர்கள் முடிவில் 73 ரன்கள் எடுத்தது அந்த ஜோடி. பின்பு லயான் சுழலில் மார்க்ரம் ஸ்டம்பிங் ஆக, அவரைத் தொடர்ந்து டிகாக்கும் அவுட்டானார். தென்னாப்பிரிக்கா 114 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பிறகு இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களான டு பிளெஸ்சிஸ் – வேன் டெர் டூசன் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்து தென்னாப்பிரிக்கா ஒரு நல்ல ஸ்கோர் எடுக்க அடித்தளம் போட்டனர். சிறப்பாக விளையாடிய டு பிளெஸ்சிஸ் சதம் அடித்தார், இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க வீரர் அடிக்கும் முதல் சதம் அது. பிறகு பெரண்டார்ஃப் பந்தில் அவுட்டானார். மறுமுனையில் வான் டர் டூசனும் சதத்தை நோக்கி முன்னேற, கடைசிப் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து பவுண்டரி எல்லையில் மேக்ஸ்வெல்லிடம் பிடிபட்டார். இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 325 என வலுவான ஸ்கோரை எடுத்தது.

 Imran Tahir
Imran Tahir

326 என கடினமான ஸ்கோரை சேஸ் செய்யத் தொடங்கியது ஆஸி. தென்னாப்பிரிக்காவைப் போல் ஒரு நல்ல தொடக்கம் ஆஸ்திரேலியாவுக்கு தேவைப்பட்டது. வார்னர் – ஃபின்ச் ஜோடி செட்டானால் பெரும்பாடாகிவிடும் என்பதை நன்கு உணர்ந்து ஆட்டத்தின் முதல் ஓவரிலியே தாஹிரை பெளலிங்கிற்கு அழைத்தார் டு பிளெஸ்சிஸ். தன் கடைசி ஒருநாள் போட்டியில் முத்திரைப் பதிக்க வந்தார் அந்த ப்ரோட்டியஸ் வீரர். இரண்டாவது ஓவரிலியே டு பிளெஸ்சிஸ் எதிர்பார்த்த அந்த விக்கெட்டை வீழ்த்தினார் தாஹிர். ஃபின்ச்சை பெவிலியனுக்கு அனுப்பியவுடன் அவரின் டிரேட்மார்க் ஓட்டத்தைத் தொடங்கினார். அதுதான் ஒருநாள் போட்டியில் தாஹிரின் கடைசி ஓட்டமாக அமைந்தது ( ஆம்! அவர் அதன் பிறகு விக்கெட் எடுக்கவில்லை). அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் LBW-ஆகி ஏமாற்றமளித்தார். கவாஜா ரிட்டையர்ட் ஹர்ட், ஸ்டாயினிஸ் ரன் அவுட், மேக்ஸ்வெல்லும் கீப்பரிடம் கேட்ச்சாகி அவுட்டாகி அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஆஸ்திரேலியா 119-4 என தடுமாறியது.

தேவைப்படும் ரன்ரேட் எட்டை நெருங்கியது. ஒருபக்கம் வார்னர் அரைசதம் கடந்தார். இருந்தும் மற்றொரு எண்டில் அவருக்கு நல்ல துணையை எதிர்நோக்கி காத்திருந்தார். அந்த ஆங்கர் ரோலை அடுத்து வந்த அலெக்ஸ் கேரி செய்யத் தொடங்கினார். பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும்போது, பேட்ஸ்மேனை ஒரு நல்ல பால் அவுட்டாக்க உதவுவதை விட `டாட் பால்கள்’ அந்த வேலையை அழகாகச் செய்துவிடும். இதை மனதில் வைத்துக்கொண்டு இருவரும் டாட் பால்கள் ஆடாமல் நன்றாக ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்தனர். அதுவரை பொறுமையாக ஆட்டத்தை கட்டமைத்த வார்னரும் அதிரடி மோடுக்கு மாறினார். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. வார்னரும் இந்த உலகக் கோப்பையில் தன்னுடைய இரண்டாவது சதத்தை அடித்து தன்னுடைய டிரேட்மார்க் `ஜம்ப்’ செய்துகொண்டாடினார்.

