Election bannerElection banner
Published:Updated:

நடனமாடும் கால்கள்... பர்ஃபெக்சன் தவறாத கண்கள்... பேட்டிங் பாடமெடுத்த ஜோ ரூட்!

நடனமாடும் கால்கள்... பர்ஃபெக்சன் தவறாத கண்கள்... பேட்டிங் பாடமெடுத்த ஜோ ரூட்!
நடனமாடும் கால்கள்... பர்ஃபெக்சன் தவறாத கண்கள்... பேட்டிங் பாடமெடுத்த ஜோ ரூட்!

ஷெல்டன் காட்ரல் ஓவரில் அவர் அடித்த கவர் டிரைவ் அழகு என்றால், ரஸல் ஓவரில் பாயின்ட் திசையில் அடித்த பவுண்டரி பேரழகு! கால்கள் இரண்டும் காற்றில் பறக்க, பேட் face-ஐ ஓப்பன் செய்து அவர் அடித்த அந்த ஷாட்... கிரிக்கெட்டின் ஆகச் சிறந்த அழகுகளுள் ஒன்று!

"இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள். அணியில் ஆஃப் ஸ்பின்னர் வேறு யாரும் இல்லை"

"நான் இருக்கேன்ல. விக்கெட் எடுத்துத் தர்றேன்"

"ஓப்பனிங் பேட்ஸ்மேனுக்கு வேறு காயம்"

"நான் பாத்துக்கறேன்"

5 ஓவர்களில் 2 முக்கிய விக்கெட், ஓப்பனராகக் களமிறங்கி சதம் என ஆல் ரவுண்டர் அவதாரம் எடுத்து வெஸ்ட் இண்டீஸை காலி செய்துள்ளார் ஜோ ரூட். 94 பந்துகளில் 100*. சதம் என்பதைத் தாண்டி, இந்த இரண்டை முக்கால் மணி நேர இன்னிங்ஸில் அவர் கற்றுக்கொடுத்துள்ள பாடம் மிகப் பெரியது. அடுத்த போட்டிக்குத் தயாராவதற்கு முன், வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் பார்க்கவேண்டிய அனாலிசிஸ் வீடியோ அது. பேட்டிங்கின் சின்னச் சின்ன நுணுக்கங்களையும் மிகச் சரியாகச் செய்த அந்த ஆட்டம், உண்மையிலேயே வியக்கத்தக்கது!

ஒருசில பேட்ஸ்மேன்களின் ஷாட்களைப் பார்க்கத்தான் மிகவும் அழகாக இருக்கும். கோலியின் கவர் டிரைவ், பாபர் ஆசமின் ஸ்ட்ரெயிட் டிரைவ், ஷாய் ஹோப் அடிக்கும் பேக் ஃபூட் டிரைவ் என, பேட்டும் கையும் நேர்த்தியோடு கைகொடுக்கும் இடம்தான் ரசிகர்களை பெரும்பாலும் கட்டிப்போடும். ஆனால், ரூட் கொஞ்சம் வேற மாதிரி! அவரது பலம், அவர் பேட்டிங்கின் அழகு எல்லாம் அவரது கால்களில்தான்.

Joe Root
Joe Root

பெரும்பாலான பேட்ஸ்மேன்களுக்கு கால்கள் தரையில் மிகவும் திடமாக ஊன்றியிருக்கும். அப்போதுதான் சரியாக பேலன்ஸ் செய்து ஆடமுடியும். இவர் அப்படியில்லை. அவரது கால்கள் பந்தை அடிக்கும்போதும் சரி, அடித்தபின்னும் சரி நன்றாக வளைந்துகொடுக்கும். ஷாட் அடிக்கும்போது காற்றில் பறக்கும். ஷாட் அடித்தபின் ஃபாலோ அப்பிலும் நகரும். அவ்வளவு flexible. பாயின்ட் திசையில் அவர் ஆடும் ஷாட்டை, அங்கு நிற்கும் ஃபீல்டர் பார்த்தால், நிச்சயம் பந்தைத் தடுக்கத் தோனாது. அப்படியே கண்கொட்டாமல் ரூட்டின் கால்களைப் பார்க்கத் தோன்றும். முன்னும் பின்னும் கொஞ்சம் நடனமாடிவிட்டு காற்றில் பறக்கும் அந்தக் கால்கள் உண்மையிலேயே அவ்வளவு அழகு!

