Published:Updated:

குசல் மெண்டிஸ் - இலங்கை எதிர்காலத்தின் மிகப்பெரிய பொக்கிஷம்! #PlayerBio #CWC19

மாரியப்பன் பொ

"இன்னும் இலங்கைக்காக பத்து வருடங்கள் விளையாடுவதாக நம்புகிறேன், அப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் ரன்கள் எடுக்க முயற்சி செய்கிறேன். அப்போதுதான் என் ஆசையான பத்தாயிரம் ரன்களை கடக்க முடியும்."

குசல் மெண்டிஸ்
குசல் மெண்டிஸ்

பெயர் : குசல் மெண்டிஸ்

பிறந்த தேதி : 02.02.1995

பிறந்த இடம் : இலங்கை

பேட்டிங் : வலது கை பேட்ஸ்மேன்

பவுலிங் : வலதுகை லெக் ஸ்பின்

சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகம் : 22.10.2015

குசல் மெண்டிஸ்
குசல் மெண்டிஸ்

பிளேயிங் ஸ்டைல்

குசல் மெண்டிஸ் - இலங்கை பெரிதும் நம்பியிருக்கும் பேட்ஸ்மேன். எப்பொழுதும் ஒன் டவுனில் இறங்கி எதிரணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்குபவர். உயரம் சற்று குறைவாக இருந்தாலும் ஃப்ரன்ட் ஃபூட் வைத்து பந்தை டிஃபன்ஸ் செய்வதில் கில்லாடி. இவரின் க்ளாசிக் ஷாட்களான ஹூக் ஷாட் மற்றும் புல் ஷாட்களால் எளிதாக ரன்களைக் குவிப்பதில் வல்லவர். அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினாலும் பொறுப்பை உணர்ந்து ஆடக்கூடியவர். முரளிதரன் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களாலும் 'எதிர்காலத்தின் பொக்கிஷம்' எனப் பாராட்டப்பட்டவர்.

கிரிக்கெட் பயணம்

ஆரம்பக் காலகட்டத்திலேயே பள்ளி அளவிலான போட்டிகளில் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக ஆடிய மெண்டிஸ் 2013-ம் ஆண்டு பள்ளி அளவிலான சிறந்த கிரிக்கெட்டர் விருதைப் பெற்றார். அதன்பின் பிரின்ஸ் வேல்ஸ் கல்லூரி அணி, தேசிய இளையோர் அணி, மொரட்டுவா அணி ஆகிய அணிகளில் ஆட ஆரம்பித்தார். அதன் பின் இலங்கையில் ப்ளூம்ஃபீல்டு கிரிக்கெட் கிளப்பிற்காக முதல்தர கிரிக்கெட்டில் ஆட ஆரம்பித்தவர். 16 முதல்தர போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். ஆனால், இலங்கையின் தேசிய அணியில் இடம் பிடித்துவிட்டார். 2015-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரின் இரண்டாவது போட்டியில் அறிமுகமானார்.

குசல் மெண்டிஸ்
குசல் மெண்டிஸ்
"இன்னும் இலங்கைக்காக பத்து வருடங்கள் விளையாடுவதாக நம்புகிறேன். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வருடமும் ஆயிரம் ரன்கள் எடுக்க முயற்சி செய்கிறேன். அப்போதுதான் என் ஆசையான பத்தாயிரம் ரன்களைக் கடக்க முடியும்"
குசல் மெண்டிஸ்

சிறந்த பெர்ஃபாமன்ஸ்

* 176 vs ஆஸ்திரேலியா 2016

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, முதல் இன்னிங்ஸில் இரண்டு அணிகளுமே சொதப்ப, இரண்டாவது இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிர்பந்தத்துடன் ஆடத் தொடங்கியது இலங்கை. சில்வா 4 ரன்கள், பெரேரா 7 ரன்கள் என சொதப்பினாலும் நின்று ஆடினார் மெண்டிஸ். 254 பந்துகளில் 21 பவுண்டரிகளோடு 176 ரன்கள் குவித்தார். ஸ்டார்க், ஹேசில்வுட், லயன் என அனைவரின் பந்தையும் ஒற்றை ஆளாகப் பதம் பார்க்க, 353 ரன்கள் எடுத்தது இலங்கை. அதோடு 106 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது. 1999-ம் ஆண்டுக்குப் பின் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இலங்கை பெற்ற முதல் வெற்றி. மெண்டிஸின் 176 ரன்கள் யாரும் எளிதில் மறக்கவியலாத மாஸ்டர் ஸ்ட்ரோக்காக இருந்தது.

குசல் மெண்டிஸ்
குசல் மெண்டிஸ்

* 84 vs தென்னாப்பிரிக்கா 2019

சமீபத்தில் ட்ரெண்டான மெண்டிஸின் இன்னிங்ஸ் இது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வென்ற இலங்கை, தொடரை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. இரு அணிகளும் வெளிப்படுத்தியது சுமாரான ஆட்டம் தான். 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென்னாப்பிரிக்கா. மெண்டிஸ் இந்தப் போட்டியிலும் அதிரடி ஆட்டம் ஆடினார்‌. இம்முறை ஃபெர்ணான்டஸூடன் சேர்ந்து ஆடிய மெண்டிஸ், எளிதாக இலங்கைக்கு வெற்றியைத் தேடித் தந்தார். 13 பவுண்டரிகள் உள்பட 84 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் பல நாட்கள் தோல்வியை‌ மட்டுமே கண்ட இலங்கை அணி ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது. இதற்கு முக்கிய காரணமான மெண்டிஸ் இலங்கையின் தவிர்க்க முடியாத வீரர்!

மெண்டிஸ் ஸ்பெஷல்

  • 2018-ம் ஆண்டு கோலிக்கு பிறகு ஆயிரம் ரன்கள் கடந்த ஒரே வீரர் மெண்டிஸ்தான்.

  • வெறும் பதினாறு முதல்தர போட்டிகளில் மட்டுமே ஆடியபோது இலங்கை அணிக்குத் தேர்வானார்.

  • ஆஸ்திரேலியாவிற்கு எதிராகக் குறைந்த வயதில் சதமடித்த முதல் இலங்கை வீரர் மெண்டிஸ்.