Published:Updated:

`வருண பகவானே... இந்தியாவுல வைச்சு செய் 🙏 !'- இங்கிலாந்தில் கேதர் ஜாதவின் கோரிக்கை

மலையரசு

நேற்று மழை சிறிது நேரம் நின்றிருந்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் கடவுளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது....

கேதர் ஜாதவ்
கேதர் ஜாதவ்

மகாராஷ்டிரா மாநில வறட்சி குறித்து கடவுளிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ். நடப்பு உலகக்கோப்பை தொடரில் லீடிங்கில் இருப்பது என்னவோ `மழை' தான். ஆம், இங்கிலாந்து இது மழை சீசன் காலம் என்பதால் மழை வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது. இதுவரை 3 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆட்டத்தின் நடுவே மழை வந்து ஓவர் குறைக்கப்பட்ட போட்டியும் உண்டு. மழையின் ஆட்டம் சில அணிகளுக்கு சாதமாகவும் சில அணிகளுக்கு பாதகமாகவும் முடிந்துள்ளது.

மழை
மழை

இந்த நிலையில் இன்று மழையின் ஆட்டம் இந்திய அணியையும் விட்டுவைக்கவில்லை. இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதவிருந்தன. நாட்டிங்காமில் நடைபெற இருந்த இந்தப் போட்டி டாஸ் கூட போட முடியாமல் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. தொடர் மழையால் உலகக்கோப்பை போட்டிக்கான சுவாரஸ்யம் ரசிகர்கள் மத்தியில் குறைந்து வருகிறது.

இதற்கிடையே, போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை சிறிது நேரம் நின்றிருந்தபோது இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் கடவுளுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்தார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதில், ``வருண பகவானே... தண்ணீர் பஞ்சம் நிலவும் மகாராஷ்டிராவிற்கு மழையை கொண்டு செல். அங்கு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் தண்ணீர் தேவை. நாடிங்ஹாமில் கொட்டித்தீர்ப்பதற்கு பதிலாக வறட்சியாக இருக்கும் மகாராஷ்டிராவில் கொட்டித்தீர்" எனக் கையெடுத்து கும்பிட்டு வேண்டிக்கொள்கிறார்.

`வறட்சி' மகாராஷ்டிரா!

கேதர் ஜாதவ்வின் சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலம் புனே. மகாராஷ்டிரா மாநிலம் தமிழகத்தைக் காட்டிலும் வறட்சி மிகுந்த மாநிலம் என்பது ஊரறிந்த விஷயம். கோடைக்காலம் வந்துவிட்டாலே இங்கு தண்ணீருக்காக மக்களின் கஷ்டம் தொடங்கிவிடும்.

இந்திய அணி
இந்திய அணி

இந்த முறை வரலாறு காணாத வறட்சியை சந்தித்து வருகிறது. தற்போது அங்கு வெறும் 7 சதவீதம் மட்டுமே தண்ணீர் பயன்பாட்டுக்கு உள்ளது. இதனால் அங்கு மழை பெய்தால் நீரின் அளவு உயரும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஜாதவ்.

அப்படியே சென்னைக்கும் வரவும் வருண பகவான் சார்! 🙏🙏🙏

மலையரசு