Published:Updated:

குல்பதின் செய்த தவறு... நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி! #AFGvNZ

கார்த்திகா ராஜேந்திரன்

ஏற்கெனவே 4 புள்ளிகளுடனும், அதிக ரன் ரேட்டுடனும் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து, இப்போது 6 புள்ளிகள், 2.163 ரன் ரேட்டுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

#AFGvNZ
#AFGvNZ

2019 உலகக்கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, இந்த முறையும் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றியுடன் உலகக்கோப்பையை தொடங்கிய கிவி, அடுத்த போட்டியில் வங்கதேச அணியின் சுழற்பந்துவீச்சில் தடுமாறி வென்றது. டான்டன் தி கூப்பர் அசோசியேட்ஸ் கவுன்டி மைதானத்தில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அசத்திய ஜேம்ஸ் நீஷம், ஃபெர்குசன், கேன் வில்லியம்சன், நியூசிலாந்தின் ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்தனர். #AFGvNZ

#AFGvNZ
#AFGvNZ

ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது சேஸாத் காயம் காரணமாக விலகியதால், அவருக்குப் பதிலாக நூர் அலி ஜத்ரான் ஓப்பனராகக் களமிறங்கினார். ஹஸ்ரத்துல்லா, அலி ஜத்ரானின் நிதானமான ஆட்டத்தால் 10 ஓவர் முடிவில் 60 ரன்களை எடுத்திருந்த ஆப்கானிஸ்தான், அடுத்த 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. ஹென்றி, போல்ட் வீசிய ஓவர்களில் ரன் சேர்த்த ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் ஜேம்ஸ் நீஷம் வேகத்தை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.

உலகக்கோப்பையில் நியூசிலாந்து பெளலர்களின் சிறந்த பர்ஃபாமன்ஸ்

1983 - ரிச்சர்டு ஹாட்லி (10.1-25-5) vs இலங்கை
2003 - ஷேன் பாண்ட் (10-23-6) vs ஆஸ்திரேலியா
2015 - டிம் சவுதி (9-33-7) vs இங்கிலாந்து
2015 - டிரென்ட் போல்ட் (10-27-5) vs ஆஸ்திரேலியா
2019 - ஜேம்ஸ் நீஷம் (10-31-5) vs ஆப்கானிஸ்தான்

ஹஸ்ரத்துல்லாவைத் தொடர்ந்து ரஹமத் ஷா, குல்பதின், முகமது நபி, நிஜிபுல்லா என ஆப்கானிஸ்தானின் மிடில் ஆர்டரை பதம்பார்த்தார் ஜேம்ஸ் நீஷம். இலங்கைக்கு எதிரான முதல் லீக் போட்டியில் 5 ஓவருக்கு 45 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்காத நீஷம், 10-31-5 உலகக்கோப்பையில் தனது சிறந்த பெளலிங் பர்ஃபாமன்ஸை பதிவு செய்தார்.

ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹஷ்மத்துல்லா ஷஹிதி மட்டும் அரை சதம் கடந்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். புது பேட்ஸ்மேன்களை பெவிலியன் அனுப்பும் பொறுப்பை நீஷம் ஏற்றுக்கொள்ள, களத்தில் நின்று அடிப்பவர்களை குறிவைத்தார் ஃபெர்குசன். முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் ஆல்-அவுட்டானதில் ஃபெர்குசனின் பங்கும் உண்டு. ஒற்றை இலக்க ரன்களை தாண்டிய அலி ஜத்ரான், ஹஷ்மத்துல்லா ஷஹிதி, அஃப்டப் அலாம் ஆகியோர் ஃபெர்குசனின் பந்துவீச்சில் அவுட்டாகினர். இந்த உலகக்கோப்பையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக முழுமையான 50 ஓவர்களை எதிர்கொள்ளாத ஆப்கானிஸ்தான் அணி, 41.1 ஓவரில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது!

#AFGvNZ
#AFGvNZ

குப்டில், முன்ரோ, வில்லியம்சன், டெய்லர் என பலமான பேட்டிங் லைன்-அப் கொண்ட நியூசிலாந்து எளிதாக இலக்கை எட்டும் என்று நினைத்தபோது இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே விக்கெட்! இது போன்ற அற்புதமான தொடக்கத்தை ஆப்கானிஸ்தான் வீரர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்! மார்டின் குப்டில் வெளியேறினார்.

ஆனால், அந்த சிறப்பான தொடக்கம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. ஒன் டவுன் களமிறங்கிய கேன் வில்லியம்சன், ஓப்பனிங் பேட்ஸ்மேன் முன்ரோவுடன் இணைந்து நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 3.15 என்றிருந்தபோதும் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் 5.55 ரன் ரேட்டைத் தக்கவைத்துக் கொண்டனர். டாட் பால்கள் ஆனாலும், ஓவருக்கு ஒரு பவுண்டரி அடித்து ரன் சேர்த்த இந்த இணை 41 ரன்கள் எடுத்தது.

சுழற்பந்துவீச்சுக்கு நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறுவது வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் தெளிவாகத் தெரிந்திருந்தது. இருப்பினும், முகமது நபியின் ஓவர்களை குறைத்து வேகப்பந்துவீச்சாளர்கள் ஹமித் ஹாசன், அஃப்டப் அலாமை பயன்படுத்திய கேப்டன் குல்பதினின் முடிவு நியூசிலாந்துக்கு சாதகமானது.

கிவி பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தடுமாறவேயில்லை, தயங்கவேயில்லை. 9 பவுண்டரிகள் விளாசிய கேப்டன் வில்லியன்சம் அரை சதம் கடந்தார். மறுபுறம் ராஸ் டெய்லர் 48 ரன்கள் சேர்க்க, 32.1 ஓவரில் எளிதாக இலக்கை எட்டியது நியூசிலாந்து.

#AFGvNZ
#AFGvNZ

ஏற்கெனவே 4 புள்ளிகளுடனும், அதிக ரன் ரேட்டுடனும் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து, இப்போது 6 புள்ளிகள், 2.163 ரன் ரேட்டுடன் முதலிடத்தைக் தக்கவைத்துக் கொண்டுள்ளது. இலங்கை, வங்கதேசம் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றிபெற்ற நியூசிலாந்துக்கு இனி வரும் போட்டிகளில்தான் சவால் காத்திருக்கிறது. அடுத்த போட்டியில் இந்தியாவை சந்திக்கும் கிவி அணி, வெற்றிப் பாதையை தக்கவைக்குமா என்பது ஜூன் 13-ம் தேதி தெரிந்துவிடும்.

கார்த்திகா ராஜேந்திரன்