Published:Updated:

``அவர் விஷயத்தில் பிரச்னை மக்களிடம்தான் இருக்கிறது!” - தோனிக்காகக் குரல் கொடுக்கும் கபில் தேவ்

பிரேம் குமார் எஸ்.கே.

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் விமர்சிக்கப்பட்ட வீரர் என்றால் தோனியைச் சொல்லலாம். ஆனால், அவரை விமர்சிப்பதில் எந்த நியாயமும் இல்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் பேசியுள்ளார்.

தோனி ஸ்டம்பிங்
தோனி ஸ்டம்பிங் ( AP )

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கிவிட்டன. மழைக் காரணமாக நேற்று நிறுத்தப்பட்ட இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய முதலாவது அரையிறுதிப் போட்டியின் தொடர்ச்சி இன்று மதியம் தொடங்கவுள்ளது. நியூசிலாந்து அணி தற்போது 46.1 ஓவர்களில்m 211 ரன்கள் எடுத்துள்ளது.

கபில் தேவ்
கபில் தேவ்

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் விமர்சிக்கப்பட்ட வீரராகத் தோனியைச் சொல்லலாம். அவரது ஸ்லோ இன்னிங்ஸ் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. எனினும், அவருக்கான ஆதரவு குரல்களும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். தற்போது தோனிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருப்பவர் முன்னாள் கேப்டன் கபில் தேவ்.

இந்திய அணிக்கு முதலாவது உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்த கபில் தேவ் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது தொடர்பாகப் பேசியபோது, ``இந்திய அணியை நினைத்து பெருமை கொள்கிறேன். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத அணியாக இருக்கிறது. களத்தில் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்” என்றார்.

இந்திய அணி
இந்திய அணி
AP

தோனி மீது வைக்கப்படும் விமர்சனம் தொடர்பாகப் பேசிய கபில், ``தோனியை விமர்சிப்பது என்பது நியாமில்லாதது. பெரும்பாலான நேரங்களில் சிறப்பாகச் செயல்பட்ட சில வீரர்களுக்கு இப்படி நடப்பது உண்டு. ஒன்றை மட்டும் மனதில் வைத்திருக்க வேண்டும். ஒருவர் எப்போதும் 20 வயதிலேயே இருக்க முடியாது.

ஒரு அணியாகப் பார்க்கும்போது தோனி சிறப்பாகத்தான் விளையாடுகிறார் என்பேன். ஒருவேளை அவர் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் இருக்கலாம். இதில் பிரச்னை என்னவென்றால், நாம் நமது ஹீரோக்களிடமிருந்து கூடுதலாக எதிர்பார்க்கிறோம். ஆனால், அணிக்குத் தேவையானதை அவர் சிறப்பாகச் செய்து வருகிறார்.

விராட் கோலி மாதிரி ஆக்ரோஷமான கேப்டன் அணியை வழிநடத்தும்போது, தோனி மாதிரி அமைதியான ஒருவர் அணியில் இருப்பது மிக முக்கியம்
கபில் தேவ்

அவரது விக்கெட் கீப்பிங்கும் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால், மீண்டும் சொல்கிறேன். அவரால் தனது 20 வயதில் செயல்பட்டதைப் போன்று நிச்சயம் செயல்பட முடியாது” என்றார்.

நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ் சிஸ்டம் குறித்துப் பேசிய கபில், ``ஒருநாள் போட்டிகளில் டி.ஆர்.எஸ் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக ஐ.சி.சி பரிசீலிக்க வேண்டும். குறிப்பாக, நாக் அவுட் போட்டிகளில் 2 அல்லது 3 டி.ஆர்.எஸ் வரை கொடுக்கலாம். என்ன, போட்டி முடிய 5 நிமிடங்கள் கூடுதலாக ஆகும்.

கபில் - தோனி/கோலி
கபில் - தோனி/கோலி

நாக் அவுட் சுற்றுகளில் சமயத்தில் ஒரு ரன்னில் அல்லது ஒரு விக்கெட்டில் ஆட்டம் மாறும்போது இந்த டி.ஆர்.எஸ் முக்கியத்துவம் பெறும்” என்றார்.

பும்ரா பந்து வீச்சில் அதிகம் ஈர்க்கப்பட்ட கபில் தேவ், ``கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பும்ரா, தற்போது இருக்கும் உயரத்தை அடைவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். வெறும் 10 யார்டு தூரம் மட்டுமே ஓடி, எளிதாக அவர் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். இதற்கு உண்மையிலே தனித் திறமை வேண்டும். அவர் பந்துவீச்சு நம்பமுடியாதபடி இருக்கிறது. பும்ரா மட்டுமல்ல, ஷமியும் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார்” என்றார்.

கோலி தோனி
கோலி தோனி
AP

இறுதியாகக் கோலியின் கேப்டன்சி குறித்துப் பேசிய கபில் தேவ், ``கோலி தோனியிடமிருந்து மாறுபட்டுத் தெரிகிறார். இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். கோலி ஆக்ரோஷமான கேப்டன். இந்த உலகக் கோப்பைத் தொடரில் தற்போது வரை சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்” என்றார்.