Alex Carey
Alex Carey

தென்னாப்பிரிக்காவுக்கு நிச்சயம் இப்போது ஒரு விக்கெட் தேவை. ஆட்டத்தின் 39-வது ஓவரில் அந்த திருப்புமுனை அமைந்தது. பிரிடோரியஸ் வீசிய பந்தை மிட் ஆன் திசையில் தூக்கி அடித்தார் வார்னர். அதை மாரிஸ் பாய்ந்து பிடிக்க 122 ரன்களில் அவுட்டானது லிட்டில் டைனமைட். ``வார்னர் அவுட், இனிமேல் தென்னாப்பிரிக்கா எளிதாக ஜெயித்துவிடும்” என்று கணக்குப்போடத் தொடங்கிய சமயத்தில் அலெக்ஸ் கேரி ஆக்‌ஷனுக்கு வந்தார். தாஹிர், ஷம்சி இருவரையும் டார்கெட் செய்தார் கேரி. தாஹிர் ஓவரில் 16 ரன்கள் ஷம்சி ஓவரில் 12 ரன்கள் என அதிரடி காட்டினார். 45-வது ஓவரில் மோரிஸ் பந்தில் அவரும் அவுட்டாக தென்னாப்பிரிக்காவின் வெற்றி உறுதியானது. இறுதியில் பத்து ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது.

கடைசி இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் வெற்றியின் மூலம் ஒன்றை புரிந்துக்கொள்ளலாம். நெருக்கடி இல்லாமல் ஆடும் தென்னாப்பிரிக்காவுக்கும், நெருக்கடியோடு ஆடும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையில் ஆறிலிருந்து அறுபது வித்தியாசங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அதில் முக்கியமான வித்தியாசம் ஃபீல்டிங். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் இரண்டு மூன்று கேட்ச்கள் டிராப் செய்து தோல்வியுற்ற தென்னாப்பிரிக்கா, நேற்று வெற்றியடைய காரணமே அவர்களின் ஃபீல்டிங்தான். பிடித்த எல்ல கேட்ச்களும் அற்புதமான கேட்ச்கள். நெருக்கடி இல்லாதபோதுதான் அவர்களால் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறதோ என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

South Africa
South Africa

மறுபக்கம் ஆஸ்திரேலியா அணிக்கோ பல எதிர்மறையான விஷயங்கள் இந்தப் போட்டியில் நடந்தது. அந்த அணியின் ப்ரீமியம் வேகப்பந்து வீச்சாளர்களான ஸ்டார்க், கம்மின்ஸ் இருவரும் 60 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர். 50 ஓவர் முழுவதுமாக வீசப்பட்டு கம்மின்ஸ் தன்னுடைய பத்து ஓவர் கோட்டாவை முதல் முறையாக இந்த உலகக் கோப்பையில் முடிக்கவில்லை. அதுபோக அணியில் உள்ள பல வீரர்கள் நேற்று காயங்களால் அவதிப்பட்டனர். கவாஜாவுக்கு ஹார்ம்ஸ்டிரிங் இஞ்சுரி, ஸ்டாயினிஸுக்கு முதுகில் காயம், ஸ்டார்க் கால் முட்டியில் ஏதோ அசெளகரியமாக உணர்ந்தார். அரையிறுதி நெருங்கும் சமயத்தில் இப்படி சில பிரசனைகளை கையாளவேண்டியிருக்கிறது.

எல்லாம் போக கடைசி லீக் போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்த அனைத்தும் நிகழ்ந்துவிட்டது. வார்னரின் செஞ்சுரியோடு டிரேட்மார்க் ஜம்ப், தாஹிரின் பராசக்தி எக்ஸ்பிரஸ் ரன்னப், தென்னாப்பிரிக்க வீரரின் முதல் சதம், ஸ்டார்க் ரபாடாவின் யார்க்கர்களில் விக்கெட் என அனைத்தும் நிகழ்ந்து லீக் போட்டிகள் சுபமாக முடிந்தது. சிறப்பான தரமான சம்பவங்கள் இனிமேல் தான் காத்துக்கொண்டிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு