Published:Updated:

வேகம், ஸ்விங், கன்ட்ரோல்... துல்லிய பெளலர் கீமர் ரோச்... வெஸ்ட் இண்டீஸின் நம்பிக்கை!

மாரியப்பன் பொ

இவரின் உயரமோ 5.8" அடி தான். ஆனால், அவரின் வேகம் அவருக்கு பெரும் பலம் 140 கி.மீ வேகத்தில் இவர் வீசும் பந்துகள் பேட்ஸ்மேன் கணிப்பதற்குள் வந்துவிடும்.

வெஸ்ட் இண்டீஸ் பெளலர் கீமர் ரோச்.
வெஸ்ட் இண்டீஸ் பெளலர் கீமர் ரோச்.

பெயர் : கீமர் ரோச்

பிறந்ந தேதி : 30.06.1988

பிறந்த ஊர் : செயின்ட் லூயிஸ், பார்படாஸ்

ரோல் : பௌலர்

பேட்டிங் : வலது கை பேட்ஸ்மேன்

பௌலிங் : வலது கை வேகப்பந்துவீச்சு

சர்வதேச அறிமுகம் : 20.08.2008

செல்லப் பெயர் : ரோச்சி

வேகம், ஸ்விங், கன்ட்ரோல்... துல்லிய பெளலர் கீமர் ரோச்... வெஸ்ட் இண்டீஸின் நம்பிக்கை!

ப்ளேயிங் ஸ்டைல்

வேகப்பந்துவீச்சுக்குப் பேர் போன தேசத்திலிருந்து வந்திருக்கும் மற்றுமொரு பெளலர் கீமர் ரோச். இந்த வெஸ்ட் இண்டீஸ் பௌலிங் லைன் அப்பின் நம்பிக்கை. சாதாரணமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஆறடி உயரத்தில் இருப்பார்கள் அது அவர்களுக்குப பௌலிங்கில் ரொம்பவே கைகொடுக்கும். இவரின் உயரமோ 5.8" அடிதான். ஆனால், அவரின் வேகம் அவருக்கு பெரும் பலம். 140 கி.மீ வேகத்தில் இவர் வீசும் பந்து பேட்ஸ்மேனை திணறடிக்கும். ஷார்ட் பால்களாகப் போட்டு பேட்ஸ்மேன்கள் அதைத் தூக்கி அடித்து அவுட்டாவதுதான் இவரின் சூத்திரம். முக்கியமாக இவரின் வேகப்பந்துகளை எதிர்கொள்ளவே பேட்ஸ்மேன்கள் தயங்குவர்.

வெஸ்ட் இண்டீஸ் பெளலர் கீமர் ரோச்.
வெஸ்ட் இண்டீஸ் பெளலர் கீமர் ரோச்.

இன் ஸ்விங், அவுட் ஸ்விங் இரண்டிலும் கைதேர்ந்தவர். பந்தை கன்ட்ரோல் செய்வதில் நேர்த்தியானவர். தேவையில்லாமல் எக்ஸ்ட்ராஸ் தரமாட்டார். எவ்வளவு வேகத்தில் வீசினாலும், பந்தை நினைத்த இடத்தில் துல்லியமாக பிட்ச் செய்வார். தற்போது அந்த அணியில் அத்தனை துல்லியம் வாய்ந்த பௌலர்கள் இல்லை.

கிரிக்கெட் பயணம்

பார்படாஸ் அணியில் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியவர். 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் அணியில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ப்ளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அதன்பின் டி 20 அணியில் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2009-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் சிறப்பாகப் பந்துவீசி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பெளலர் எனப் பெயர்பெற்றார். அந்தத் தொடரின் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சயமானார்.

கீமர் ரோச்
கீமர் ரோச்

அதன்பின் ரிக்கி பாண்டிங்கின் கையைப் பதம் பார்த்தது, உலகக்கோப்பை ஹாட்ரிக், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் எடுத்தது என அடுத்தடுத்து சாதனைகள், அவரை வெஸ்ட் இண்டீஸ் அணியின் தவிர்க்க முடியாத வீரராக்கி உள்ளது.

சிறந்த பர்ஃபாமன்ஸ்

10/146 vs ஆஸ்திரேலியா, 2012

டி20, ஒருநாள் என லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் அசத்தினாலும், டெஸ்ட் போட்டிக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்று கூறியவர்களுக்கு இந்தப் போட்டியில் பதில் சொன்னார் ரோச். முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட்டில் அதே டீமுடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

கீமர் ரோச் பெளலிங் ஆக்ஷன்
கீமர் ரோச் பெளலிங் ஆக்ஷன்

ஆனால், ஆஸ்திரேலியாவால் ரோச்சின் பந்துவீச்சுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. பாண்டிங், வார்னர், கிளார்க் என அதிரடி பேட்ஸ்மேன்களை அசால்ட்டாகச் சாய்த்து, முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ரோச். இரண்டாவது இன்னிங்க்சிலும் அவரின் விக்கெட் தொடர்ந்தது. ஆனால், முதல் இன்னிங்ஸைவிட குறைவான ரன்களில் மற்றுமொரு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 2005-ம் ஆண்டுக்கு பிறகு, ஒரு போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

6/27 vs நெதர்லாந்து, 2011

2011 உலகக் கோப்பையின் லீக் போட்டி. ஏற்கெனவே தென்னாப்பிரிக்கா உடனான போட்டியில் தோல்வி பெற்றதால் காலிறுதிக்கு தகுதிபெற வேண்டுமெனில் இந்தப் போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது வெஸ்ட் இண்டீஸ். பேட்டிங்கில் அசத்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 303 ரன்கள் குவித்தனர். ஆனால், பெளலிங் லைன் அப் சுமாராக இருக்க, ரோச் அந்தக் குறையைத் தீர்த்தார். யார்க்கர்கள் வீசி நெதர்லாந்தின் பேட்ஸ்மேன்களை கதி கலங்க வைத்தார்.

பெஸ்ட் பெளலிங்
பெஸ்ட் பெளலிங்

கூப்பர் மட்டும் விடாமல் ஆடிக்கொண்டிருக்க, கடைசி மூன்று விக்கெட்டுகளை ஹாட்ரிக் எடுத்தார் ரோச். இதன் மூலம் உலகக் கோப்பையில் ஹாட்ரிக் நிகழ்த்திய ஆறாவது வீரர் என்ற சாதனையுடன், அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றார்.

ரோச் ஸ்பெஷல்!

  • அதுவரை ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் பெவிலியன் செல்லாத பாண்டிங்கை, 2009-ம் ஆண்டு தன் வேகத்தால் அவரது முழங்கையைப் பதம் பார்த்து, பெவிலியன் அனுப்பி வைத்தார், 20 வயதான ரோச்.

  • 2005-க்குப் பின், ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமைபெற்றுள்ளார்.

  • வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் பௌலர் காலிமோரின் தீவிர ரசிகர் ரோச்.

  • 2014-ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் மயிரிழையில் உயிர்தப்பினார் ரோச்.

``19 வயதில் அவனைப் பார்த்தபோதே அவன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவான் என்று உறுதியாக நம்பினேன், பிட்ச் லென்த்தையும் லைனையும் கணக்கில் கொண்டு கச்சிதமாக விக்கெட் வீழ்த்துகிறான்!"
ரெய்ஃபர்