அவரது மிகப்பெரிய பலமும் அந்தக் கால்கள்தான். மற்ற வீரர்கள் புல் ஷாட் ஆடும்போது, பந்து சிக்ஸருக்குப் போகவும், கேட்சாக மாறுவதற்கும் சரிசம வாய்ப்புகள் இருக்கும். ஆனால், இவரது கால்கள் விக்கெட் விழுவதற்கான சாத்தியங்களை குறைத்துவிடுகின்றன. மற்ற பேட்ஸ்மேன்கள் புல் ஷாட் ஆடும்போது, ஒன்று இடது கால் (வலது கை பேட்ஸ்மேன்கள்) முன்னால் பெரிதாக அடிவைத்திருக்கும். இல்லையெனில் வலது கால் நன்றாக பின்னால் வந்திருக்கும். இதிலும் இவர் விதிவிலக்கு. கடைசி நிமிடம் வரை இடது காலை flexible-ஆகப் பயன்படுத்துகிறார். அதை வலது காலுக்கு நேர்கோட்டில் வைத்திராமல், தள்ளி நகர்த்துகிறார். இரண்டு கால்களும் 'Y' வடிவத்தில் இருக்க, பேட் ஸ்விங்குக்கு மட்டுமல்லாமல், இடுப்பையும் அவரால் நன்றாக வளைக்க முடிகிறது. அதனால், பந்தை 'பிளேஸ்' செய்வது அவருக்கு எளிதாகிறது.

Joe Root
Joe Root

நேற்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் அவருக்கு அத்தனை ஷார்ட் பால்கள் வீசியும், கொஞ்சம் கூட அவர் அசரவில்லை. மிகவும் கூலாக அதை எதிர்கொண்டார். ஷார்ட் பால்களை, ஃபைன் லெக் திசையில் அவர் அடிக்கும் நேர்த்தி...எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் அந்த நேர்த்தி வாய்த்திடாது!

புல் ஷாட் ஆடும்போது கால்கள் மட்டுமல்ல, அவரது கையும், கண்ணும் 100 சதவிகித பர்ஃபெக்சனோடு இருந்தது. பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும் மிகமுக்கியப் பாடம் 'Hand - Eye co ordination'. பந்தை அடிக்கும்போது, கண்களும் பேட்டும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கவேண்டும். இல்லையெனில், விக்கெட்டை தாரைவார்க்க நேரிடும். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களெல்லாம் இதில் சொதப்பித்தள்ள, அவர்களுக்கெல்லாம் பாடம் எடுத்தார் இந்த இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்.

Root vs Lewis
Root vs Lewis

மேலே இருக்கும் படத்தைப் பாருங்கள். ரூட் ஒரு பந்தை அடித்ததற்கும், ஈவின் லூயிஸ் அடித்ததற்குமான வித்யாசம். ரூட்டின் கண்கள், பந்து பேட்டில் படும்போது, அதனுடன் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அப்போதுதான், அந்தப் பந்தை நினைத்த இடத்தில் சரியாகக் கணித்து ஆடமுடியும். அப்படி ஒரே நேர்க்கோட்டில் இல்லாதபோது பந்தைத் தவறவிட நேரிடும். லூயிஸ் செய்தது அதுதான். வோக்ஸ் வீசிய பந்தை சரியாகப் பார்க்கவில்லை, Hand - Eye co ordination இல்லை, பேட் பந்தைத் தவற விடுகிறது, பந்து ஸ்டம்பைத் தவறாமல் சாய்க்கிறது... விக்கெட்!

புல் ஷாட் ஆடும்போதும் அப்படித்தான். பேட்ஸ்மேனின் கண்கள், பந்து பேட்டில் படும் 'impact point', இரண்டுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாக இருக்கும்போதுதான் அதிக வீரியத்தோடு புல் ஷாட்டை செயல்படுத்த முடியும். கீழே இருக்கும் படத்தில் அது புரியும். ரூட்டின் கண்களுக்கும், பந்தின் impact point-கும் இருக்கும் இடைவெளி 92 சென்டிமீட்டர். ஆனால், ரஸலுக்கு 58 சென்டிமீட்டர்தான். ஃபூட் மூவ்மென்ட், ஷாட் செலக்சன் என எல்லாமே தவறி அவுட்டானார். ட்ரே ரஸ்!

Root vs Russell
Root vs Russell

இலக்கு என்னவோ 213 எனக் குறைவாகத்தான் தெரியும். ஆனால், மிகப்பெரிய சிக்கலில் இருக்கிறது அந்த அணி. வழகமாக ஆடும் ஓப்பனர் காயமடைந்திருக்கிறார். நான்காவதாக இறங்கும் கேப்டனுக்கும் காயம். ஆறு ரெகுலர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருக்கும் அணியில், அந்த எண்ணிக்கை இப்போது 4 ஆகிவிட்டது. அப்படியிருக்கையில் ஒவ்வொரு பார்ட்னர்ஷிப்பும் மிகப் பொறுப்புடன் விளையாடவேண்டும். ஒவ்வொரு விக்கெட்டும் முக்கியம். வெளியே காட்டிக்கொள்ளாமல், இங்கிலாந்து டிரஸ்ஸிங் ரூமுக்குள் நிலவிக்கொண்டிருந்த நெருக்கடியான சூழலை, தன் அற்புதமான ஆட்டத்தால் சரிசெய்தார் ரூட்!

அணியின் ஸ்கோரை நிலைநிறுத்தியதோடு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் நல்லதொரு அனுபவத்தைக் கொடுத்தது அந்த இன்னிங்ஸ். ஷெல்டன் காட்ரல் ஓவரில் அவர் அடித்த கவர் டிரைவ் அழகு என்றால், ரஸல் ஓவரில் பாயின்ட் திசையில் அடித்த பவுண்டரி பேரழகு! மேலே சொன்னதுபோல், கால்கள் இரண்டும் காற்றில் பறக்க, பேட் face-ஐ ஓப்பன் செய்து அவர் அடித்த அந்த ஷாட்... கிரிக்கெட்டின் ஆகச் சிறந்த அழகுகளுள் ஒன்று!

Joe Root
Joe Root

மிகவும் பொறுப்பான இன்னிங்ஸ். ஒவ்வொன்றும் அளவெடுத்து அடிக்கப்பட்ட நேர்த்தியான ஷாட்கள். எந்த ஷாட்டிலும் ரிஸ்க் இல்லை. ஒரு தேர்ந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆடிய அட்டகாசமான ஒருநாள் இன்னிங்ஸ் இது! மென் இன் மெரூன் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இதுதான். டி-20 போட்டிகளில் வேண்டுமானால் அவர்கள் பெரிய தலைக்கட்டாக இருக்கலாம். ஆனால், லாங் ஃபார்மட் ஆட்டங்களில் நிதானமும் நேர்த்தியும்தான் வெற்றி தேடித்தரும். வெறும் சிக்ஸர்களால் போட்டிகளை வென்றுவிட முடியாது. பவுண்டரிகளுக்கு இடையே எடுக்கும் சிங்கிள்கள், இரண்டு டாட் பால்களுக்குப் பிறகு எடுக்கும் டபுள் என ஒவ்வொன்றும் முக்கியம்.

மிஞ்சிப்போனால் ஒரு அணியின் 20 சதவிகித ரன்களை சிக்ஸர்களால் எடுக்கலாம். ஆனால், மற்ற 80% ஸ்கோர் அந்த 1,2,4 போன்றவற்றால்தான்! அதை எடுக்க கண்களை மூடிக்கொண்டு சுற்ற முடியாது. கிரிக்கெட்டின் அடிப்படைகளைச் சரியாகக் கையாளவேண்டும். வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் ரூட் ஆடிய இன்னிங்ஸில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் இது. சொல்லப்போனால், அவர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகுக்கும் இன்னொரு பாடம் எடுத்திருக்கிறார் ரூட். ஒரு தேர்ந்த டெஸ்ட் பேட்ஸ்மேனால் எந்த ஃபார்மட்டிலும், எந்த பொசிஷனிலும், எந்த சூழ்நிலையிலும் சிறப்பாக ஆட முடியும். எப்படிப்பட்டவர்களையும் வீழ்த்த முடியும்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு